இன்றைய போராட்டம் NOV.02

-ரஞ்சன் அருண் பிரசாத்-

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டபோதும் நாட்டில் இப்போதும் பல தருணங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையே காணப்படுகிறது.

இலங்கை போராட்டம்

இலங்கையில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சமீபத்திய போராட்டம்

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ வெளியேற வேண்டும் எனக் கோரி, நுகேகொடை – மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பது வரை நீண்டது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முதலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக விரிவடைந்தது. பின்னரான காலத்தில் அது முழு அரசியல்வாதிகளுக்கும் எதிரானதாகியது.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம், மே மாதம் 9ஆம் தேதி வன்முறையாக தீவிரம் அடைந்தது. நாட்டின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. அதன் விளைவாக கோடிக்கணக்கான ரூபா பெறுமதி சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு, பல உயிர்களும் பறிபோயின.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ஆம் தேதி இலங்கை பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர், நிதி அமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ஷ, தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், பின்னரான காலத்தில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

எழுச்சி பெற்ற மக்கள் போராட்டம்

இலங்கை போராட்டம்
படக்குறிப்பு,கொழும்பில் நடைபெற்ற அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு போராட்டம்

இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்த நிலையின், ஜுலை மாதம் 9ஆம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகக் கோரி, லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்குள் வருகை தந்து, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச சொத்துக்களை தமது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, ஜுலை மாதம் 13ஆம் தேதி மாலைத்தீவு நோக்கி தனது பாரியாருடன் சென்ற அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்திருந்தார்.

இதன்படி, சிங்கப்பூர் நோக்கி பயணித்த அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 14ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோட்டபயவுக்கு மாற்றாக பதில் ஜனாதிபதியாக ஜுலை மாதம் 15ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராணுவத்தை பயன்படுத்திய ரணில்

கொழும்பு போராட்டம்

இவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தை கொண்டு, அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்.

அதன்பின்னர், தனது நடவடிக்கைகளின் ஊடாக, எரிபொருள் வரிசைகளை குறைத்து, எரிவாயு வரிசைகளை குறைத்து, பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை குறைத்து, மின்சார வெட்டு நேரத்தை குறைத்து, பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாக மக்களை இயல்பு வாழ்க்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், இவ்வாறான சூழ்நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புனர்வாழ்வு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெறுமாறு கோரியும் கொழும்பில் நவம்பர் 2ஆம் தேதி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு வழமைக்கு வருவதாக கூறப்படுகின்ற சூழ்நிலையிலும், ஏன் போராட்டம் தொடர்கின்றது என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

காலி முகத்திடலில் என்ன நடக்கிறது?

கொழும்பு போராட்டம்

காலி முகத்திடல் போராட்ட களத்தில் முன்னின்று செயற்பட்டு, தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார்.

”பொருட்களின் விலைகள் குறைவடைந்து, நாடு வழமைக்கு திரும்புகின்றது என்பது ஒரு மாயை. 100 ரூபாவினால் விலையேற்றத்;தை மேற்கொண்டு விட்டு, 10 ரூபாவினால் விலையை குறைப்பதென்பது விலை குறைப்பு கிடையாது. 90 ரூபாவினால் விலை அதிகரித்து தான் இருக்கின்றது. மூன்று மாத காலத்தில், ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் மூன்று மடங்காக அதிகரித்து தான் இருக்கின்றது.

ராஜ்குமார் ரஜீவ்காந்த்
ராஜ்குமார் ரஜீவ்காந்த்

வெறும் ஒரு வீதத்தை விடவும் குறைவாக அளவில் குறைக்கின்ற போது, அதனை விலை குறைவு என்று சொல்;ல முடியாது. விலை குறைவு என்பது வேறொரு விடயம். பெட்ரோல் வரிசைகளோ, அல்லது வேறு வரிசைகளோ குறைந்தது என்பதற்காக பொருளாதார பிரச்சினையை இல்லை என்று இல்லை.

\இன்றும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத, மக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளை வெளிகொணர்வதற்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இலங்கையின் குழந்தைகளுக்கான போஷாக்கு குறைப்பாடு உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

மருத்துவமனைகளில் இன்றும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. டாலர் இல்லாதமையினாலேயே பொருளாதார பிரச்சினை இவ்வளவு பூதாரமாகியது. ஆனாலும், டாலரை உழைப்பதற்கான வழி வகைகளும் இன்றும் செய்யப்படவில்லை.

தொடர்ந்தும் கடன் தான் வாங்கப்படுகின்றது. கடன் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற போது, நாம் மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்குவோம்” என அவர் கூறினார்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராடும் மக்கள் இன்றும் ஒடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். அதேபோன்று, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

மேல் தட்டு வர்க்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் தற்போது இல்லாத நிலைமை இருந்தாலும், அடி மட்ட மக்கள் பொருளாதாரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில, மக்களின் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இனவாதம், மதவாதம் இருக்கக்கூடாது என பல மாத காலமாக போராட்டம் நடத்திய போதிலும், இன்றும் இனவாதம், மதவாதம் அவ்வாறே இருக்கின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

“பிரச்சினை முடிவடையவில்லை”

அதனால், பிரச்சினை முடிவடைந்து விட்டது என கூற முடியாது என்கின்றார் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த்.

இதேவேளை, கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டத்தின் போது குரல் எழுப்பியவர்கள், இன்று அதே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் போராட்ட களத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம், பிபிசி தமிழுக்கு கேள்வி எழுப்பியது.

”எதிர்கட்சிகளை நாளைய போராட்டத்திற்கு இணைத்துக்கொண்டதானது, அவர்கள் எமது கோரிக்கைகளுக்கு உடன்பட்டு தான் வருகின்றார்கள். அதனாலேயே அவர்களை இணைத்துக்கொண்டோம். அரசியல்மயப்படுத்தப்பட்டது என கூற மாட்டேன். எல்லா போராட்டங்களும் அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் தான்.

உதாரணமாக காலி முகத்திடல் போராட்டம் கூட, அரசியல் கட்சிகளுக்கு சார்பான போராட்டமாக இல்லா விட்டாலும், அதுவும் ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து (சிஷ்டம் சோர்ன்ஞ்) என்ற வார்த்தையை முன்வைத்து அரசியல் கோரிக்கை முன்னிலைப்படுத்தினோம்.

சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம்
சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம்

ஆரம்பத்தில் அதிகரிக்கப்பட்ட வாழ்க்கை செலவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். பிறகு பிறகு அது அரசியல் கோரிக்கையாக மாறியது. நாளைய போராட்டத்திற்கு எதிர்கட்சிகளிலுள்ள அரசியல்வாதிகளும் எம்முடன் சேர்ந்துக்கொண்டுள்ளார்கள்.

இதற்கு குறிப்பிட்ட காரணம் இருக்கின்றது. காலி முகத்திடல் போராட்டத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட போராட்டங்களை போலீஸார் தொடர்ந்தும் கலைத்து வருகின்றார்கள். போலீஸார் போராட்டங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் போது, சாதாரண மக்கள் தெருவிற்கு வருவதற்கே பயன்படுகின்றார்கள்.

எனவே அதற்காக ஒரு உபாயமாக அரசியலிலுள்ள எதிர்கட்சிகளை தெருவிற்கு வாருங்கள் என கூறுகின்றோம். இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வருகின்றமையினால், முன்னேற்றகரமான அரசியல் கொள்கைகளை கொண்டிருக்கின்றார்கள் என நாங்கள் கூறவில்லை. நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், மக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிதாக கொண்டு வரப்பட்ட புனர்வாழ்வு சட்டத்தை அரசாங்கம் முற்று முழுதாக நாடாளுமன்ற புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மிக குறுகிய பொது நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே இந்த அரசியல் கட்சிகள் வருகின்றார்கள்.

போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காகவே அரசியல் கட்சிகள் நாளை போராட்டத்திற்கு வருகின்றார்கள்” என சட்டத்தரணி சுஷ்திகா அருள்லிங்கம் தெரிவிக்கின்றார்.

போராட்டம்யாருக்கு தோல்வி, யாருக்கு வெற்றி?

காலி முகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கான போராட்டங்களே தற்போது தொடர்வதாகவும், உண்மையான போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளரும், மூத்த ஊடகவியலாளருமான அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கை
அ.நிக்சன், மூத்த ஊடகவியலாளர்

”எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகி வருகின்றது. இதற்கு போராட்டம் நடத்துவதை விடுத்து, காலி முகத்திடல் போராட்டத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கான போராட்டமே நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நெருக்கடியை மூடி மறைத்து விட்டார்.

அது அவருக்கு கிடைத்த வெற்றி. ராஜபக்ஷ குடும்பத்தை ரணில் வழமையான அரசியல் செயற்பாடுகளுக்குள் கொண்டு வந்து விட்டார். இந்த பின்னணியில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரி போராட்டத்தை நடத்துகின்றீர்கள். காலி முகத்திடலில் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்காக இப்போது போராடுகின்றீர்கள்.

காலி முகத்திடல் போராட்டத்தின் பக்கவிளைவு என்ன? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள அமலாக்கப்பட்டது.

புனர்வாழ்வு சட்டமூலம் கொண்டு வரப்பட்டது போன்றவற்றிற்காகவே போராடுகின்றார்கள். பொருளாதார நெருக்கடிக்காகவே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த போராட்ட நெருக்கடி இன்றும் இருக்கின்றது. அதைபற்றி இப்போது கதைப்பது குறைந்துள்ளது. அப்படி பார்க்கும் போது, ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரம் வெற்றி பெற்றிருக்கின்றது. ரணிலிடம் ராஜதந்திரம் கிடையாது. நரி தந்திரமே உள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் இல்லாமல், ராஜபக்ஷ குடும்பத்தையும் அவரது ஆதரவாளர்களையும் மீண்டும் வழமையான அரசியலுக்குள் கொண்டு வந்து விட்டார்.

சிஷ்டம் சேஞ்ச் என்ற அடிப்படையை போராட்டக்காரர்கள் விட்டு விட்டார்கள். சிஷ்டம் சேஞ்ச் செய்திருந்தால், ரணில் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார். உண்மையான கோரிக்கை வெற்றி பெறவில்லை. அதனால், போராட்டக்காரர்களின் போராட்டம் தோல்வி. ரணில் வெற்றி அப்படி தான் நான் பார்க்கின்றேன்.” என அரசியல் ஆய்வாளரும், மூத்த ஊடகவியலாளருமான அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

Previous Story

பிரியமாலி விவகாரம்: சிறிசுமண தேரர்  கைது

Next Story

இரட்டைக் குடியுரிமை  தொடர்பில் பசில்