ராக்கெட்ரி நம்பி விளைவு: ஊடகங்கள் பார்வையில் படம் எப்படி இருக்கிறது?

நடிகர்கள்: மாதவன், சிம்ரன்

இசை: சாம் சி.எஸ்.

இயக்கம்: மாதவன்.

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வேறு நாடுகளுக்கு முக்கியமான ரகசியங்களை விற்றதாக 1994இல் கைது செய்யப்பட்டார். 1998இல் அவர் குற்றமற்றவர் என இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அவரது கதையை ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் மாதவன். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் குறித்து, ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஆண்டின் தேசிய விருதுகளில் பலவற்றை இந்தப் படம் அள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது தினமலர் நாளிதழ்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறும்போது, “1994ஆம் ஆண்டு அண்டை நாட்டுக்கு நமது ராக்கெட் ரகசியங்களை விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கேரள காவல்துறையால் சிறையில் அடைக்கப்பட்டார்.

50 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் நான்கு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 1998ஆம் ஆண்டுதான் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இப்படி பல சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான் இந்த ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.

இந்தியாவில் ஆரம்பமாகும் கதை பின்னர் அமெரிக்கா பயணித்து, மீண்டும் இந்தியா திரும்பி, பின்னர் ரஷ்யா சென்று இந்தியா திரும்புகிறது” என்று கூறியுள்ளது தினமலர்.

ஆனால், நல்ல நோக்கங்கள் மட்டுமே மகத்தான படங்களைத் தந்துவிடுவதில்லை என்கிறது தி ஹிந்து ஆங்கில நாளிதழ். “கற்பனைக் கதைகளைப் படமாக எடுப்பதைவிட, வாழ்கைச் சரிதங்களைப் படமாக எடுப்பது எளிது. மாதவனுக்கு முன்பாக மிகுந்த செறிவுமிக்க சம்பவங்கள் இருந்தன.

நம்பியின் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தேர்வுசெய்தாலே போதும். அதில் மாதவன் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால், அதைத் திரைப்படமாக மாற்றும்போது, ஏவுகணை திசை மாறிச் சென்றதைப் போல இருக்கிறது.

திரைப்படத்தின் முதல் பாதி ஒரு நீளமான அறிவியல் வகுப்பைப் போல இருக்கிறது. பலரால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அறிவியல் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார்கள். திரைப்படத்தின் இந்தப் பகுதியில் மிகக் குறைவான மசாலாவே இருக்கிறது.

ஏதோ, நம்பியின் அறிவியல் வாழ்வில் நடந்த சாதனைகளை ஆவணப்படுத்துவது போல இருக்கிறது. நம்பி ஒரு ஜீனியஸ் என்று சொல்வதற்காக பல காட்சிகள் இந்தப் பாதியில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தக் கதையில் பல வெளிநாட்டு நடிகர்கள் தேவைப்படுவார்கள். ஆனால், இவர்கள் அனைவருடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் மிக சுமாராக இருக்கிறது. படத்தின் தமிழ்ப் பதிப்பில் பல வசனங்கள் வேடிக்கையாக ஒலிக்கின்றன” என்கிறது தி ஹிந்து நாளிதழ்.

ராக்கெட்ரியின் கதை சொல்லப்பட வேண்டியதுதான். அந்த எண்ணத்திற்குப் பின்னால் உருவாகியிருக்கும் திரைப்படம், சில இடங்களில் மட்டும் நன்றாயிருக்கிறது. பல இடங்களில் மோசமாக இருக்கிறது என்கிறது தி ஹிந்து.

படத்தின் திரை நேரத்தை தேவையில்லாமல் வீணடித்திருக்கிறார் மாதவன் என்கிறது நியூஸ் 18 இணைய தளம். “இந்தப் படத்தின் மிகப் பெரிய பிரச்னை அதன் மொழிதான். பிரெஞ்சுக்காரர்கள், ரஷ்யர்கள், பிரிட்டிஷ்காரர்கள் தமிழ் பேசுகிறார்கள். சிபிஐயை சேர்ந்தவர்களும் தமிழில் பேசுகிறார்கள்.

பன்மொழித் திரைப்படமாக உருவாகியிருக்க வேண்டிய ஒரு கதையை, சொதப்பியிருக்கிறார்கள். உதட்டசைவும் வசன உச்சரிப்பும் சுத்தமாகப் பொருந்தவில்லை. நடிகர்களின் நடிப்பும் இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானியின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஏதோ துணை நடிகையைப் போல வந்து போகிறார். விக்ரம் சாராபாயாக வரும் ரவி ராகவேந்திரரும் அப்துல் கலாமாக வரும் குல்ஷன் குரோவரும் மிகக் குறைவாகவே தென்படுகிறார்கள்.

இவ்வளவு நீளத் திரைப்படமும் முழுக்க முழுக்க மாதவனுக்காக மட்டும்தானா என்ற எண்ணத்தை படம் ஏற்படுத்துகிறது. அப்படியிருந்தும் அந்தக் கதைக்கு அவர் நீதி செய்யவில்லை. விக்ரம் வேதா படத்திலும் Tanu Weds Manu படத்திலும் நடித்த கலைஞனா இவர் என்று தோன்றுகிறது” என்கிறது நியூஸ் 18 ஆங்கில இணையதளம்.

இதனை வரவேற்கத்தக்க முயற்சி என்கிறது இந்து தமிழ் திசை. “மாதவன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஒரு விஞ்ஞானியின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக, பொய்க் குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு அநீதியால் பாதிக்கப்பட்ட தன் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட ஒருவரின் கதையாக பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்படிப் பார்க்கும்போது மாதவனின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. படத்தைப் பொறுத்தவரை அதன் முதல் பாதி, முழுவதும் டெக்னிக்கலான வார்த்தைகளாலும், ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் என புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாகவே கடக்கிறது” என்கிறது தமிழ் திசை.

Previous Story

பொதுமக்கள் சுதந்திரமாகச் செயற்பட முன்வர வேண்டும்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் 

Next Story

"குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" -