’83’ திரைப்பட விமர்சனம்

-முரளிதரன் காசி விஸ்வநாதன்-

நடிகர்கள்: ரண்வீர் சிங், தீபிகா படுகோன், பங்கட் திரிபாதி, ஜீவா, நீனா குப்தா, மொஹீந்தர் அமர்நாத், போமான் இரானி; ஒளிப்பதிவு: அஸீம் மிஸ்ரா; பின்னணி இசை: ஜூலியஸ் பாக்கியம்; இயக்கம்: கபீர் கான்.

1983 ஜூன் 25. இந்திய விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத தினங்களில் ஒன்று. இந்தியா என்ற மிகப் பெரிய நாட்டின் கவனத்தையே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஒரே ஒரு விளையாட்டின் பக்கம் திருப்பிய நாள் அது. அந்த நாளை திரும்பவும் நிகழ்த்திக்காட்ட நினைத்திருக்கிறார் கபீர் கான்.

அவரது முந்தைய படங்களான ‘காபூல் எக்ஸ்பிரஸ்’, ‘ஏக்தா டைகர்’, ‘டியூப்லைட்’ போன்றவை மிக மோசமான விமர்சனங்களையே எதிர்கொண்டிருந்த நிலையில், இந்த வரலாற்று நிகழ்வை அவர் எப்படி படமாக்கப்போகிறார் என்ற கவலையும் ரசிகர்களுக்கு இருந்தது.

படத்தின் கதை என்று புதிதாக எதையும் சொல்லத் தேவையில்லை. 1983ல் இங்கிலாந்தில் நடந்த புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் செல்வதிலிருந்து அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது வரையிலான நிகழ்வுகளே இந்தப் படத்தின் திரைக் கதை. அதனை பாலிவுட் பாணியில் பாடல்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றோடு இணைத்து உருவாக்கியிருக்கிறார் கபீர் கான்.

படம் துவங்கும்போது வீரர்களின் பாஸ்போர்ட் மூலம் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துவது சிறப்பான உத்தி. அடுத்ததாக சில வசனங்களின் மூலம், இந்திய அணி மீது இந்தியாவில் நிலவும் அவநம்பிக்கை சொல்லப்படுகிறது. அந்தக் காட்சியிலிருந்து படம் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.

இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி மீது காட்டப்படும் அலட்சியம், இதனை மீறி இந்திய அணி ஒவ்வொரு போட்டியாக வெல்ல ஆரம்பிப்பது, ஒவ்வொரு போட்டியிலும் எதிர்கொள்ளும் சவால்கள், ஜிம்பாவேவுடனான மிக முக்கியமான போட்டியில் கபில் தேவின் 175, இங்கிலாந்துடனான அரை இறுதிப் போட்டி, மேற்கிந்தியத் தீவுகளுடனான இறுதிப் போட்டி என துவக்கத்திலிருந்தே படம் க்ளைமாக்ஸை நோக்கித்தான் நகர்கிறது என்பதால் ஒரு தருணத்தில்கூட படம் சலிப்புத் தட்டவில்லை.

கபீர்கானின் பல திரைப்படங்களில் தேசியவாதம் ஓங்கி ஒலிக்கும். இந்தப் படத்திலும் சில காட்சிகளில் அவரது அதீத தேசியவாதக் குரல் ஒலிக்கிறது என்றாலும், முந்தைய படங்களின் அளவுக்குச் செல்லவில்லை என்பது ஆறுதல்.

இந்தப் படத்திற்கு ’83’ என்பதற்குப் பதிலாக, கபில் தேவ் என்றே பெயர் சூட்டியிருக்கலாம். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க கபில் தேவின் பாத்திரத்தைச் சுற்றியே நடக்கிறது கதை. அப்படித்தான் இருக்கவும் முடியும். அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ரண்வீர் சிங். ப

டத்தில் பல தருணங்களில் அவரது கண்களில் தெரியும் ஒளியும் பந்து வீசும்போது கைகளின் வளைவும் சக போட்டியாளர்களுடன் அவர் பழகும் விதமும் அட்டகாசமாக இருக்கின்றன. ஒரு இடத்தில்கூட, ரண்வீர் சிங் வெளியில் தெரியாமல், கபில்தேவே தெரிகிறார்.சில காட்சிகளில் திரைப்பட காட்சிகளையும் உண்மையான விளையாட்டுக் காட்சிகளையும் இணைக்கிறார்கள். அந்தத் தருணங்கள் மிக அற்புதமாக இருக்கின்றன.

இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு என ஸ்ரீகாந்தின் பாத்திரம் பயன்படுத்தப்பட்டதைப் போல இருக்கிறது. அவருடைய பாத்திரத்திற்கென சொல்லத்தக்க பல தருணங்கள் இருந்தாலும், படத்தில் வரும் பெரும்பாலான அசட்டு நகைச்சுவைகள் இவருடையதே. ஒரு காட்சியில் இங்கிலாந்தில் எல்லோரும் இந்தியாவைக் கேலிசெய்யும்போது, “நாம என்ன கோட்டாவிலா வந்தோம், எல்லோரும் இப்படி கேலி பண்றானுக” என்கிறார் படத்தில் வரும் ஸ்ரீகாந்த். இந்த வசனத்தை எந்த நோக்கத்தில் வைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இந்தப் படத்தில் ரசிக்கவைக்கும் மற்றொரு நடிகர் பங்கஜ் திவாரி. இந்திய அணியின் நிர்வாகி ஆர்ஆர் மான் சிங்காக வரும் பங்கஜ், இந்தத் திரைப்படத்தின் மிக நேர்த்தியான நடிகர்களில் ஒருவர். லாலா அமர்நாத்தாக வரும் மொஹீந்தர் அமர்நாத்தும் ரசிக்கவைக்கிறார்.

சின்னச் சின்னதாக உள்ள பல பிரச்னைகளையும் தாண்டி, இந்தப் படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான தருணமாக அமைகிறது. கபில்தேவ் உலகக் கோப்பையை வென்றதை தொடர்ந்து செய்திகளாகவும் சில வீடியோ துணுக்குகளாகவும் பார்த்த இந்த தலைமுறைக்கு, அந்தப் போட்டியை அதன் காலப் பின்னணியோடு திரும்ப நிகழ்த்திக் காட்டி திருவிழா கொண்டாடுகிறது இந்தப் படம்.

83 – கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத கேட்ச்.

 

 

 

Previous Story

இலங்கையை எச்சரிக்கும் சீன நிறுவனம் !

Next Story

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ராஜபக்ச