5-மாநில தேர்தல் முடிவுகள் 10ஆம் தேதி

-எம். . பரணிதரன்-

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின. அதில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜகவுக்கு சாதகமான நிலையும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பும், கோவாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

கிட்டத்தட்ட கருத்துக் கணிப்புகளை நடத்திய ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகளும் இதே கருத்துக் கணிப்புகளையே வெளியிட்டுள்ளன. அவை உண்மையாகுமா பொய்யாகுமா, அவற்றின் நம்பகத்தன்மை என்ன போன்ற விவாதங்கள் வழக்கம் போல இந்த முறையும் சில கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் இந்த ஐந்து மாநில தேர்தல்கள், அடுத்து சில மாதங்களில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தலைவர் தேர்தல், துணைத் தலைவர் தேர்தல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

காரணம், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு 403 உறுப்பினர்கள், மக்களவைக்கு தேர்வான 80 உறுப்பினர்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 31 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் இந்த மாநிலத்தின் பிரதிநிதிகள் சதவீதம் 15.3 ஆகும்.

அடுத்ததாக பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு 117 உறுப்பினர்கள், அங்கிருந்து மக்களவைக்கு தேர்வான 13 உறுப்பினர்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 7 உறுப்பினர்கள் உள்ளனர். உத்தராகண்டுக்கு 70 எம்ல்ஏக்கள், ஐந்து மக்களவை உறுப்பினர்கள், 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மணிப்பூரில் 30 எம்எல்ஏக்கள், கோவாவில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த இரண்டும் தலா இரண்டு மக்களவை உறுப்பினர்களையும் ஒரு மாநிலங்களவையும் கொண்டுள்ளன.

எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் உத்தரபிரதேசம் ஐந்து மாநில தேர்தல்கள் நடத்தப்படும் மாநிலங்களில் முதன்மையாக இருப்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தத் தேர்தல்கள் ஏன் முக்கியம்?

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கொரோனா பெருந்தொற்று கடுமையான தாக்கத்தை விளைவித்து பல நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. அந்த தாக்கத்துக்குப் பிறகு இந்தியா சந்திக்கும் முதலாவது பெரிய வாக்குப்பதிவாக இந்த ஐந்து மாநில தேர்தல்கள் உள்ளன.

மேலும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தால், அது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்திறன் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாளும் திறமைக்கு தேர்தல் நடந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் கொடுத்த அங்கீகாரமாகவும் கருதப்படலாம்.இந்த ஐந்து மாநில தேர்தலை 2024ஆம் ஆண்டில் இந்தியா சந்திக்கவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டம் அல்லது அரையிறுதி என்று கூட சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

முக்கிய சிக்கல்கள் என்ன?

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள வட இந்திய மாநிலங்களான உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களில் மதம் தொடர்பான பிரச்னைகள் முக்கியமானவை. இந்து, முஸ்லிம்கள், தலித்துகளை மையப்படுத்திய அரசியல் பிரசாரங்கள் அங்கு எதிரொலித்தன.இந்தியாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்னையை பஞ்சாப் எதிர்கொள்கிறது, கோவா மாநிலத்தில் சுரங்கத்தை அனுமதிப்பதா இல்லையா என்பதில் அரசியல் கட்சிகள் இடையே வேறுபாடு காணப்பட்டு அது அரசியலிலும் ஆழந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் தொலைதூர வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சில கட்சிகள் ராணுவம் செயல்பட அனுமதிக்கும் சிறப்பு சட்டங்களை ரத்து செய்வதாக உறுதியளித்து தேர்தலை எதிர்கொண்டன.சில பிரச்னைகள் அரசியல் கட்சி வேறுபாடின்றி ஐந்து மாநிலங்களிலும் காணப்பட்டன.. நாட்டின் ஏழ்மையான மக்களுக்கான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், பல தசாப்தங்களாக பாஜக அல்லாத கட்சிகள் வழங்கி வந்த தவறான நிர்வாகத்திற்குப் பிறகு தூய்மை ஆக ஆட்சியை வழங்கியதாகவும் பாஜக கூறுகிறது.குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் மத்தியில், பொருளாதாரம் தடுமாறுவதையும், வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லை என எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன?

பாஜக ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாநிலங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால் கூட அது மத்தியிலும் சம்பந்தப்பட்ட மாநிலத்திலும் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.மறுபுறம் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களில் போதிய வெற்றியை எட்டாவிட்டால் அது இந்த தேர்தலிலும் அந்த கட்சியின் தலைமைத்த உத்திகளை கேள்விக்கு உள்ளாக்கும்.

நேரு அரசியல் வம்சத்தில் தந்தை, பாட்டி மற்றும் கொள்ளு தாத்தா அனைவரும் இந்தியாவின் பிரதமர்களாக இருந்தவர்கள். அவர்கள் வழிவந்த மற்றும் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்து வரும் ராகுல் காந்தியின் தலைமை குறித்த அதிருப்தியாளர்களின் கேள்வியை மேலும் வலுவாக்கும்..

கோவா அல்லது பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வலுவான தடம் பதிக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அவை உண்மையாகும் பட்சத்தில் தற்போது டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் செல்வாக்கை தேசிய அரங்கில் உயர்த்தும்.

கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன?

வாக்களிப்பின் சிக்கலான தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் நம்பகத்தன்மையற்றதாக இருக்கலாம்.இந்த முறை நடந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் உத்தரபிரதேசத்தை பாரதிய ஜனதா கட்சி தக்க வைத்துக்கொள்ளலாம்.

அது நடந்தால் பாஜகவுக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய கட்சிகவும் அந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாகவும் தொடர வாய்ப்புள்ளது.

கருத்துக் கணிப்புகள் உண்மையாகும்பட்சத்தில் அண்டை மாநிலமான உத்தரகாண்டையும் பாஜக தக்க வைக்க வாய்ப்புள்ளது.கோவா, மணிப்பூரில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் கூறும் அதேவேளை, அங்குள்ள கள சூழலில் கூட்டணி ஆட்சி என்பது இந்த மாநிலங்களில் இன்றியமையாதது போலவே தோன்றுகிறது.

பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகும் நிலையில், பாஜகவுக்கு அங்கு சாதகமான சூழல் இல்லை என்கிறது கருத்துக் கணிப்பு. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட திடீர் பிளவு, அம்மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பதவி விலகி பாஜகவுக்கு அனுதாபியாக மாறி வாக்கு சேகரித்தது, நவ்ஜோத் சித்துவின் வழிகாட்டுதலில் முதல்வர் சரண்ஜித் சன்னியின் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது போன்ற சூழ்நிலைகள் அங்கு அரசியல் போக்கை மாற்றலாம் என ஒரு கருத்து உள்ளது.

இவை தவிர, விவசாயிகள் பிரச்னை இந்த தேர்தல்களில் கடுமையான பிரசார முழக்கமாக இருந்தன. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நரேந்திர மோதி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் தொடர்ந்த போராட்டங்கள், அவற்றை ஒடுக்க நடந்த காவல்துறை பலப்பிரயோகம், உயிரிழப்பு சம்பவங்கள் மத்தியில் ஆளும் பாஜக, பஞ்சாபில் அந்த கட்சி வலுவான அரசியல் சக்தியாக மாறும் வாய்ப்பை குறைத்து விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இனி என்ன நடக்கலாம்?

பஞ்சாபில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்டுள்ள சீக்கியர்களின் வாக்கு வங்கியைக் கவர இம்முறை பாஜக முயன்றது. கோவாவில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்டுள்ள கிறிஸ்துவ சமூகத்தினரை கவரவும் அந்த கட்சி விரும்புகிறது. அதன் வெளிப்பாடகவே கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி போப் ஆண்டவரைச் சந்தித்த படங்கள், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட கோவாவில் உள்ள கத்தோலிக்கர்கள் மத்தியில் இந்த ஆண்டு அதிகம் பகிரப்பட்டது. ஆனால், அவை எந்த அளவுக்கு பலன் கொடுத்தன என்பது மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.

உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால், மோதியின் வருங்கால வாரிசாக யோகி ஆதித்யநாத் உருவெடுப்பார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்திய மாதங்களில் அவரது செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையிலான பிரசாரம், மோதிக்கு இணையாக சொந்த மாநிலத்தைக் கடந்து முன்னேறும் தலைவர் என்ற பிம்பத்தையும் யோகி ஆதித்யநாத் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார். அது இனி மோதி-யோகி இடையிலான அரசியல் போட்டியாக கூட உருப்பெறலாம் என்ற வாதத்தையும் ஒதுக்கி விட முடியாது.

காங்கிரஸில் பிரியங்கா காந்தி வாத்ரா உத்தர பிரதேச தேர்தல் வியூகத்தின் பொறுப்பை வகிக்கிறார். அவரது உத்திகளுக்கு ஏற்ப அவரது சகோதரரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

உத்தர பிரதேசத்தில் கடந்த காலங்களில் பலமுறை ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, இந்த தேர்தலிலும் சரிவை சந்தித்தால் அது அதன் தலைவர் மாயாவதிக்கு பெரிய பின்னடைவாகலாம். அவர் ஊக்குவித்து வரும் தலித் வாக்கு வங்கி அரசியல் என்பது இனி எந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது என்பதற்கு தேர்தல் முடிவுகள் விடை கொடுத்து விடும்.

பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தியால் அங்கீகரிக்கப்பட்ட நவ்ஜோத் சித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார். அவரது தலைமைத்துவ திறன்கள் இந்த தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கலாம். சித்துவின் தலைமை பங்களிப்பு பற்றிய காங்கிரஸ் கட்சியின் உள்விவாதங்களிலும் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பஞ்சாபில் உள்ள சிரோமணி அகாலி தளம் சிறுபான்மை மத அரசியலுக்கு தலைமை தாங்குகிறது. அங்கு கடந்த சில தேர்தல்களில் களமிறங்கி புதிய வலுப்பெறும் சக்தியாக ஆம் ஆத்மி வலுப்பெற்றால் அது பிற மாநிலங்களில் தேசிய அரசியலை மையப்படுத்தி காய்களை நகர்த்தி வந்த காங்கிரஸ், பாஜகவுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாகவே கருதப்படலாம்.

அந்த வகையில் இந்த தேர்தல் முடிவுகள் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தமது பார்வையை பிபிசி தமிழிடம் முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மையாகி பாஜக வெற்றி பெற்றாலும் கூட பூஜ்ஜியத்தில்தான் ராஜ்ஜியம் என்ற அரசியல் கோட்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது என்கிறார் அவர்.

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் எண்கள் போல சுற்றிச்சுற்றி இந்த எண்ணிக்கை அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் பாஜக குறைந்தபட்சம் 300 இடங்களில் வென்றால் மட்டுமே அதை மோதிக்கு சாதகமான வெற்றியாக பார்க்க முடியும் என்று வாதிடுகிறார் குபேந்திரன். இதேபோல உத்தராகண்டில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது என நம்பலாம். அதுவே எண்ணிக்கை குறைந்தாலோ, வெற்றி இலக்க எண்களை அடையாவிட்டாலோ அது அந்தக் கட்சிக்கு பின்னடைவுதான் என்கிறார் அவர்.

பொதுவாகவே ஒரு கட்சி ஆளும் மாநிலத்தில் ஐந்து வருட ஆட்சி நிறைவடையும்போதே மக்களுக்கு அதன் ஆட்சியாளர்கள் மீது சலிப்பு வருவது இயல்பானதுதான். அதையும் மீறி பாஜக, உத்தர பிரதேசத்தில் ஏழாவது ஆண்டாக ஆட்சியை தொடர்ந்து இப்போது தேர்தலை எதிர்கொள்கிறது. இப்போதும் அந்தக் கட்சிக்கு வாக்காளர்கள் வெற்றியைக் கொடுத்தால் அதை அந்தக் கட்சிக்கு கொடுத்த அங்கீகாரமாகவே கருத வேண்டும் என்றும் குபேந்திரன் கூறினார்.

கோவாவில் தொங்கு சட்டசபைக்கான சூழல் அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுவது பற்றி கேட்டதற்கு, அப்படியொரு நிலைமை வந்தால் அது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும் என்ற குபேந்திரன், அங்கு கூட்டணி ஆட்சியமைக்க மீண்டும் ஒரு குதிரை பேரம், ஊழல் சர்ச்சைகள் போன்ற நிலைமை வராமல் தவிர்ப்பதை தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டணி என்று கூறினார்.

 

Previous Story

முடிவை நோக்கி போர்! விட்டுக்கொடுக்க ரெடி! ரஷ்யாவிற்கு சாதகம்!?

Next Story

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன்!