கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி தாக்குதல்

அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் கூறினார்.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

புக்கர் பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.

அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் உள்ளது.

அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சல்மான் ருஷ்டி தாக்குதல்

ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் இருந்த ஒரு மருத்துவர், கத்தியால் குத்தப்பட்ட பிறகு ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாக ரீடா லிண்ட்மேன் என்ற மருத்துவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

ருஷ்டியின் கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் அவர் கத்திக் குத்து காயங்களால் அவதிப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மேடையில் சரிந்த பகுதியில் ரத்தம் பீறிட்டு காணப்பட்டது.

அந்த நேரத்தில் ருஷ்டி உயிருடன் இருப்பதாகத் தோன்றியது. அருகே இருந்தவர்களும் “அவருக்கு நாடித் துடிப்பு உள்ளது” என்று குரல் கொடுத்தனர்,” என்று மருத்துவர் ரீடா லிண்ட்மேன் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிபட்டுள்ளார். சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரை நேர்காணல் செய்த நபருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மை அணித் தலைவர் சக் ஷூமர், சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல் இது என்று கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராகவும் பல சந்தர்ப்பங்களில் தனது படைப்புகளை பாதுகாக்கும் வகையில் கருத்துக்களையும் சல்மான் ருஷ்டி வெளியிட்டு வருகிறார்.

நியூயார்க்கில் உள்ள ஷட்டாக்குவா என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கோடைகால விரிவுரைத் தொடர் நிகழ்வில், முதன்மையானதாக சல்மானின் உரை இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேரில் பார்த்தவர்களின் கூற்று

இதற்கிடையே, தாக்குதல் நடத்தியவர் கறுப்பு முகமூடி அணிந்து வந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகமான பஃபலோ நியூஸின் மார்க் சோமர் பிபிசியிடம் கூறியுள்ளார். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அந்த தாக்குதல்தாரி, திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தன்னிடம் கூறியதாக மார்க் சோமர் தெரிவித்தார்.

அவர் தாக்கத் தொடங்கிய உடனேயே தாக்குதல்தாரியிடம் இருந்து ருஷ்டியை மீட்க 10 முதல் 15 பேர் வரை ஓடோடிச் சென்றதாகவும் அந்த நேரத்தில் ருஷ்டி சுமார் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான நிமிடங்கள்வரை தரையிலேயே சுருண்டு விழுந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு உடன் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வெளியே காத்திருந்த ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு செல்ல உதவியுள்ளனர்.

“பொதுவாகவே சல்மான் ருஷ்டி மேலதிக பாதுகாப்பு காவலர்கள் புடை சூழ வெளியே வருவார். “அவருக்கு போதிய பாதுகாப்பு இருந்திருக்காது என்று நம்புவது கடினமாக உள்ளது. அனேகமாக நிகழ்ச்சி தொடங்கிய சில நொடிகளில் அவரைத் தாக்க வந்தவர் மேடை ஏறியிருக்க வேண்டும்,” என்கிறார் செய்தியாளர் சோமர்.

சல்மான் ருஷ்டி தாக்குதல்
கார்ல் லெவன், பார்வையாளர் பகுதியில் 14 அல்லது 15வது வரிசையில் இருந்தவர்.

தாக்குதலை நேரில் பார்த்த கார்ல் லெவன், பிபிசியிடம் பேசும்போது, “நடந்த சம்பவத்தால் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் “இன்னும் பதற்றத்துடனேயே உள்ளனர்” என்கிறார். “இப்படியொரு காட்சியை பார்ப்பது முற்றிலும் பயங்கரமான விஷயம்,” எனக்கூறும் அவர், ருஷ்டியை அந்த நபர் திரும்பத் திரும்ப தாக்கியதாகவும் தெரிவித்தார்.

மூடிய அரங்கில் நடந்த தாக்குதலில் கார்ல் லெவன், பார்வையாளர் பகுதியில் 14 அல்லது 15 வரிசைகள் பின்னால் அமர்ந்திருந்ததாக கூறினார்.

சாத்தானின் வசனங்கள் வெளியானபோது என்ன நடந்தது?

  • இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 1981இல் மிட்நைட் சில்ட்ரன் என்ற புதினத்தை எழுதியதன் மூலம் புக்கர் பரிசு வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பிரிட்டனில் மட்டும் இவரது புத்தகம், பத்து லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது.
  • ஆனால் சல்மான் ருஷ்டி, நான்காவதாக எழுதி 1988இல் வெளியிட்ட “தி சாத்தானிக் வெர்சஸ்” (சாத்தானின் வசனங்கள்) – அவர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தலைமறைவு வாழும் நிலைக்கு அவரைக் கட்டாயப்படுத்தியது.
  • மனதில் பட்டதை எழுத்து வடிவில் வெளிப்படையாக பதிவு செய்யக் கூடியவராகவும், நவீனத்துவ காலத்துக்குப் பிந்தைய கருத்தாக்கங்களையும் கொண்டவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் சல்மான் ருஷ்டி எழுதிய அந்த புத்தகம் சில முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியது.
  • காரணம், அந்த புத்தகத்தின் உள்ளடக்கம், தெய்வ நிந்தனைக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டு அதற்கு சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.
சல்மான் ருஷ்டி தாக்குதல்

  • அந்த புத்தகம் வெளிவந்து சரியாக ஒரு வருடம் கழித்து, இரானின் மூத்த மத குருவாக அப்போது இருந்த ஆயடூலா ருஹோல்லா கொமனேயி, சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு அழைப்பு விடுத்தார். சல்மான் ருஷ்டியை கொல்வோருக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதி தரப்படும் என்று அவர் அறிவித்தார்.
  • அந்த நடவடிக்கையும் அந்த காலகட்டத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அதே சமயம், அந்த புத்தகம் வெளிவந்த பிறகு ஏற்பட்ட வன்முறையில் அந்த புத்தகத்தை மொழிபெயர்த்தவர்கள் சிலர் உள்பட டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
  • கொமனேயி அறிவித்த ஃபத்வா திரும்பப் பெறப்படாத நிலையில் அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரானில் ஆளுகையில் இருக்கும் அரசு எந்த கருத்தையும் வெளியிடாமல் ஒதுங்கியே இருந்தது.

யார் இந்த சல்மான் ருஷ்டி?

இந்தியாவில் பிறந்து பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றிருப்பவர் சல்மான் ருஷ்டி. மரண அச்சுறுத்தல் உள்ளதைத் தொடர்ந்து அவருக்கு பிரிட்டன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து வந்தது. அதே சமயம், 2008ஆம் ஆண்டு வரை ருஷ்டிக்கு எதுவும் ஆகாதபோதும், ஜப்பானில் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் 1991ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.

2007ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசி சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக “நைட் பேச்சிலர்” என்ற சர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் அவர் அங்கத்தினராக தேர்வானார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் இவருக்கு பதின்மூன்றாவது இடத்தை வழங்கியது.

சல்மான் ருஷ்டி தாக்குதல்

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் எழுதிய லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் என்ற புத்தகத்தை எழுதினார்.

2007ஆம் ஆண்டில் இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்பூர் இலக்கிய விழாவில், சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அப்போது அவருக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் நிலவுவதாக கூறப்பட்டதால் மாநில காவல்துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவர் தமது பயண திட்டத்தை கைவிட்டார்.

Previous Story

தமது குப்பை வண்டியை ஓட்டுவதற்கு, ராஜபக்ஷக்கள் ஒருவரை நியமித்துள்ளனர் - விஜித ஹேரத்

Default thumbnail
Next Story