உஸ்பெக் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்”

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருப்பது தெரிய வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு டோக்-1 மேக்ஸ் சிரப் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்பட்டது.அவர்கள் உட்கொள்ளும் அளவு, குழந்தைகளுக்குரிய நிலையான அளவைவிட அதிகமாக இருந்தது.

காம்பியாவில் வேறு ஓர் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுடன் குழந்தைகளின் உயிரிழப்புகளை இணைத்த குற்றச்சாட்டு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது.

இதுகுறித்த கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், இந்திய சுகாதார அமைச்சகமும் மேரியோன் பயோடெக் நிறுவனமும் இன்னும் பதிலளிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் ஓர் அரசாங்க ஆதாரத்தை மேற்கோள் காட்டி, “சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தைக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளது.

தற்காலிகமாக சிரப் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக மேரியோன் பயோடெக் நிர்வாகி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் அதன்படி நிறுவனத்தின் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேரியோன் பயோடெக் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் உள்ளது. அதன் இணையதளம் தற்போது செயலிழந்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் லிங்க்ட்-இன் பக்கம், அந்த நிறுவனம் 1999இல் நிறுவப்பட்டது என்றும் அதன் தயாரிப்புகள் “மத்திய ஆசிய நாடுகள், மத்திய மற்றும் தென்னமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமாக உள்ளன” என்றும் கூறுகிறது.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சில மருந்து நிறுவனங்களின் தாயகமாக உள்ளதால், “உலகின் மருந்தகம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும், வளரும் நாடுகளின் மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

டிசம்பர் 27ஆம் தேதியிட்ட உஸ்பெக் அமைச்சக அறிக்கை, 2012 முதல் நாட்டில் டோக்-1 மேக்ஸ் மாத்திரைகளும் சிரப் மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறது.

“உயிரிழந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை வீட்டில் 2-7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. இது குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவைவிட அதிகம்,” என்று அமைச்சகம் கூறியது.

உயிரிழப்புகள் எந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.

பிபிசி மானிட்டரிங் பிரிவு, டிசம்பர் 23ஆம் தேதியன்று, Gazeta.uz என்ற செய்தி இணையதளத்தை மேற்கோள் காட்டி, உஸ்பெக் அதிகாரிகள் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய சமர்கண்ட் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டதை” விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவித்தது.

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்” எனக் குற்றச்சாட்டு

டிசம்பர் 26ஆம் தேதியன்று, Podrobno.uz செய்தி இணையதளம் மூன்று வயதுக்குட்பட்ட 15 பேர் உட்பட 21 குழந்தைகள், “செப்டம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து டோக்-1 மேக்ஸை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்டதாகக் கூறப்படும்” கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்றதாகக் கூறியது. அந்த நோயாளிகளில் மூவர் குணமடைந்துள்ளனர்.

டோக்-1 மேக்ஸ் மருந்தில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

அக்டோபரில் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கையை விடுத்தது. அதோடு காம்பியாவில் சிறுநீரக பாதிப்புகளால் 66 குழந்தைகள் உயிரிழந்த விஷயத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளைத் தொடர்புபடுத்தியுள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் மீதான சோதனைகள், அதில் நச்சுப் பொருட்களான டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதைக் காட்டியது.

இந்திய அரசும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

டிசம்பரில் இந்தியா, நான்கு இருமல் மருந்துகளின் சோதனைகள் விவரக் குறிப்புகளுடன் இணங்குவதைக் காட்டியதாகக் கூறியது. மேலும் ஓர் அரசாங்க அதிகாரி பிபிசியிடம், உலக சுகாதார அமைப்பு இருமல் மருந்துகளைக் குறை கூறுவதில் மட்டுமீறிய நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

கடந்த வாரம், காம்பியாவில் உள்ள நாடாளுமன்றக் குழு பல வாரங்கள் விசாரணைக்குப் பிறகு மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் மீது வழக்குத் தொடர பரிந்துரைத்தது. அந்தக் குழு நாட்டிலுள்ள அந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் தடை செய்வதற்கும் பரிந்துரைத்தது.

Previous Story

வாட்ஸ்அப் இயங்காது: புதிய அறிவிப்பு!

Next Story

ரணில் பற்றி இம்ரான் எம்.பி.!