அப்பா  கையை பிடித்தபடி உயிரிழந்த சிறுமி.

நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கஹ்ராமன்மராஸ் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் காஜியான்தெப், ஹடாய், கஹ்ராமன்மராஸ், தியர்பாகிர் உள்ளிட்ட 10 மாகாணங்களிலும், அண்டை நாடான சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள அலெப்போ மற்றும் ஹமா நகரங்களிலும் சுமார் 330 கிமீ சுற்றளவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல கட்டிடங்கள் மண்ணில் புதைந்து மக்கள் பலரும் பலியாகினர்.

துருக்கி, சிரியாவில் இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து, கொத்தாக சடலங்கள் மீட்கப்படுகின்றன. ஒருசிலர் உயிரோடும் மீட்கப்பட்டு வருகின்றனர். துருக்கியில் 24,400 பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு கடுங்குளிரிலும் நடந்த மீட்புப் பணியில், கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களை விட கொத்து கொத்தாக சடலங்களே கிடைத்தன.

துருக்கியில் மட்டுமே 6,000 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹடாய் போன்ற மாகாணங்களில் இடிபாடுகளில் சிக்கிய குடும்பத்தினரின் கூக்குரல் கேட்ட போதிலும் கனரக மீட்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்களை மீட்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, துருக்கியில் 6ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் அதிபர் எர்டோகன் கூறி உள்ளார். இதுவரை துருக்கியில் 10 மாகாணங்களில் 7,800 பேர் மீட்கப்பட்டிருப்பதாக பேரிடர் மீட்பு அதிகாரி டாடர் தெரிவித்துள்ளார்.

ஹடாய் மற்றும் காஜியன்தெப் மாகாணங்களில் இரவு முழுக்க மக்கள் விளையாட்டு கூடங்கள், ஷாப்பிங் மால்கள், மசூதிகளில் தங்கினர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மருத்துவ குழுவினர் இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்குள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

சிரியாவில் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரால் அகதிகளாக புலம்பெயர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல வீடுகள் இடிந்து மக்கள் பலர் பலியாகி இருப்பதாகவும், உரிய மீட்புப்பணி இல்லாமல் பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து மீட்புப்படையினர் மருத்துவ குழுவினருடன் துருக்கி நாட்டிற்கு விரைந்துள்ளனர். இதனிடையே, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கி, சிரியாவில் 2.3 கோடி பேர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும், 50 லட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான உடனடி உதவிகள் அவசியம் என்றும் அதற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கப்பாற்றுங்கள் என கூக்குரலிடுகின்றனர்.

இடிபாடுகளுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு கூக்குரல்கள் கேட்ட போதிலும், எதுவும் செய்ய முடியாமல், காப்பாற்ற முடியாமல் தவிக்கும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன. ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டு வருகின்றனர். அதே உற்சாகத்தோடு மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.

துருக்கியில் நிலநடுக்க பாதிப்பு குறித்த புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 15 வயது சிறுமி, வெளியில் அமர்ந்திருக்கும் தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி, காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவு என உயிர்தப்பிய மக்கள் கண்ணீர் விடுகின்றனர். சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளதாகவும், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 900க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரு பகுதிகளிலும் சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகி உள்ளனர்.வீடுகளையும் உறவுகளையும் ஒருநாள் இரவில் இழந்து விட்டதாகவும் கண்ணீருடன் பேட்டி அளித்து வருகின்றனர்.

Previous Story

மஹிந்தவின் மகன் ரோஹித நாயின் கழுத்தில் தங்கம், ஹோட்டலுக்கு 100 கோடி ரூபா செலவு

Next Story

“நான் மீளவில்லை” - சல்மான் ருஷ்டி