லவ் ஜிஹாத்: நடிகை துனிஷா ஷர்மா மரணம்!  நடந்தது என்ன?

அலிபாபா என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான துனிஷா ஷர்மா, சனிக்கிழமையன்று ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

துனிஷா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் கூறிய நிலையில், சக நடிகர் ஷீஸான் கான் அவரது தற்கொலைக்கு தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

லவ் ஜிகாத் - நடிகை துனிஷா ஷர்மா மரணம்

இதற்கிடையில், மகாராஷ்டிர அமைச்சர் உட்பட பல தலைவர்களும் துனிஷாவின் மரணத்தை ‘லவ் ஜிஹாத்’ என்று கூறியுள்ளனர். மறுபுறம், திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சண்டிகரில் பிறந்த துனிஷா ஷர்மா 14 வயதில் நடிக்கத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில், பிரபல தொலைக்காட்சித் தொடரான ​​’பாரத் கா வீர் புத்ரா – மகாராணா பிரதாப்’ இல் அவர் நடித்தார்.

அதன் பிறகு ‘சக்கரவர்த்தி அஷோக் சாம்ராட்’ சீரியலிலும் பணியாற்றினார். ‘இஷ்க் சுப்ஹான் அல்லா’, ‘இன்டர்நெட் வாலா லவ்’ போன்ற தொடர்களிலும் துனிஷா நடித்துள்ளார்.

2016 இல், அவர் தனது பாலிவுட் வாழ்க்கையை ‘ஃபிதூர்’ படத்தின் மூலம் தொடங்கினார். இதில் நடிகை கட்ரீனா கைஃப்பின் சிறுவயது கேரக்டரில் அவர் நடித்தார்.

இது குறித்து துனிஷாவின் தாய் வனிதா ஷர்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது துனிஷாவின் செல்போனை போலீசார் கைப்பற்றினர்.

லவ் ஜிகாத் - நடிகை துனிஷா ஷர்மா மரணம்

வனிதா ஷர்மா தனது மகளின் மரணத்திற்கு சக நடிகர் ஷீஸான் கான் தான் காரணம் என்று கூறியுள்ளார். “ஷீஸான், துனிஷாவை ஏமாற்றிவிட்டார். அவருடன் முதலில் உறவை ஏற்படுத்திக் கொண்டார். திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். பின்னர் துனிஷாவுடனான உறவை முறித்துக் கொண்டார்.” என்று ஒரு வீடியோ செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

“அவருக்கு முன்பே வேறொரு பெண்ணுடன் உறவு இருந்தது. ஆனாலும் அவர் துனிஷாவை தன்னுடன் வைத்திருந்தார். மூன்று நான்கு மாதங்கள் அவளைப் பயன்படுத்தினார். ஷீஸான் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.”

டிசம்பர் 23 ஆம் தேதி, அதாவது சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு தான் செட்டுக்கு சென்றதாக அவர் கூறினார். தனக்கு ஷீஸான் வேண்டும், அவர் மீண்டும் தன் வாழ்க்கையில் வர வேண்டும் என்றும் ஆனால் ஷீஸான் அதைக்கேட்கத் தயாராக இல்லை என்றும் தனது மகள் தன்னிடம் கூறியதாக வனிதா தெரிவித்தார்.

கொலையா? தற்கொலையா?

சனிக்கிழமை ஷூட்டிங்கின் இடைவேளையின் போது, ​​துனிஷா ஷர்மா தனது மேக்கப் அறைக்கு சென்றதாகவும், ஆனால் அவர் சரியான நேரத்தில் மீண்டும் படப்பிடிப்பு இடத்திற்கு வரவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அதன்பிறகு சிலர் அவரை தேடிச்சென்று ​​குரல் கொடுத்தபோதும் அவர் கதவைத் திறக்கவில்லை. கதவைத் திறந்து பார்த்தபோது அவர் அங்கு , தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்று போலீசார் கூறுகின்றனர்.

அவரது மரணம் தற்கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், எஸ்பி சந்திரகாந்த் ஜாதவ், கூறினார். பிரேக் அப் ஏற்பட்ட காரணத்தால் துனிஷா இந்த நடவடிக்கையை எடுத்தார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் காவலில் ஷீஸான் கான்

தானே மாவட்டத்தின் வாலிஸ் காவல் துறையினர் ஷீஸான் கான் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷீஸான் மீது ஐபிசியின் 306வது பிரிவு போடப்பட்டுள்ளது.

துனிஷா ஷர்மாவின் காதலர் ஷீஸான் கான் நான்கு நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் 7 நாள் போலீஸ் காவலுக்கு  நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

துனிஷா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘அலிபாபா தாஸ்தான்-இ-காபூல்’ நிகழ்ச்சியில் ஷீஸானும் துனிஷாவுடன் பணிபுரிந்தார். இந்த நிகழ்ச்சியில் இளவரசி மரியமாக துனிஷா நடித்து வந்தார்.

போலீசாரிடம் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஷீஸான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை இன்னும் செய்யப்படவில்லை என்று ஷீஸானின் வழக்கறிஞர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

லவ் ஜிகாத் - நடிகை துனிஷா ஷர்மா மரணம்

இந்த விவகாரத்தில் ஷீஸான் கானின் சகோதரிகள் ஷஃபக் நாஸ், ஃபலக் நாஸ் மற்றும் குடும்பத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ”இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு, எங்கள் அறிக்கைக்காக எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஊடக துறையினர் எங்களைத் தொடர்ந்து அழைப்பது, எங்கள் குடியிருப்பின் கீழே நிற்பது போன்றவை எங்களை தொந்தரவு செய்கிறது. இந்திய நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, ஷீஸான் மும்பை காவல்துறையுடன் ஒத்துழைக்கிறார். நாங்கள் சரியான நேரத்தில் இந்த விஷயம் பற்றிப்பேசுவோம்.” என்றும் அறிக்கை கூறுகிறது.

லவ் ஜிஹாத்தின் நுழைவு

லவ் ஜிகாத் - நடிகை துனிஷா ஷர்மா மரணம்

துனிஷா ஷர்மா மற்றும் ஷீஸான் கானுக்கு இடையே உறவு இருந்தது என்றும் இருவரும் 15 நாட்களுக்கு முன்பு உறவை முறித்துக் கொண்டனர் என்றும் எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.

மறுபுறம் மகாராஷ்டிர அரசில் அமைச்சராக இருக்கும் கிரீஷ் மகாஜன், துனிஷாவின் மரணத்தை லவ் ஜிகாத் விவகாரம் என்று வர்ணித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர யோசித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

துனிஷா ஷர்மாவின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என்றும் இது லவ் ஜிகாத் விவகாரம் என்றால் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் ராம் கதம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சதி செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என ராம் கதம் எச்சரித்துள்ளார்.

இதுவரை நடந்த விசாரணையில் லவ் ஜிகாத் கோணம் எதுவும் வெளிவரவில்லை என்று இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை உதவி ஆணையர் சந்திரகாந்த் ஜாதவ் தெரிவித்தார்.

கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகை காம்யா பஞ்சாபி ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“இன்றைய தலைமுறைக்கு என்ன ஆகிவிட்டது? உங்கள் பிரச்சினைகளை சமாளிக்க கொஞ்சம் தைரியத்தை வைத்துக்கொள்ளுங்கள். ஏன் வாழ்க்கையை இவ்வளவு எளிதாக முடித்துக்கொள்கிறீர்கள்? ஏன் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள்?

இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன் தயவுசெய்து உங்கள் பெற்றோர் பற்றி நினையுங்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அவர்கள் மரணத்தைக்காட்டிலும் அதிகமாக தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது,” என்று காம்யா குறிப்பிட்டுள்ளார்.

கரண் குந்த்ரா தனது ட்விட்டர் பதிவில், ” இந்த சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்த்தையும் அளிக்கிறது…. இளம் கலைஞர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிட்டார்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மன வலுவை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒளி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று அனைவரிடமும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்,” என்று எழுதியுள்ளார்.

ஷீஸானுக்கு துனிஷா என்ன எழுதினார்?

துனிஷா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 12 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் ஷீஸானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பல சந்தர்ப்பங்களில் பதிவிட்டுள்ளார்.

நவம்பர் 19 அன்று சர்வதேச ஆண்கள் தினத்தன்று ஷீஸானுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு, துனிஷா, “என்னை இப்படி மேலே உயர்த்தும் மனிதருக்கு சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்! என் வாழ்நாளில் நான் இதுவரை கண்டிராத மிகவும் கடின உழைப்பாளி, உணர்ச்சிமிக்கவர், உற்சாகமானவர் மற்றும் அழகான மனிதர். !” ஷீஸான் நீங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. அதுதான் இதில் இருக்கும் மிகவும் அழகான அம்சம்,” என்று பதிவிட்டிருந்தார்.

“ஒரு மனிதன் தனது குடும்பத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் செய்யும் பங்களிப்பையும் தியாகத்தையும் அங்கீகரித்து கௌரவிக்க வேண்டிய நேரம் இது! எல்லா அற்புதமான மனிதர்களுக்கும் சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்.” என்றும் துனிஷா கூறியிருந்தார்.

Previous Story

ராணுவத்தில் மகன் - புரட்சிக் குழுவில் தந்தை; மியான்மரில் ஒரு பாசப் போர்!

Next Story

வாட்ஸ்அப் இயங்காது: புதிய அறிவிப்பு!