இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது.

படத்தின் கதை சுருக்கம்
,MOVIE TRAIN MOTION PICTURES
இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும் குடிபெயர்ந்து சென்றனர். அப்படி இலங்கைக்குச் சென்ற குடும்பங்களில் முத்தையா முரளிதரனின் குடும்பமும் ஒன்று.
தமிழ் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்டு இலங்கையில் வளரும் முத்தையா முரளிதரனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். அவரது ஆதீத ஆர்வத்தின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்யும்போது சந்தித்த சிக்கல்களையும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆன பிறகு பந்துவீச்சாளராக எதிர்கொண்ட சிக்கலான தருணங்களையும் எப்படி கடந்து வந்தார் என்பதை ‘800’ திரைப்படத்தின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழரான முத்தையா முரளிதரனுக்கு கிரிக்கெட் அணியிலும், இலங்கையின் அரசியல் களத்திலும் எழுந்த பிரச்னைகளைக் கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மாறினார் என்பதே இந்தப் படத்தின் கதை.
‘800’ படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதற்கு முன்பு, ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தில் சிறுவனாக இவர் நடிந்த்துள்ளார். மேலும் ஒரு சில இந்தி படங்களில், இந்தி தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து விலகினார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். நாசர், நரேன் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

முரளிதரனை துரத்திய கேள்வி

முத்தைய முரளிதரனின் வாழ்க்கை முழுவதும் அவரை இரண்டு கேள்விகள் துரத்தின. “மைதானத்திற்கு வெளியே, நீ தமிழனா அல்லது இலங்கையைச் சேர்ந்தவனா?”
“விளையாடும்போது நீ சிறப்பாக பந்து வீசுகிறாயா அல்லது பந்தை எறிகிறாயா?”இந்தக் கேள்விகளுக்குத் தனது ‘800’ படத்தின் மூலம் இயக்குநர் ஸ்ரீபதி பதிலளிக்க முயன்றுள்ளார் என்று இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை உண்மையாக ‘800’ திரைப்படம் பிரதிபலிப்பதாக அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கையில், சிறுவயது முதல் நடந்த இலங்கை உள்நாட்டு யுத்தம், பள்ளி, கல்லூரிகளில் எதிர்கொண்ட சிக்கல், கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்ட சவால், பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கியது, தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800வது விக்கெட்டை கைப்பற்றியது எனப் பல சம்பவங்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.
GETTY IMAGES
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜூன் ரணதுங்கா எப்படி முத்தையா முரளிதரனுக்கு ஆதரவாக இருந்தார் என்பது காட்சிகளாக விவரிக்கப்பட்டிருந்தாலும், அணியில் பிற வீரர்கள் முத்தையா முரளிதரனிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது கதையில் இடம்பெறவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரே தமிழ் வீரராக இருந்த முத்தையா முரளிதரனுக்கு அணியில் பிற வீரர்கள் எப்படி ஆதரவளித்தனர் என்பது சரியாக விவரிக்கப்படவில்லை என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது.
அதேபோல முத்தையா முரளிதரன் மீது பந்தை எறிகிறார் என எழுந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் விளக்கமான காட்சிப்படுத்தல் இருந்திருக்கலாம் என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையைப் படமாக்க முயற்சி செய்ததில், படத்தின் முதல் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் ஏதும் இல்லாமல், இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையை மட்டுமே வைத்துக் கொண்டு முதல் பாதி படம் நகர்கிறது என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சித்துள்ளது.
ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக முரளிதரனின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் காட்சிகள் நல்ல அனுபவத்தைத் தருவதாக ‘டைம்ஸ் அஃப் இந்தியா’ விமர்சனம் வழங்கியுள்ளது.
பலம் சேர்க்கும் இசை

‘800’ படம் குறித்து மாலை மலர் இணையதளம் எழுதியுள்ள விமர்சனத்தில் படத்தின் நாயகனான மதுர் மிட்டல், முடிந்தவரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயன்றுள்ளார். அவரது உடல் மொழி, முகத்தோற்றம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
நாயகி மகிமா நம்பியார் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்துள்ளார் என்று மாலை மலர் இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தோற்றத்தில் நரேன் நடித்துள்ளார். அந்தக் காட்சிகள் வரும்போது திரையரங்கில் விசில் பறப்பதாக அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.
பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையை இயக்குநர் ஸ்ரீபதி அழகாக படமாக்கியுள்ளதாக மாலை மலர் எழுதியுள்ளது.
இலங்கை அணியில் சேர்வதற்கும், சேர்ந்த பிறகும் அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து திரைக்கதையில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்திற்கு பெரிய பலமாக ஜிப்ரானின் இசை உள்ளதாக மாலை மலர் விமர்சனம் வழங்கியுள்ளது.
பலவீனமாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்

விளையாட்டு வீரர்கள் குறித்து எடுக்கப்படும் படங்கள் எப்போதுமே உணர்ச்சிபூர்வமாக இருக்கும். அந்த வரிசையில் இயக்குநர் ஸ்ரீபதியின் ’800′ திரைப்படமும் இணைந்திருக்கிறது என இந்தியா டுடே விமர்சனம் எழுதியிருக்கிறது.
இலங்கையில், தமிழர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து ’800′ திரைப்படம் அலசியிருக்கிறது. இந்த பிரச்னை முத்தையா முரளிதரனின் வாழ்வில் எப்படி பிரதிபலித்தது, அரசியல் ரீதியாக அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் எனப் பல அடுக்குகளாக ’800′ படம் விரிகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல், கிரிக்கெட் என இரண்டு தளங்களிலும் முத்தையா முரளிதரன் எதிர்கொண்ட சிக்கல்களை ’800′ திரைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மதுர் மிட்டலின் கண்களின் வழியே வெளிப்படும் நடிப்பு அபாரமானது என்றும், முத்தையா முரளிதரனாக திரையில் வாழ்ந்துள்ளார் என்றும் இந்தியா டுடே எழுதியுள்ளது.
’800′ திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இசையும், ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று இந்தியா டுடே தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது.
சில குறைகள் இருந்தாலும், ஒரு முழுநீள விளையாட்டுப் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது கிடைக்கும் நல்ல அனுபவத்தை ’800′ திரைப்படம் வழங்கும் என இந்தியா டுடே இணையதளம் விமர்சனம் வழங்கியுள்ளது.