தேர்தல் அழைப்பும் அதற்கு எதிரான சதிகளும்!

-நஜீப் பின் கபூர்-

எப்போதோ நாட்டில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை ஆட்சியாளர்கள் இன்று வரை நடத்தாமல் விட்டதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் அரசியல் யாப்பில் இருக்கின்ற ஓட்டையால் எப்படி குறுக்கு வழியாக வந்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தரோ அதே பாணியில் இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்கு ஆளும் தரப்பினரும் குறிப்பாக மொட்டுக் கட்சியினரும் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் கையாட்களும் தங்களால் ஆன அனைத்து முயற்ச்சிகளையும் செய்து பார்தார்கள். அது பற்றி கடந்த காலங்களில் நாம் நிறையவே பேசியும் இருக்கின்றோம்.

இப்போது தேர்தல் ஆணைக்குழு ஆளும் தரப்பினர் தேர்தலை நடாத்துக் கூடாது என்ற அழுத்தங்களுக்கு மத்தியில் தேர்தல் குளிப்பதற்கு பலாத்காரமாக இழுத்துச் செல்கின்ற நாயைப் போல இந்தத் தேர்தல் அறிவிப்பை விடுத்திருக்கின்றது. அதன்படி ஜனவாரி 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணிவரை நாட்டில் இருக்கின்ற 341 உள்ளாட்சி சபைகளில் 340 உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை கையளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எபிலிபிட்டிய பிரதேச சபையின் காலம் இன்னும் முடிவடையாது இருப்பதால் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடாத்தி மார்ச் மாதம் 20ம் திகதி புதிய சபைகளின் அமர்வு நடக்க வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்தினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் செயற்பாடுகளை முழு நாடு மட்டுமல்ல சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போதய ஆட்சியாளர்களை குறிப்பாக பதவியல் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலின் பதவியை சர்வதேசம் எந்தளவு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்பது கேள்விக்குறி. இதனால்தான் அவர் அதிகாரத்துக்கு வந்த போது எந்த உலகத் தலைவரும் ஒரு வாழ்த்துச் செய்தியைகூட அவருக்கு சொல்ல முன்வரவில்லை. அடுத்து பதவியில் இருக்கின்ற மொட்டுக் கட்சியையும் குறிப்பாக ராஜபக்ஸாக்களையும் தற்போது மக்கள் வெறுத்து ஒதுக்கி வைத்திருக்கின்ற ஒரு நிலை நாட்டில் இருக்கின்றது என்பதும் பொதுவான அபிப்பிராயம். இதனால்தான் மக்கள் அவர்களை அதிகாரக் கதிரைகளில் இருந்து விரட்டியடித்திருக்கின்றனர்.

தங்கள் ரணிலை அதிகாரத்துக்கு கொண்டு வந்து அமர்த்தியதே அரசுக்கு எதிரான மக்கள் மேற்கொள்கின்ற கிளர்ச்சிகளை அடக்குவதற்கே என்று புத்தளம் மாவட்ட சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசந்த சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாகவே கூறி இருந்தார். எனவே ரணிலை இவர்கள் பதவிக்குக் கொண்டு வந்தது நாட்டை அபிவிருத்தி செய்யவோ நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவோ அல்ல. அவரை அதிகாரத்தில் வைத்து தமது ஆட்சியை நீடிப்பதற்கு என்பதையும் அவர்களே தற்போது பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

நாட்டில் ஸ்தீரமான ஒரு அரசாங்கம் இல்லாத காரணத்தால் சர்வதேச உதவிகள் குறிப்பாக ஐஎம்எப் போன்ற நிறுவனங்கள் தமது உதவியை வழங்குவதில் பின்னடிக்கின்றன என்பதும் ஆட்சியாளருக்குத் தெரியும். இது போன்ற பல காரணங்களினால் தேர்தலுக்கு போயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் தமக்கு நிச்சயம் இந்தத் தேர்தலில் நல்ல செய்திகள் இல்லை. கண்டிப்பாக பாரிய சவலால்கள் இருக்கின்றன என்பனை தெரிந்து வைத்திருக்கின்ற ரணில் மஹிந்த தரப்பினர் இந்தத் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ள இடமிருக்கின்றது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

தேர்தலை நடாத்துவதற்கு இந்த 2023 ஆண்டு வரவு செலவு அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. சில வேலை இன்னும் 100 அல்லது 200 கோடிகள் மேலதிகமாகத் தேவைப்படலாம். ஆனால் அரசின் கையாட்கள் இப்படியான ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கின்ற நேரத்தில் எப்படித் தேர்தல்களை நடத்துவது என்று இன்னும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் இந்த நேரத்தில் தேர்தலை நடாத்தக் கூடாது. நாட்டில் பொருளாதார ஸ்தீரமான பின்னர்தான் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றில் தற்போது சமர்ப்பித்திருக்கின்றார். இவர் கடந்த காலங்களில் கோட்டாவுக்கு ஆதரவாக அனுராதபுரப் பிரதேசத்தில் செயல்பட்டவர் என்றும் தற்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குருனாகல நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இருபது மில்லியன்கள் அதாவது 2000 கோடி ரூபாய் செலவு செய்து எப்படித் தேர்தலை நடாத்துவது? அரச ஊழியர்களுக்கு சம்பளம் ஓய்வூதியக்காரர்களுக்கு பென்ஷன் என்பவற்றை வழங்குவதற்கு பணமில்லாத இந்த நேரத்தில் தேர்தல் நடாத்துவது மக்களுக்குச் செய்கின்ற பெரும் துரோகம் என்று நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார். முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்.

ரணிலின் நெருங்கிய சகா ஐதேக. தவிசாளர் வஜிர அபேவர்தன முப்பது மில்லியன்களைச் செலவு செய்து அதாவது 3000 கோடிகளை செலவு செய்து தேர்தலை நடாத்துவதற்கு முனைவது நடைமுறைச் சாத்தியம் இல்லாத விடயம். இதனால் அரசு பொருளாதார மீட்சிக்காக வடிவமைத்த எல்லாத் திட்டங்களும் தவிடு பொடியாகி விடும். இதனால் மக்களுக்கு மேலும் நெருக்கடிகள் வரும் எனவே தேர்தலை ஒருபோதும் நடாத்தக் கூடாது என்று கதை விட்டுக் கொண்டிருக்கின்றார். விரைவில் நடக்க இருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தில் இவருக்கு செல்வாக்கான ஒரு அமைச்சுக் கிடைக்க இருக்கின்றது என்று எமக்கு நம்பகத்தனமாகத் தெரிய வந்திருக்கின்றது.

இவர்கள் ஏன் இப்படிப் பேசுகின்றார்கள் யாருக்காகப் பேசுகின்றார்கள் என்று சற்றுச் சிந்தித்து பாருங்கள். அத்துடன் 1000 கோடி என்று கணக்குச் சொல்லப்பட்டிருக்கின்ற போது ஒருவர் அதனை 2000ம் என்றும் மற்றவர் தொகையை 3000ம் என்று எண்ணிக்கையை கூட்டிச் சொல்லி மக்களை குழப்புகின்ற முயற்சியில் இறங்கி இருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது. இவர்களையும் இது போன்ற ரணில்-ராஜபக்ஸ கையாட்கள் இந்தத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக கடைசி நிமிடம் வரை தன்னலான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். எனவே தான் அரசு இந்த தேர்தலை தள்ளிப் போடும் விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றது என்று தொடர்ச்சியாக செய்திகளைச் சொல்லி வந்திருக்கின்றோம். அந்த முயற்சிகள் இந்த நிமிடம் வரை நடந்து கொண்டிருக்கின்றது.

அதே போன்று இந்தத் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்கு அரச தரப்பினர் செய்யக் கூடிய சதி வேலைகள் தொடர்பாக நாம் தொடர்ச்சியாக மக்களைத் தெளிவுபடுத்தி வந்தோம். நாம் சொல்லி இருந்தது போல் இப்போது தேர்தலுக்கு எதிரான வழக்குகள் தாக்கள் செய்யப்பட்டிருக்கின்றது. இது விடயத்தில் நமது கேள்வி என்னவென்றால் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபத் தேர்தல் என்பனவும் இதே பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில்தான் நடத்த வேண்டி இருக்கும்.

அப்படியாக இருந்தால் அந்தத் தேர்தல்களையும் நடாத்தக் கூடாது என்று இதே ஆட்கள் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்பது உறுதி. எனவே எதிர்காலத்தில் தேர்தல்களே நடக்காது. நாட்டில் இவர்களின் சர்வாதிகார ஆட்சிதான் தொடரும். ஆனால் சர்வதேசத்தை நம்பி இருக்கின்ற இந்த ஆட்சியாளர்களுக்கு நாட்டில் தொடர்ந்தும் ஒரு பாசிச ஆட்சியை முன்னெடுக்கக் கூடிய ஏதுநிலைகளும் இல்லை என்றும் நாம் நம்புகின்றோம்.

இப்போது தேர்தல் அறிப்பு வந்து வேட்புமனுக்கள் ஏற்றுககொள்ளப்பட்டு தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டாலும் இந்தத் தேர்தல் நடந்து முடியும் வரை அது பல்வேறு தடைகளைத் தாண்டி தனது இலக்கை அடைய வேண்டி இருக்கும். ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கின்ற பெரும்பான்மை என்பவற்றை மையமாக வைத்து ஆளும் தரப்பு குறுக்கு வழிகளில் அல்லது சட்டவிரோத செய்பாடுகளினால் கூட இந்தத் தேர்தலை தடுத்து விட முயற்ச்சிகளைச் தொடர்ந்தும் செய்ய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மேலும் தேர்தல் காலங்களில் நாட்டில் வன்முறைகளை ஆளும் தரப்பினரே கட்டவிழ்த்து விட்டு தேர்தலைக் குழப்பியடிக்கின்ற வேலைகளும் இந்தத் தேர்தலில் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கின்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அரசு தேல்வியடையுமாக இருந்தால் அதன் ஆயுட்காலம் மிகவும் கம்மியாக இருக்கும். இதனை ஆட்சியாளர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பதால்தான் அவர்கள் இந்தத் தேர்தலை எப்படியாவது நடத்த விடாமல் இருப்பதற்ககா முயற்ச்சிகளை பகிரங்கமாகவும் இரகசியமாகவும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நீதி மன்றம் மற்றும் படைத் தரப்பு குறிப்பாக பொலிசார் தேர்தல் தொடர்பில் எடுக்கின்ற தீர்மானங்களும் நடந்து கொள்கின்ற ஒழுங்கு முறையும் இந்த நாட்டில் ஜனநாயகம் தொடருமா? அல்லது சர்வாதிகார ஆட்சிக்கான பாதை திறந்து விடப்படுமா என்பது தீர்மானிக்கப்பட இருக்கின்றது.

நெருக்கடியான இந்த நேரத்தில் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஒரு பிரேரனை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருக்கின்றது என்று சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசரி ஜயசேக்கர கடந்த புதன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதற்கிடையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கிடையில் கடும் பிளவு நிலை தோன்றி இருப்பதாகத் தெரிகின்றது. ஆளும் தரப்பை ஆதரிக்கின்ற பல அதிகாரிகள் அங்கு இந்தத் தேர்தலை நிதி நிலமையை காரணம் காட்டி நடத்தக் கூடிய வாய்ப்புக்கள் நாட்டில் இல்லை என்று வாதிடுகின்றார்கள். ஆணைக் குழுவின் தலைவர் எடுத்த தேர்தல் தொடர்பான தீர்மனத்தையும் அவர்கள் விமர்சனம் செய்தும் வருகின்றார்கள்.

தேர்தல் ஒன்றை நடாத்தக் கூடிய காகிதாதிகள் நாட்டில் இல்லை என்றும் அவர்கள் காரணம் சொல்லி தேர்தலைப் பிற்;போடுவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஆளும் மொட்டுக் கட்சியின் கையாட்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதனால்தான் தேர்தலுக்குத் தேவையான காகிதாதிகள் அரச அச்சகக் கூட்டுத் தாபணத்திடம் போதியளவு இருக்கின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா பகிரங்கமாக ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அதிகாரிகளிடம் பிளவு தோன்றி இருப்பதாக சொல்லப்படுகின்ற செய்திகள் பற்றி நாம் தேடிப் பார்த்ததில் சிலர் அப்படி இருந்தாலும். இந்தப் பிளவு பற்றிய கதையை அரசுக்கு நெருக்கமானவர்களே சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது.

ஜனாதிபதி தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் உள்ளாட்சி சபை தேர்தல் தொடர்பான கட்சி செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அது தொடர்பான இறுதி முடிவுளை கட்சிதான் எடுக்க வேண்டும். தான் ஐதேக. கட்சி சார்பில் எந்த தேர்தல் நடவடிக்கைகளிலும் கலந்து கொள்வதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் ரணில். தன்னை நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காகத்தான் மக்கள் ஆணை வழங்கி இருக்கின்றார்கள். தனக்கு கட்சி அரசியலை விட நாட்டின் பொளாதரமும் நலன்களுமே முக்கியம் என்று அவர் கதை அளந்து கொண்டிருக்கின்றார்.

இது ஒரு வித்தியாசமான கதை! அப்படி ஜனாதிபதியாக இருக்கின்ற ஒருவர் தனது கட்சி சார்ந்த தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. தனது கட்சிக்குத் தேர்தல் ஒன்று நடந்தால் வருகின்ற பின்னடைவிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகத்தான் நாம் ரணிலின் இந்த செய்தியை மக்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றோம். அத்துடன் ஆளும் மொட்டுத் தரப்புடன் ஐதேக. மெகா கூட்டணி என்றும் சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் கதை விட்டிருந்ததும் தெரிந்ததே.

கடந்த 05.01.2023 வியாழக்கிழமை அரச தரப்பினர் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என்ற ஒரு பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது. மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த உள்ளாட்சி உறுப்பினர்களில் இளைஞர்களுக்கான பங்கு தொடர்பான தனி நபர் பிரேரணை இதற்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனால் இது தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு நடவடிக்கை அல்ல என்று அங்கு விளக்கம் தரப்பட்டது. அப்படி விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் அது தொடர்ப்பில் இன்னும் பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு அரசு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்று சொல்லி இருந்தார். அவர்தான் தேர்தலை ஆணைக்குழுதான் நடாத்தும் அதனை தடுத்து நிறுத்தம் அதிகாரம் அரசுக்கு இல்லை என்றும் நாடாளுமன்றில் பதில் வழங்கி இருந்தார்.

நன்றி: 08.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

டயனா கமகேவின் குடியுரிமை சி.ஐ.டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Next Story

ஜேவிபி. அரசு ஜூனில்!