உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மி?

-நஜீப் பின் கபூர்-

மரத்தில் கட்டப்பாட்ட மாடு மேய்வது போல ஒரே விடயத்தைச் சுற்றிச் சுற்றியே நாம் கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செய்திகளை  சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்த வாரமும் நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதே தேர்தல் தொடர்பான புதிய தகவல்களைத்தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்த நாளில் இருந்து இந்தத் தேர்தல் கதை ஒரு கானல் என்பதனை நாம் அடித்துச் சொல்லி வந்திருக்கின்றோம். கடந்த வாரமும் தேர்தலுக்கு ஆப்பு வைப்பதற்கான இறுதித் துரும்பை அதிகாரத்தில் இருப்பவர்கள் கையில் எடுத்து விட்டார்கள் என்றும் சொல்லி இருந்தோம். நமது அந்தக் கதைகளும் தற்போது உறுதியாகிக் கொண்டு வருகின்றன.

இந்தவாரம் தேர்தல் தொடர்பாக எமக்கு இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன அவற்றையும் நாம் எமது வசகர்களுடன் வழக்கம் போல பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். தேர்தலை தமக்குத் தொடர்பில்லாத வகையில் தள்ளிப் போடவும் அதற்கான காரணங்களை நியாயப்படுத்தவும் ஆட்சியாளர்கள் எடுத்து வந்த முயற்சிகளைக் நாம் கடந்த வாரம் பட்டியல் படுத்தி இருந்தோம். அந்தத் தொடரில் புதிய காய் நகர்த்தல்களை இப்போது பார்ப்போம். அவையும் அதிகாரிகளை வைத்து மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடுகளாக இருந்து வருகின்றன.

தேர்தலுக்கு பணம் பெற்றுக் கொள்வது தொடர்பாக  தேர்தல் ஆணையாளர் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு ஒரு கடிதத்தை கடந்த வாரம்  அனுப்பி வைத்திருந்தார். இந்த கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் வரை அதற்கான பதில்லை அவர் நேரடிபயாக வழங்கி இருக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களுடனான ஒரு சந்திப்பில் அத்தியவசியத் தேவைகளுக்குத்தான் தற்போது முன்னுரிமை வழங்க வேண்டி இருக்கின்றது என்ற ஒரு செய்தியைச் சொல்லி இருக்கின்றார் ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ. அவரது இந்தக் கதையில் இருந்து அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மத்தியில் பிளவு குழப்பம் என்ற செய்திகளுக்கு அப்பால் அவர்களுக்கு அச்சுருத்தல் விடுக்கப்படுவது தொடர்பான செய்திகளும் கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய செய்தியாகப் பேசப்பட்டு வந்தது. இந்த அச்சுருத்தல் விடுத்தவர்களைக் கண்டு பிடிக்க வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி ரணிலின் தொலைபேசித் தொடர்புகளைத்தான் சரிபார்க்க வேண்டும் என்று ஜேவிபி.தலைவர் அணுரகுமார ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த வாரம் தேர்தல் அணைக்குழு உறுப்பினர்கள் தமது பதவிகளை விட்டு ஓட்டம் எடுத்திருக்கின்றார்கள்-அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நாம் முன்பு சொன்ன அச்சுருத்தல் பற்றிய கதையும் இந்த நாடகத்தில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். அவர்களும் தமது பதவிகளை விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியும். துனிச்சலானவரும் சிறந்த நிருவாகியாகவும் இனம் காணப்பட்ட பீ.எஸ்.எம். சார்ள்ஸ்  ஆணைக்குழு உறுப்பினர் பதவில் இருந்த விலகி இருக்கின்றார். எனவே தேர்தல் ஆணைக் குழுவில் திட்டமிட்டு தற்போது குழறுபடிகள் எற்படுத்தப்பட்டு வருகின்றது என்றுதான் நாம் கருதுகின்றோம்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவும் பதவி விலக இருக்கின்றார் என்ற ஒரு செய்தியும் கட்டவிழ்த்து விடப்பட்டடிருக்கின்றது. ஆனால் அவர் இது முற்றிலும் தவறான ஒரு செய்தி அதனைப் பற்றிப் பேசுவது கூட நேரத்தை வீணடிக்கின்ற ஒரு வேலை. அப்படியான ஒரு எண்ணம் தன்னிடம் இல்லை என்று அவர் பகிரங்கமாக சொல்லி வருகின்றார். இப்படித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கின்ற ஒரு நேரத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்பில்லாமல் பதவி விலகி மக்களின் ஜனநாயக உரிமைக்கு அச்சுறுத்தல் விடுப்பது தார்மீகமற்ற ஒரு செயல் என்று நாம் கருதுகின்றோம். கட்சி செயலாளர்களுடன் அண்மையில் நடந்த ஒரு சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவரும் மற்றுமொரு உறுப்பினரும் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.

அடுத்த மூன்று பேரும் அதில் சூம் தொழிநுட்பம் ஊடாக பங்கு கொண்டிருந்தார்கள். ஏனையோர் பற்றி ஆணைக்குழு தலைவரிடம் கேட்ட போது தற்போது எழுந்திருக்கின்ற நிலமையால்தான் அவர்கள் நேரடி சந்திப்புக்களைத் தவிர்த்து வருகின்றார்கள் என்று மறைமுகமாக அங்கு சொல்லி இருந்தார்கள். இதனை நாம் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் அச்சுருத்தல் காரணமாகத் தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் பதவி விலகா விட்டால் குடும்ப உறுப்பினர்கள் நெருக்கடிக்கு இலக்காவர்கள் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இது பற்றி அவர்கள் கொழும்பு-மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை கொடுத்திருந்தாலும் இன்றுவரை அந்த அச்சுருத்தல் தொலைபேசி அழைப்புக்கள் கொடுத்தவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் பற்றி நாட்டு மக்களுக்கு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. இது மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் திஸ்ஸ அத்தநாயக்க செய்த வேலைபோல இருக்கின்றது.

இப்படி ஒவ்வொருவரும் பதவியில் இருந்து வெளியேறும் போது எப்படித் தேர்தலை நடத்துவது.? அத்துடன் அந்த இடத்துக்குப் புதியவர்களை நியமனம் செய்கின்ற போது ஆளும் தரப்புக்கு கூஜா தூக்கக் கூடியவர்களே அங்கு பதவியில் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அப்படிப் பார்க்கின்ற போது இந்த தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானது என்பதனை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முடியும்.? நிதி நிலையைக் காரணம் சொல்லி தேர்தலைத் தள்ளிப் போட எடுத்த முயற்சிகள் நியாயமற்றது-யதார்த்தமற்றது என்று நிருவப்பட்டிக்கின்ற போது இப்படியான புதிய வகையான குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போடும் நாடகம்தான் தற்போது அரங்கேரி வருகின்றது.

நாம் தொடர்ச்சியாக சொல்லி வருவது போல மொட்டுக் கட்சியினர் தேர்தலுக்கு முனைப்புடன் ஆர்வமாக இருப்பது போலவும் அங்கு ஒட்டுன்னிகளாக இருப்பவர்களும் ரணிலின் கையாட்களும் தேர்தலுக்கு வாய்ப்புக்கள் இல்லை, இப்படியான ஒரு நெருக்கடியான நேரத்தில் எப்படித் தேர்தலுக்குப் பணம் செலவு செய்வது என்ற கதையைத் தொடர்ந்தும் சந்தைப்படுத்தி வருகின்றார்கள். அந்த முயறச்சிகள் இந்த வாரமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எதிரணியினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வமாக களத்தில் செயலாற்றுக்கின்ற அதே நேரம் ஆளும் தரப்புக்கு விசுவாசமானவர்கள் எப்படி இந்தத் தேர்தலை குழப்பியடிக்க முடியும் என்ற தோரணையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அனைவரும் தற்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த செயல்பாடுகளைப் பார்க்கின்ற போது இந்த உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதனை தங்களுக்குச் சம்பந்தமில்லாத வகையில் அதிகாரிகளின் தலையில் கட்டி வைப்பதற்கான கண்டு பிடிப்புக்களுக்கான மார்க்கங்களைத் தான் ரணில்-ராஜபக்ஸாக்கள் தேடும்  முயற்சிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தால் படைப் பலத்தை வைத்து அடக்குவதற்கும், அதற்கு சர்வதேசத்தில் இருந்து வருகின்ற அழுத்தங்களை மென்மைப்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதும்தான் இப்போது ஆட்சியாளர்களின் சிந்தனையாக இருக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை நோக்குகின்ற போது இப்போது அரசின் மேல் மட்டத் தலைமைகளுக்கும் அவர்களுக்கும் நெருக்கமான இரகசிய உறவுகள் இருப்பது போன்றும் எண்ணத் தோன்றுகின்றது. தேர்தல் அறிவிப்புக் கூட கடைசி நேரத்தில்தான் வெளியே வந்தது. இப்போது தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்தைகள் கூட இந்த அதிகார வார்க்கத்தை திருப்பதிப்படுத்துகின்ற நோக்கில் நர்கர்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களே தற்போது ஆட்சியாளர்களின் தேர்தலைக் குழப்புகின்ற வேலையை கூட்டாகவும் பகிரங்கமாகவும் செய்யத் துவங்கி விட்டனர் போலும். எனவேதான் தற்போது இந்தத் தேர்தலை நடப்பதற்கான வாய்ப்பு அரவே கிடையாது என்று நாம் முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது. ஆனால் சட்டவல்லுனர்கள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் அனைவரும் விலகினாலும் அந்த இடத்துக்குப் புதியவர்கள் தெரிவாகி தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். இதனைத்தான் சட்டம் சொல்லி இருக்கின்றது என்று வாதாடுகின்றார்கள். ஆனால் காட்டுச் சட்டம் அமுலாகின்ற ஒரு நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்க இடமிருக்கின்றது என்பதுதான் வரலாறாக இருந்து வருகின்றது.

ஜனாதிபதி ரணில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடத்தில் தான் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று சொல்லி வருவதாகவும் ஒரு தகவல் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது பற்றிய உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்ள நம்மிடத்தில் போதியளவு ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதால்  மேலதிகமான தகவல்களை நாம் இங்கு சொல்ல விரும்பவில்லை. ரணிலுக்கு விசுவாசமானவர்கள் தங்களது வேட்பாளர்களிடத்தில் தேர்தலுக்கு அவசரப்பட்டு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனைகளைத் தெரிவித்துக் வருவதும் அறியப்பட்டிருக்கின்றது.

பொதுவாக சில நாடுகளில் தேர்தல் நடக்கின்ற போது அதனை ஜனநாயக விரோத சக்திகள் குழப்பியடிக்கின்ற வேலைகளைப் பார்ப்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் நேரடியாகவும் கையாட்களை வைத்தும் இந்த தேர்தலைக் குழப்புக்கின்ற வேலைகளைப் பார்த்து வருகின்றனர். ஆளும் தரப்புக்கு விசுவாசமானவர்கள் குறிப்பாக ஜனாதிபதி ரணிலின் ஆட்கள் மக்கள் தேர்தலைக் கோரவில்லை. வழக்கமாக நாட்டைக் குழப்புகின்றவர்கள்தான் தேர்தல் வேண்டும் என்று வாய்கிழியக் கத்திக் கொண்டு வருகின்றார்கள் என்று கூறிவருகின்றார்கள்.

இந்தக் கதை தொடர்பாக செல்வாக்கு மிக்க ஊடகவியலாளரான பாரத தென்னகோன் என்பவர் மேற் கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் 95 சதவீதிமானவர்கள் தேர்தல் வேண்டும் என்று தமது விருப்பை அந்தக் கணிப்பில் சொல்லி இருக்கின்றார்கள். நாங்களும் எமது வாசகர்களிடம் கேட்பது பொருளாதார நெருக்கடிகள் நாட்டில் இருந்தாலும் உங்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் வழங்கிக் கொள்கின்ற போது உண்மைகளைக் உணர்ந்து கொள்ள முடியும். அப்போது யார் யாரை ஏமாற்ற முனைகின்றார்கள் என்பதனை ஒவ்வொருவருக்கும் கண்டு கொள்ள முடியும். இது வரை பதினைந்து தடவைகளுக்கு மேல் தேர்தலைத் தள்ளிப் போடடும் செயல்பாடுகள் நடந்திருப்பதாகத் தெரிகின்றது.

அப்படியாக இருந்தால் என்ன காரணங்களினால் தேர்தலை ஒத்திப்போடும் முயற்சிகளைத் தொடர முடியும் என்று இப்போது பார்ப்போம்.

1.குறிப்பாக காட்டுச் சட்ங்களை அமுல்படுத்தி தேர்தலை தவிர்ப்பது.

2.சில அதிகாரிகளைப் பலிக்கடாக்களாக்கி தேர்தலுக்கு ஆப்பு வைப்பது.

3.தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்  போன்ற ஏதேனும் அசம்பாவிதங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் இடமிருக்கின்றது.

4.அதிகாரிகளின் பேரில் போலித் தகவல்களை பரப்பி தொடர்ந்தும் தேர்தல் தொடர்பாக ஒரு நம்பகத் தனமில்லாத நிலையை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவது.

5.ஆளும் தரப்புத் தொடர்பான உள்நாட்டு வெளிநாட்டு கருத்துக் கணிப்புக்கள் மிகவும் பாதகமாக இருந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே சமூக ஊடகங்கள் மீது வன்முறைகளுக்கும் இடமிருக்கின்றன.

6.கடந்த காலங்களில் ஜே.ஆர். செய்தது போல எதிர்க் கட்சி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளைப் போட்டு அதன் மூலம் வன்முறைகளை ஏற்படுத்தியும் இந்தத் தேர்தலைக் குழப்ப இடமிருக்கின்றன.

7.கடந்த காலங்களைப் போல ஆளும் தரப்புக்கு ஆதரவாக மக்களை வீதியில் இறக்கி வன்முறைகளை உண்டு பண்ணும் சாத்தியமும் இல்லாத இடத்தில் வன்முறைக் குழுக்களை உருவாக்கி இந்தத் தேர்தலைக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தவும் இடமிருக்கின்றது.

8.ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரம் நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கினற பெரும்பான்மை என்பன கூட தேர்தலுக்கு எதிரான ஆயுதங்களாக பிரயோகிக்க இன்னும் இடமிருக்கின்றது.

9.ஊடகங்களை பாவித்து கடந்த காலங்களைப் போல (மலட்டுக் கொத்து-ஆடை,டாக்டர் சாபி கதைகள்) வாந்திகளைப் பரப்பி ஒரு வன்முறை மூலம் தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்தல்.

நீதி சட்டம் என்பவற்றில் நம்பகத் தன்மையில்லாத ஒரு நாட்டில் நாம் மேற்சொன்ன காரணங்களுக்கு அப்பாலும் ஏதேனும் தீர்மானங்களை எடுத்து அறிவுப்புச் செய்யப்பட்டிருக்கின்ற தேர்தலை தவிர்ப்பதற்கும் ஏதாவது புதிய மார்க்கங்களை இவர்கள் அறிமுகம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் கிடையாது.

எனவேதான் எமது கணிப்புக்களின் படி தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகத்தான் தெரிகின்றன. அப்போது மக்கள் பட்டினிக்கு எதிராக மட்டுமல்ல தமது அடிப்படை உரிமைகளைக் கேட்டும் இந்த நெருக்கடியான நேரத்தில் வீதியில் இறங்க வேண்டிய நிலை இருக்கின்றது.

நன்றி: 29.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலட்சம் வேட்பாளர் படை!

Next Story

 படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னன் ஹுமாயுன் கதை