வன்முறையுடன் துவங்குகின்றது தேர்தல் நகர்வு!

நஜீப் பின் கபூர்

ஒரு வகையில் நாம் அதிர்ஸ்ட சாலிகள் அல்லது மிகப் பெரிய பாவக்காரர்கள் என்று நமக்கு சொல்லத் தோன்றுகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் உலகில் எங்கும் நடக்காத பல காட்சிகளை நாம் இந்த நாட்டில் பார்த்துக் கொண்டு வருகின்றோம். அந்தவகையில் நாம் அதிர்ஸ்டக்காரர்கள். அதோ நேரம் அந்த நிகழ்வுகள்  கீழ்த்தரமானதாகவும் வன்முறை மிக்கதாகவும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக சட்டம் நீதி போன்ற விடயங்களில் கட்டுக் கோப்பில்லாத நிலை. ஆபிரிக்கா பழங்குடி கோத்திரங்களுக்கு இடையில் நடக்கின்ற வன்முறைகள்  போன்ற சில சம்பவங்களை நாம் இன்று இங்கு பார்க்கின்றோம்-அனுபவிக்கின்றோம். அதனால் நாம் பாவப்பட்ட கூட்டமாகவும் இருக்கின்றோம்.

இனப்பிரச்சினைக்கு சுதந்திரத்துக்கு முன்னர் (2023.02.04) தீர்வு என்ற செய்தியை கேட்ட கனமே இது ஒரு நாடாகம் கேளிக்கூத்து. இதனை நம்பி எவரும் ஏமாற வேண்டாம் என்று நாம் அடித்துக் கூறி இருந்தோம். மூத்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களும் சட்டவல்லுனர்கள் என்று தமிழ் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பவர்களும் ரணிலை நம்பி துள்ளிக் கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போனது மட்டுமல்லாது மக்கள் விரோத 2023 வரவு செலவுத் திட்டத்துக்கும் அரசுக்கு மறைமுக ஆதரவை வழங்கி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதற்கு இராஜதந்திரம் என்றும் வேறு விளக்கமும் கொடுத்தார்கள் இந்த ஆசாமிகள்.

சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு அரசியலிலும் செல்லாக்காசாக இருக்கின்ற ஒரு மனிதனுடன் பேச்சுவார்த்தைக்குப் போய் இவர்கள் எதையுமே சாதிக்க மாட்டார்கள் என்பதனை நாம் தொடர்ச்சியாக வழியுறுத்தியும் வந்திருந்தோம்.இப்போது ரணில் தரப்பு சொன்னதைத்தான் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்று  கதைக்கின்றார்கள் அவர்கள். என்னதான் கதைத்தாலும் பேசினாலும் இல்லை தமிழர்களுக்கு தனி நாட்டை பிரித்துத் தருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் சொன்னாலும் அது எதுவுமே செல்லாக்காசு என்பதை இவர்களுக்கு புரியாமல் இருப்பது நமக்குப் புரியாத புதிராக இருக்கின்றது.

ரணிலும் இவர்களும் திட்டம் போட்டுக் கொண்டுதான் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் இந்தக் கதைகளை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. இதில் நமக்குள்ள வேதனையான விடயம் என்னவென்றால் தமிழ் மக்கள் தமது மீட்பாளர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பெரும் ஏமாளிகள் அல்லது நாடக்காரர்கள் என்பது தமிழ் மக்களுக்கும் புரியாமலா இருக்கின்றது.? மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்கின்றோம் ரணிலுடன் நடாத்துகின்ற இந்த சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு என்பது வரலாற்றில் மற்றுமொரு அரசியல் மோசடி வர்த்தகம். சுதந்திரத்தக்கு முன்னர் தீர்வுக் கதை பற்றி நாம் துவக்கதில்லிருந்து சொல்லி வந்தது போல அது அச்சொட்டாக நிறைவடைந்திருக்கின்றது என்றுதான் தெரிகின்றது.

அதே போன்று இப்போது தேர்தல் பற்றி நாம் சொல்லிக் கொண்டு வந்த விடயங்களைத்தான் தற்போது அரசியல் அரங்கில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் நமது கணிப்புப்படி அரசு குறிப்பாக ரணில்-ராஜபக்ஸாக்கள் இந்தத் தேர்தலை  வைப்பதற்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். நாம் கடந்த வாரம் சொன்னது போல தேர்தல் அறிவிப்பு, வேட்பு மனு ஏற்றுக் கொள்வது, தேர்தல் நடாத்துவது. என்ற விடயங்களுக்கு மத்தியில்  தேர்தல் நாளில் கூட தேர்தலை குழப்புக்கின்ற வேலைகள் இறுதி வரை நடக்க இடமிருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம்.

வழக்கமாக தேர்தல் பரப்புரைகள் கட்சிக் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடக்கின்ற போதுதான் அனேகமான தேர்தல் வன்முறைகள் நடப்பது வழக்கம். ஆனால் இந்தத் தேர்தலில் ஆளும் தரப்பு குறிப்பாக ஜனாதிபதி ரணில்-ராஜபக்ஸாக்கள் மற்றும் மொட்டுத் தரப்பினர் இந்தத் தேர்தலைக் குழப்பியடிக்கின்ற வேலைகளைத்தான் தற்போது செய்து கொண்டு வருகின்றார்கள். 1948 சுதந்திரத்துக்குப் பின்னர் இப்படியான தேர்தல் வன்முறை நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையாக இருக்கும். இதற்கு முன்னர் ஆளும் தரப்பினர் இந்தத் தேர்தலைத் தள்ளிப் போட எடுத்த நடவடிக்கைகள் பற்றி பார்ப்போம் அதனை விபரிக்காமல்  சுருக்கமாக நாம் இங்கு பட்டியலிட விரும்புகின்றோம்.

  1. இது என்ன தேர்தல் நடாத்துகின்ற நேரமா?
  2. இந்தத் தேர்தலை நடாத்தினால் பொருளாதாரமே சீரழிந்து போகும் என்ற வஜிர அபேவர்தன கதை. (ஐதேக)
  3. மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுகின்றார்கள். தேர்தல் பணத்தை அரிசி வாங்கத் தாருங்கள் என்று அமைச்சர் அமரவீர கேட்க்கின்றார். (முன்னாள்-சு.கட்சி)
  4. அரச ஊழியர்களுக்கு சம்பளம் ஓய்வூதியம் என்பன வழங்க காசு இல்லை எனவே தேர்தலுக்கு பணத்தை செலவு செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம் இது வசந்த பண்டாரகதை. (முன்னாள்-சு.கட்சி)
  5. இப்படியான ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கும் போது தேர்தல் நடாந்தால் அது உலக சாதனை. இது அமைச்சர் சியம்பலாபிட்டடிய கதை (முன்னாள்-சு.கட்சி)
  6. அமைச்சர் பந்துல குனவர்தன சர்வதேச நிதி நிருவனங்கள் இதனை பின்னர் இலங்கை அரசாங்கம் பணத்தை அச்சடிக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டது என்று ஒரு கதையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார். இது எதற்காக சொல்லப்படும் கதை என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
  7. மத்திய வங்கி அதிகாரிகள் தேர்தலுக்குப் பணத்தை தரமுடியாது என்று சொல்கின்றார்கள். அதிகாரி பெயரில்லாது வரும் செய்திகள்!
  8. தேர்தல் நடாத்துகின்ற அதிகாரிகள் மத்தியில் பிளவு-மோதல் என்ற கதை. (அவர்களோ அப்படி ஒரு கதையை நாமும் பத்திரிகையில்தான் பார்க்கின்றோம். எமது முடிவுகள் ஏகமனதானது என்று அறிக்கை கொடுக்கின்றார்கள்.

நாம் மேற்சொன்ன அனைத்துக் கதைகளையும் அதனைச் சொன்னவர்களையும் ஒருமுறை பாருங்கள் அவர்கள் அனைவரும் ஒரு ஜீனல் மொட்டுக் கட்சியினரோ ராஜபக்ஸ விசுவாசிகளோ அல்ல. அவர்கள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றார்கள். அல்லது தேர்தலுக்கு ஆர்வமாக இருப்பவர்கள் போலத் தம்மைக் காட்டிக் கொள்கின்றார்கள்.  மொட்டுக்காரர்கள் ஒட்டுன்னிகளை வைத்துத்தான் தேர்தலுக்கு எதிராக கதைகளைச் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மொட்டுக் கட்சியும் ராஜபக்ஸாக்களும் தேர்தலுக்கு மிகுந்த ஆர்வத்தில் இருப்பது போல களத்தில் நடந்து கொள்கின்றார்கள்- நாடகமாடுகின்றார்கள். அவர்கள் கட்டுப் பணம் செலுத்துகின்ற முதல் நாளில் அந்தப் பணியை களுத்தறையில் செய்து தமது தேர்தலை பற்றி ஆர்வத்தை விளம்பரப்படுத்தியும் இருக்கின்றார்கள். தேர்தலுக்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பயப்படாது. அதில் நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொள்வோம் என்று வேறு கதை விடுகின்றார்கள்.

அதே நேரம் இப்போது ஜனாதிபதி கதிரையில் ராஜபக்ஸாக்கள் எவராவது இருந்திருந்தால் கதை இப்படிப் போய் இருக்காது. அதிகாரத்தில் அவர்கள் தமது கையாலாக ரணிலை வைத்திருப்பதால் அவர் பெயரில்தான் இந்த கணக்குகள் பதிவாகும் என்பதால் இன்று உச்ச இடத்திலிருந்தே தேர்தல் வன்முறையை நவீன முறையில் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். ராஜபக்ஸாக்கள் மீது சர்வதேசத்தின் அவதானம் தொடர்ந்தும் இருப்பதால் அவர்கள் பதவியில் இருந்திருந்தால் நேரடியாக இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அதனால்தான் ரணிலை வைத்து தேர்தல் வன்முறைகள் உயர் மட்டத்தில் இருந்தே நடந்து வருகின்றது. இது முற்றிலும் ராஜபக்ஸாக்களில் திரைக்கதை வசனம்.

தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து தேர்தலைத் தள்ளிப் போட ஜனாதிபதி ரணில் முயற்சிகளை மேற்கொண்டார். இது பலத்த கண்டனத்துக்கு இலக்கானது. தேர்தலை அறிவிப்பு வெளிவந்திருக்கின்ற நேரத்தில் ஒரு ஜனாதிபதி இப்படி நடந்து கொண்டது  வரலாற்றில் முதல் முறை. அதன் பின்னர் அமைச்சரவைத் தீர்மானம் என்று கூறி உள்ளூராட்சி அமைச்சரின் செயலாளர் அதிரடியான ஒரு சுற்று நிரூபத்தை வெளியிட்டு கட்டுப்பணம் செலுத்துவதை மாட்ட தெரிவு அத்தாச்சி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இது அமைச்சரவைத் தீர்மானம் என்று ஒரு சுற்று நிருபத்தை வெளியிட்டார்கள். இப்படி ஒரு சுற்றுநிரூபம் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும் புதிய வரலாற்றுப் பதிவாகும்.

இதுவும் பொது மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புக்கும் சர்ச்சைக்கும் உள்ளானதால் அந்த சுற்றுநிரூபத்தை செயலாளர் திரும்பப் பெற்றுக் கொண்டார். இது போன்ற ஒரு நிகழ்வு இந்தக் காலத்தில் ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் மத்தியிலும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து அரசு தற்போது அதிகாரிகளை வைத்து இந்தத் தேர்தலைக் குழப்பியடிக்கின்ற நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. இவை அனைத்தும் அரச வன்முறையே அன்றி  வேறு என்ன? இது பற்றி நாம் கடந்த வாரமும்  சொல்லி இருந்தோம். இது போன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சர்வதேச சமூகம் தற்போது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

தேர்தலுக்கு பணம் இல்லை என்ற கதை யதார்த்தமானதா!

தேர்தல் நடாத்துவதற்கு காசு இல்லை என்ற கதையை சற்றுப் பாhப்போம். 2023 வரவு செலவுத் திட்டத்தில் 1000 கோடி அதாவது பத்து பில்லியன் ரூபாய்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 2023 மொத்த செலவுகள் 7900 பில்லியன்கள். அப்படியானால் ஒரு மாத செலவுக்கு என்ன கணக்கு என்று (7900 – 12 =658) நாம் பிரித்துப் பார்த்தால் 658 பில்லியன்கள் என்று வரும். எனவே பத்து பில்லியன் என்பது  ஒரு பெரிய தொகையே அல்ல. ரணில் சகாவின் பிணைமுறிக் கொள்ளை மற்றும் கோதாவின் சீனி மோசடி என்பனவற்றுக்கு மட்டும் இதனை விட பல மடங்கு பணம் கையாளப்பட்டிருக்கின்றது. எனவே பணம் இல்லை என்ற கதை தேர்தலை நடத்தாமல் விடுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற கட்டுக் கதைகள் என்பது சிறுபிள்ளைக்குக் கூடப்புரியும்.

இது போன்று நொண்டிச் சாட்டுக்களை சொல்லி அரசு தேர்தலைத் தள்ளிப் போட முயன்றால் அது நியாமற்றது என்பதும் தெளிவானது. தேர்தல் காலத்தை இதன் பின்னர் நீடிப்புச் செய்யக் கூடாது என்று ஏற்கெனவே நீதி மன்றத் தீர்ப்பும் இருக்கின்றது. அமைச்சரவைத் தீர்மானத்தால் தேர்தலை தடுக்க முடியாது. அப்படி தேர்தலைத் தள்ளிப் போடுவதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்குப் போக வேண்டி இருக்கும். இவை எதுவுமே இன்று தேர்தலை தள்ளிப் போட அரசுக்கு வாய்ப்பாக இல்லை. இதனால்தான் அரசு அதிகாரிகளைப் பாவித்து-பலிகொடுத்து வன்முறையால் இந்தத் தேர்தலைத் தள்ளிப் போட முனைகின்றது. அந்த முயற்சிகள் கடைசி நிமிடம் வரை தொடரும் என்று நாமும் நம்புகின்றோம்.

ஐ.நா அதிகாரிகள் இலங்கையின் நிதி நிலமை 2023ல் கடந்த காலங்களைவிட மிக மோசமாக இருக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள். ஐதேக. செயலாளர் ரங்கே பண்டார சொல்வது போல மேலும் ஆறு மாதங்களுக்குத் தேர்தலைத் தள்ளிப்போட வேண்டும் என்ற கதை பொருத்தம் இல்லாதது. நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தது போல, பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் கூட இதனை விட மோசமான பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கும். அப்படியாக இருந்தால் அந்தத் தேர்தல்களையும் இப்போது அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் ஒரு போதும் நடத்த மாட்டார்கள் என்பதை உறுதியாக நமக்குச் சொல்ல முடியும்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ஜே.ஆர். செய்த இதே காரியத்தைதான் அவரது மருமகன் தற்போதய ஜனாதிபதி ரணிலும் இப்போது செய்ய முனைகின்றார். ஒரு காலத்தில் இந்த ரணிலை மிஸ்டர் கிளின் என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அது அப்படி இல்லை அவர் சுத்தமான கில்டி என்றும் நாம் அன்றே எழுதி வந்தோம். அடுத்த வாரம் நாம் கட்டுரை வெளிவரும் நாளில் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் முடிவடைந்திருக்கும். அல்லது ஆளும் தரப்பினர் ஏதாவது காரணங்களைச் செல்லி இந்த தேர்தலை தடுத்து அல்லது தள்ளிப் போடவும் இடமிருக்கின்றது.

ஏற்கெனவே அரசு மக்கள் மத்தியில் மிகுந்த வெருப்புக்கு இலக்காகி இருக்கின்றது. மக்களின் ஜனநாயக உரிமைகளை தமக்குப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை பலத்தை வைத்து அரசு தள்ளிப் போட முயன்றால் அந்த எதிர்ப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும். வருகின்ற 17ம் திகதி  நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும் தரப்பு தேர்தல் தொடர்பில் ஏதும் வன்முறையான தீர்மானங்களைக் கொண்டுவரவும் இடமிருக்கின்றது. எதிர்காலத்தில் நாட்டில் சர்வதிகார ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா என்பது இந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முடிவுகளில் தெரியவரும்.

நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஆப்:  ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை!

Next Story

டலஸ் புதல்வர்கள் JVP?