75 வருடங்களுக்கு பிறகு..

நிஜக்கதை

1947 இந்தியா சுதந்திரமடைந்த போது பாக்.பிரிவினை என்ற வேதனையையும் சுமக்கவேண்டி வந்தது. இங்கிருந்து பாக்.சென்ற முஸ்லீம் தம்பதிகளான இக்பால்-அலா ராக்கியினர் கண்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை கண்ணில் பட்டது.

அந்த குழந்தை கலவரத்தால் கொல்லப்ட்ட தன் தாயின் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா இறந்தது கூட தெரியாமல் பசியின் தேவைக்காக முட்டி மோதி அழுது கொண்டிருந்தது.

அந்த காட்சியைக்கண்டு கண்கள் குளமான நிலையில் குழந்தையை வாரி எடுத்த இக்பால் தம்பதியினர் குழந்தையின் பசியை போக்கிவிட்டு தங்களுடனேயே கொண்டு சென்றனர்.

பாக்கிஸ்தானில் அடைக்கலம் பெற்ற இக்பால் குடும்பத்தில் அவர்கள் கொண்டு சென்ற குழந்தை மும்தாஜ் என்ற பெயருடன் மகளாக வளர்ந்து தாயாகி பின் பேரன் பேத்தி எடுக்கும் பாட்டியாகிப்போயிருந்தார்.

இந்த நிலையில் மும்தாஜின் வளர்ப்பு தந்தையான இக்பால் வயது முதிர்வு காரணமாக இறக்கும் தருவாயை எட்டினார்.

அவர் மனதில் என்ன நினைத்தாரோ? தனது 75 வயதான வளர்ப்பு மகள் மும்தாஜை அருகில் அழைத்து, நீ எங்கள் வளர்ப்பு மகள்தான் என்ற உண்மையையும் நடந்த சம்பத்தையும் சொல்லிவிட்டு இறந்து போனார்.

இந்த வயதில் தன் வாழ்வில் இப்படியொரு செய்தியா? என நினைத்த மும்தாஜ் நினைவிற்கு வராத தாய் மற்றும் குடும்பத்தை நினைத்து கண்ணீர் விட்டார்.

தாயின் கண்ணீரைப் பார்த்த மகன் சபாஷ் சம்பவம் நடந்த ஆண்டு இடம் போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன் தாயின் குடும்பத்தார் யாராவது இருக்கிறீர்களா? எனக்கேட்டிருந்தார்.

இவரது வேண்டுகோள் வைரலாக பரவியதன் எதிரொலி மும்தாஜின் நான்கு சகோதரர்களுமே உயிருடன் இருப்பது தெரியவந்தது

.சர்தார் சிங்,

குர்பீந்தர் சிங்,

நரேந்திர சிங்,

அம்ரீந்தர் சிங் ஆகிய அந்த நான்கு சகோதரர்களும் 75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தங்கள் சகோதரியை பார்க்க பிரியப்பட்டனர், இவர்களது சந்திப்பிற்கு ஒரு குருத்வராவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இருவரும் குடும்பத்தினரும் சந்திக்கும் போது நிறைய பேச எண்ணியிருந்தனர் குறிப்பாக இந்திய சகோதரர்களுக்கும் பாக்,வாழ் சகோதரிக்கும்..
ஆனால் சந்திக்கும் போது கண்ணீர் நிறைந்த கண்கள்தான் பேசிக்கொண்டன.

Previous Story

தாஜ்மஹால் இந்து கோயிலா?

Next Story

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்:அநுர காட்டம்