எதிர்பார்த்த தீர்ப்பு !

-நஜீப் பின் கபூர்-

தேர்தல் அறிவிப்பு வந்து அதற்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற இறுதி நேரத்திலும் அப்படியே இருந்தது. மதிலில் நின்ற பூனை அந்தப் பக்கம் பாயுமா இந்தப் பக்கம் பாயுமா என்று யாருக்கும் தெரியாது. அது போன்று தான் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலும்  நின்றிருந்தது. நமது வார இதழ் அச்சேரி அது மக்கள் கைகளில் சேர்கின்ற  நேரம் இப்போது நாட்டில் சர்வாதிகாரமா அல்லது ஜனநாயகமா என்ற முடிவுக்கு பதில் வந்திருக்கும்.

அல்லது இன்னும் ஓர் இரு நாட்களில் முடிவு என்று தீர்ப்புத் தள்ளியும் போய் இருக்கலாம். எப்படியும் நீதி மன்றம் தான் நாட்டில் தொடரப் போவது சர்வாதிகாரமா அல்லது ஜனநாயகமா என்பதனை உறுதி செய்யப் போகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில்  வெள்ளி 10ம் திகதி உயர் நீதி மன்றம் வழங்குகின்ற தீர்ப்பை முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று இராணு அதிகாரி ஒருவர் உயர் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். அதே போன்று நாட்டில் தேர்தல் நாடத்தப்பட வேண்டும் அது மக்களின் அடிப்படை உரிமை என்று பல கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் அதற்கு எதிரான வழக்கையும் தாக்கல் செய்திருக்கின்றன. அரசு இராணுவ அதிகாரியின்  தேர்தல் நடாத்தக் கூடாது என்ற தனிநபர் வழக்கிற்காக பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் முழு நாடும் நாம் பட்ணியில் இருந்தாலும் நமக்குத் தேர்தல் வேண்டும். இது எங்களது அடிப்படை உரிமை என்று நிற்க்கின்றது.

ஆளும் தரப்பினர் விரும்புகின்ற படி  நாட்டில் தேர்தல் ஒன்று நடாத்துவதற்கு இப்போது நேரம் சரியில்லை. நேரம் சரி என்று வரும் போது தேர்தலை நடாத்திக் கொள்ளுங்கள் என்று நீதி மன்றத் தீர்ப்பு வருகின்றது என்று வைத்துக் கொண்டு சற்றுச் சிந்திப்போம். அப்போது அரசுக்கு எதிராக தற்போது இருக்கின்ற மக்கள் கோபம் மேலும் மேலும் அதிகரிக்கும். அதே நேரம் இந்த அரசு தற்போது சர்வதேசத்தை நம்பி இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் மேற்கத்திய ஆதரவாலர் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.! எனவே நாட்டில் ஒரு சர்வாதிகாரி அதிகாரத்தில் இருக்கின்ற போது அவரை ஆதரிக்கின்ற தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் எடுக்க வாப்பில்லை. எனவே மேற்கத்திய நாடுகளின் உதவியை எதிர்பார்க்கின்ற ஒரு அரசு தேர்தலை நடத்தாமல் விடுவதற்கும் இடமில்லை.

ரணிலை ஒரு நாகரீகமான அரியல்வாதியாக நாம் என்றும் பார்த்ததில்லை. எனவே அவர் மேற்கு நாடுகளையும் ஏமாற்றிக் கொண்டு இந்தியா, மற்றும் சீனாவையும் தனது வலையில் போட்டுக் தொடர்ந்தும் ராஜபக்ஸாக்கள் தயவில் பதவியில் ஒட்டுண்ணியாக இருக்க முனைகின்றார்.  நாடு சோமாலியாவை விட கேவலமான நிலைக்குப் போனாலும் கடைசி நிமிடம் வரை அதிகாரத்தில் இருந்து விட்டுப் போவோம் என்ற  மன நிலையில் இருக்கும் ஒரு மனிதன் அவர். எனவே நாடு எந்தக் கேடு கெட்டாலும் அதிகாரத்தை விட்டு வெளியே போவார் என்று நாம் நினைக்கவில்லை.

அதே நேரம் இந்த மேற்கு நாடுகள் தமக்கு விசுவாசமான அரசாங்கங்கள் மக்கள் விருப்பத்துக்கு மாற்றமாக இருந்தாலும் அவர்களை ஆதரித்து சந்தர்ப்பங்களும் உலகில் நிறையவே இருக்கின்றன. தென் அமெரிக்காவில் பல இடங்களில் இது நடந்திருக்கின்றன. எகிப்தில் மக்கள் விருப்பதுடன் தேர்தலில் தெரிவான சகோதரத்துவ அமைப்பில் முர்சிக்கு பதவியில் இருப்பதற்கு மேற்கு நாடுகள் இடம் கொடுக்கவில்லை என்பதும் நமக்கு இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றது. எனவே மக்கள் என்ன கேடுகெட்டாலும் நமது ஆதரவு ரணிலுக்கு என்று அவர்கள் இருந்து விட்டுப் போவதற்கும் ஒரு சின்ன வாய்ப்பும் இதில் இருக்கின்றது.

நிதி அமைச்சு அதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேலும் அச்சகக் கூட்டுத்தாபன அதிகாரிகள் சிலரது பேச்சுக்களும் செயல்களும்  நமக்குப் பல சந்தேகங்களையும் தேற்றுவித்திருக்கின்றன. அவர்களும் ஆளும் தரப்பு எதிர்பார்ப்புக்களுக்கு விசுவாசமாக சில கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலை விட முக்கியமான தேவைகள் எத்தனையோ மக்களுக்கு இருக்கின்றது. அதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தமது விருப்பங்களை நீதியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தீர்க்கமான நேரத்தில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது பொறுப்புக்களில் இருந்து வெளியேருவது, அரச அச்சகக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தேர்தல் தொடர்பான அச்சு வேலைகளைத் தாமதப்படுத்தி வருவதும் நமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தக் கூட்டுத்தாபன தலைவர்-அதிகாரிகள் சிலர் ஆளும் தரப்பு விசுவாசிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம். பணம் பாதளத்தையும் தாண்டிப் பாயும் என்பதுதான் நமது நாட்டுக் கதைகள்-முன்னுதரணங்கள் இருக்கின்றன.

திட்டமிட்ட படி நாட்டில் தேர்தல்தான். அதனைத் தடுக்க பணம் இல்லை என்று ஒரு தனி நபர் போட்டிருக்கின்ற வழக்கை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என முடிவெடுத்து நாட்;டில் மர்ச் 9ல் தேர்தல் என்றுதான் என்று தீர்ப்பு வருகின்றது என்று வைத்துக் கொண்டு இப்போது சற்று யோசிப்போம். நிச்சயமாக ஆளும் தரப்புக்கு வாய்ப்பு மிகவும் குறைவு குறிப்பாக ஐதேக. ரணில் மொட்டு ராஜபக்ஸாக்களுக்கு களம் வாய்ப்பாக இருக்க மாட்டாது.

அதே போன்று பிரதான எதிர்க் கட்சியான சஜித்துக்கும் இது ஒரு வெற்றியைக் கொடுக்க மாட்டாது. அதற்காக திசைகாட்டிதான் கோட்டையைக் கைப்பற்றப் போகின்றது என்றும் நாம் சொல்லப் போவதுமில்லை. இது தொடர்பாக நாம் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் கைவசம் இருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமாக இருந்தால் எதிவரும் வாரங்களில் நாம் அந்த தகவல்களை எமது வாகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் நிலையிலே இருக்கின்றோம் என்பதனையும் இங்கு சொல்லி வைக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐதேக. மற்றும் ராஜபக்ஸாக்கள் தலைமையிலான மொட்டு அணியினரும் இன்னும் தேர்தல் பணிகளைத் துவங்காமல் இருப்பதில் இருந்து தேர்தல் தொடர்பான தீர்ப்பு முன் கூட்டியே கசிந்து தீர்ப்பு தெரிந்து விட்டதோ என்ற ஒரு சந்தகமும் பொது மக்களுக்கு ஏற்பட இடமிருகின்றது. ஆளும் தரப்பு அமைச்சர்களும் ரணில் தரப்பு அரசியல்வாதிகளும் தொடர்ந்து ஊடகங்களில் சொல்லி வருகின்ற கதைகளில் இருந்து இவ்வாறான சந்தேகங்கள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

அடுத்து தேர்தலுக்கு கட்சிகளும் வேட்பாளர்களும் தம்மைத் தயார் செய்து கொள்வதற்கு கால அவகாசம் இது வரை இல்லாமல் போயுள்ளது. தேர்தல் தொடர்பான தீர்க்கமான ஒரு முடிவு இல்லாம் இருப்பது இதற்குக்க காரணம். கடந்து காலங்களில் தமது அதிகார பலத்தை காட்டி அட்டகாசம் செய்த அரசியல்வாதிகளை இன்று களத்தில் காணவில்லை. அவர்கள் பதுங்கி இருக்கின்றார்களா அல்லது தேர்தல் நடக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்களோ தெரியாது.

கதை சொல்லுபவனும்

கதை கேட்போர்களும்!

‘கதையைச் சொல்கின்றவன் ஒரு பைத்தியமாக இருந்தால் அவனைச் சுற்றி நின்று கதையைக் கேட்கும் கூட்டமும் அதனை விடப் பெரும் பைத்தியங்களாகத்தான் இருக்க வேண்டும்.’ இந்த வார்த்தையை நாம் யாரையும் குறிப்பிட்டடும் சொல்லவில்லை. என்றாலும் பைத்தியம் கதை சொல்லம் போது அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றி நீங்கள் என்ன தீர்மானங்களை எடுப்பீர்கள் அதுதான் நமது கேள்வி.

தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலைத் தேர்தல் காலங்களில் மொட்டுக் கட்சியினர் வங்கிக் கொள்ளையன். நாம் பதவிக்கு வருகின்ற போது ஆளைப் பிடித்து சிறைக்குள் தள்ளுவோம் என்று பகிரங்க மேடைகளில் பேசினார்கள் ராஜபக்ஸாக்கள்-மொட்டுக் கட்சியினர். இன்று அந்த ஆளை அதிகாரமிக்க பதவியல் அமர்த்தி அவரது பதவியைப் பாதுகாப்பதுடன் இப்போது தமது அரசாங்கத்தையும் அதே மொட்டுக் கட்சியினர் பாதுகாத்தும் வருகின்றார்கள். அரசியலில் இது என்னவகையான கலாச்சாரம்-நாகரீகம் என்று நமக்குப் புரியவில்லை.

நமது ஜனாதிபதி தனக்கு அதிகாரமிக்கப் பதவியைத் தந்தால் நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை தீர்த்துத் தருவேன். எனக்கு உலக் தலைவர்கள் அனைவரையும் நன்கு தெரியும் என்று சொல்லி இந்தப் பதவிக்கு வந்ததும் தெரிந்ததே. ஆனால் நாம் பல முறை சொன்னது போல மனிதன் ஒரு டொலரைக் கூட இங்கு கொண்டு வரவில்லை. அந்தக் கதை அப்படி இருக்க 2023. சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று ஒரு இசுவை எடுத்து விட்டார் ஜனாதிபதி.

அது இப்போது புஷ;வானமானது. அடுத்து மலையகத் தமிழர் முஸ்லிலிம்கள் பிரச்சனைக்கும் தீர்வு என்றார். அதில் நம்பிகையுடன் இருக்கின்ற தலைவர்களும் இப்போதும் இருக்கின்றார்கள். இதன் இரகசியம் என்னவென்றால் தேர்தல் நடக்காமல் போனால் ரணிலுடன் இனைந்து ஏதாவது பண்ணலாம் என்ற நம்பிக்கைதான் இதன் அடிப்படை எண்ணம். சராசரி பொது மக்களுக்கு இவை எல்லாம் எந்தளவுக்கு புரியும் என்பது நமக்குத் தெரியவில்லை. இதற்குப் பெயர்தான் டீல் அரசியல்.

இப்போது புதிய கதை. நெருக்கடியை தன்னால் 2026 அளவில்தான் தீர்வுகான முடியும் என்று சொல்லி இருக்கின்றார் ரணில். அத்துடன் தான் அதிகாரத்தில் இருந்து வெளியே போகும் முன்னர் தமிழர் பிரச்சினைக்குத் நிச்சயம் தீர்வு என்று வேறு கதை. அவரது கையாட்களே இன்னும் இருபது வருடங்கள் வரை ரணில் பதவியில் இருப்பார் என்று பேசிவருகின்றார். இப்படி கதைகளைச் சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் ஏதும் சொல்ல முடியாது. ஆனால் இந்தக் கதைகளை தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கின்றவர்கள் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. மூத்த தலைவாகள் இன்னும் ஜனாதிபதி ரணிலை சுற்றி நின்று கதை கேட்டுக் கொண்டிருப்பது பெரும் வேடிக்கையாகத்தான் தெரிகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய நாடாளுமன்ற அமர்வைத் துவக்கி வைக்க ஜனாதிபதி ரணில் வருகை தந்த போது ஆளும் தரப்பினர் அவரது பேச்சை கௌரவப்படுத்தினாலும் எதிரணியினர் அவரை கேவலமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால் சம்பந்தன் அணி மு.கா.தலைவர் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட், மலைகத் தலைவர் மனோ ஆகியோர் அதில் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி விருந்திலும் போய் பங்கேற்றி இருந்ததை அங்கு அவதானிக்க முடிந்தது. எனவே இவர்களுக்கும் ரணில் மீது இன்னும் விசுவாசம் இருப்பது புரிகின்றது.

தான் 13 வது திருத்தத்தை கொண்டுவரப் போகின்றேன் என்று இப்போது ரணில் பேசுவதை மக்கள் எவரும் நம்ப வேண்டாம். நாட்டை மீண்டும் இனவாத தீயில் போடுவதற்கு அவரது ஏற்பாடுதான் இது. ஒரு நாளும் அவர் இதனைச் செய்ய மாட்டார். தனது இருப்பதை தொடர்வதற்காக அவர் மேற்கொள்கின்ற சதி இது. இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணிலின் 13 தொடர்பாக ஜேவிபி தலைவர் அணுர ஊடகங்களுக்குக் கருத்துச் சொல்லி இருக்கின்றார். மொட்டுக் கட்சி பதவிக்கு வந்ததே 13 தூக்கி எறிவோம் என்ற கோசத்துடன்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 "பட்டம்" சட்டவிரோதமா..? பாயத் தயாராகிறது சட்டம்!

Next Story

ரணில் மீது ஏன் இந்த விசுவாசம்!