“இரத்தக் குளிப்பா சரணாகதியா” புதின்

-யூசுப் என் யூனுஸ்-

உக்ரைன்: அதிபர் ஸெலென்ஸ்கி, மக்கள் தொகை 4கோடி 11 இலட்சம். 603628 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு. தலைநகர் கிவ். 1917ல் நடந்த ரஷ்யாப் புரட்சிக்குப் பின் 1922 ரஷ்யாவுடன் இணைந்த உக்ரைன். 1991ல் அதிலிருந்து பிரிந்து சென்றது. ஆனாலும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமான உறவுகள் இருக்கின்றன. 1991 க்குப் பின்னர் உக்ரைன் தனி நாடான போது அங்கு ரஷ்யா ஆதரவு ஆட்சியாளர்களும் அடிக்கடி பதவிக்கு வந்திருக்கின்றார்கள்.

அதே போன்று மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க ஆதரவுப் போக்குடையவர்களும் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இப்போதய அதிபரும் அப்படித்தான். அந்த நாட்டு மக்கள் தொகையில் பதினெட்டு சதவீதம் ரஷ்யா மக்கள். மேலும் நெடுங்காலமாக ரஷ்யா கூட்டில் உக்ரைன் இணைந்திருந்ததால் கலாச்சாரப் பராம்பரிய நெருக்கமும் அங்கு இருக்கின்றது.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் உக்ரைன் பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த உக்ரைனுக்கும் நமக்கும் உறவுகள் இருக்கின்றன. இங்கும் உக்ரைன் பற்றி அடிக்கடி உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

மிக் விமான கொள்வனவில் நடந்த கொள்ளை. சர்ச்சைக்குறிய உதயங்கன வீரதுங்ஹ பிரதமர் எம்.ஆர். மனைவி சிரந்தியின் சகோதரர் இங்குதான் தூதுவராக இருந்திருக்கின்றார். கொரோன காலத்தில் உல்லாசப் பிரயாணிகளை இங்கு கொண்டு வந்து இறக்கிய போது ஏற்பட்ட சர்ச்சை. பிரதமர் மகன் அங்கு பெற்ற பட்டப் படிப்பு என்பவற்றால் இந்த நாடு பற்றி நமது ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அந்த உக்ரைன் மீதுதான் இப்போது படையெடுத்திருக்கின்றது ரஷ்யா. நீண்ட நாள் இங்கு நெருக்கடி இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும் கொந்தளிப்பு இருந்து வந்தது. இந்தப் பின்னணியில் தான் வியாழன் உக்ரைன் நேரப்படி காலை ஐந்து மணிக்கு ரஷ்யா தனது தாக்குதலைத் துவங்கியது.

தற்போது மூன்று பக்கத்தால் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதுதான் இந்தத் தாக்குதல் நடக்கின்றது என்றாலும் அப்பாவி மக்களும் இதில் சிக்கிக் கொள்வது தவிர்க்க முடியாது. இந்த நெருக்கடிக்கு நீண்ட வரலாறும் குறுகிய கால சம்பவங்களும் இருக்கின்றன.

தாக்குதலைத் துவங்கிய போது இரத்தத்தில் குளிக்கப் போகின்றீர்களா ஆயுதங்களை கீழே போட்டு சரணாகதியடையப் போகின்றீகளா என்று கேள்வி எழுப்பி இருந்தார் புதின். நாம் மனிதாபிமான அடிப்படையில் மக்களுடைய நலனுக்குத்தான் இந்த தாக்குதல் என்று அவர் வேறு விளக்கம் கூறி இருக்கின்றார். அமெரிக்க ஈராக்கில் தாக்குதலை மேற்கொண்ட போதும் சீரியா, யூகேஸ்லாவியா-பொஸ்னியா, மற்றும் குரைசியாவில் தாக்குதல்களை நடாத்திய போது அதற்கு மனிதாபிமான நடவடிக்கை என்று பெயர் வைத்திருந்தீர்கள்.

உக்ரைன் என்பது எமது இன உறவுகளுடன் தொடர்புடைய ஒரு நாடு. எங்கோ இருக்கின்ற நீங்கள் அந்த நாடுகளுக்குள் புகுந்து அங்கு நடவடிக்கைகளில் இறங்க முடியுமானால் நாம் எமது உறவுகள் விவகாரத்தில் இங்கு நடவடிக்கை எடுத்தால் அது பற்றி நீங்கள் எப்படிக் கேள்வி எழுப்ப முடியும் இது அந்த மக்களின் சுதந்திரத்தக்கான ஒரு போரேயன்றி வேறில்லை என்று பதில் கொடுத்திருக்கின்றார் ஐ.நா.விலுள்ள ரஷ்யா தூதுவர்.

இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நமக்கு இந்தப் போர் குறித்து தனிப்பட்ட கருத்தும் விருப்பும் இருக்கலாம். என்றாலும் நாம் முடிந்தளவு நடு நிலையாக நின்று கருத்துக்களைச் சொல்ல முனைகின்றோம். உலகில் செல்வாக்கான ஒரு நாடான ரஷ்யா அந்த நாட்டின் வாசல்படியில் நேட்டோ கூடாரம் போடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது-முடியாது!

இதுதான் பிரச்சனையின் அடிப்படை-துவக்கம். தற்போதுள்ள உக்ரைன் ஜனாதிபதி தன்னை நேட்டோவில் இணைத்துக் கொள்வதில் காட்டிய ஆர்வம்தான் இன்று அந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்கக் காரணம். 2005ல் இருந்து இந்த முயற்ச்சி அமெரிக்காவின் தூண்டுதலினால் அங்கு நடந்து வருகின்றது.

படைப் பலத்தைப் பொறுத்த வரை ரஷ்யா உலகில் இரண்டாம் இடத்திலும் உக்ரைன் இருபத்தி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. எனவே போரின் முடிவு என்ன என்று புரிந்து கொள்ள முடியும். செல்வாக்கு மிக்க சீனா இது அவர்களது உள்நாட்டு விவகாரம் என்று கூறுகின்றது. ஆகவே அது எந்தப் பக்கம் இருக்கின்றது என்பது தெளிவானது. ஈரான், வட கொரியா, ஆர்மேனியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான். தஜிகிஸ்தான். பெலாரஸ் என்பன ரஷ்யாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன.

உலகில் உள்ள பெருபாலான நாடுகள் நடுநிலை என்றுதான் நடந்து கொள்ளும் என்று நாங்கள கருதுக்னிறோம். போர் துவங்குகின்ற போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவில்தான் இருந்தார் இப்போது பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்க உறவு ஏற்பட்டு வருகின்றது.

இது இந்தியா அமெரிக்காவின் பக்கம் போகலாம் என்று ரஷ்யாவின் அச்சம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை. ஆனால் இந்திய உறுதியாக அப்படி ஒரு தீர்மானத்துக்குப் போகும் என்று நாம் நம்பவில்லை. அது மிகவும் நிதானமாகத் தான் இன்றுவரை காய்களை நகர்த்தி வருகின்றது. ஆனால் அமெரிக்கா இந்தியாவை உள்ளே இழுத்துக் கொள்வதில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இது இன்றுவரை எட்டாக் கனி நிலை. இதனை நாம் முன்பும் சொல்ல இருந்தோம்.

உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு புதின் இப்படி ஒரு செய்தியைச் சொல்லி இருக்கின்றார். மக்களிடம் நாட்டைக் கொடுத்து விட்டு ஓடிவிடுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸ் ரஷ்யாவுக்குப் பக்க பலமாக களத்தில் இறங்கத் தயாராக இருக்கின்றது. நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் பெலாரஸ் பக்கமாகவும் தாக்குதல் துவங்கி விட்டது.

உக்ரைக்கு நேட்டோ நாடுகள் பெரும் நம்பிக்கைகளைக் கொடுத்தாலும், அது நேரடியாக அந்தப் போரில் அதற்கு உதவ முடியாதுள்ளது. காரணம் அது இன்னும் நேட்டோவுடன் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தனது அங்கத்துவ நாடுகள் மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று அமெரிக்கா கூறுகின்றது. எனவே இது யானைக்கும் பூனைக்கும் நடக்கின்ற ஒரு சண்டை. உக்ரைன் தலைவர்கள் பிராந்திய பின்னணியை மையமாக வைத்து இராஜதந்திர ரீதியில் செயல்பட்டிருக்கலாம் என்பதுதான் எமது கருத்து.

மேலும் 1991ல் ஐக்கியப்பட்டிருந்த ரஷ்யாவில் இருந்து 14 நாடுகள் பிரிந்து சென்று விட்டன. என்றாலும் அவற்றில் பல நாடுகள் இன்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகின்றன. சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து பிரிந்து போய் நேட்டோவுடன் இணைந்து கொள்வதில் ஆர்வமான இருக்கின்றன. ஆனால் இதனை ரஷ்யா ஏற்றுக் கொள்ளத் தயாரக இல்லை. இதற்குப் பலிவாங்கும் முகமாக சில தினங்களுக்கு முன்னர் டன்பாஸ், லுகான்ஸ் ஆகிய பிரதேசங்களை ரஷ்யா தனி நாடாகப் பிரகடனப்படுத்தி விட்டது.

அது உக்ரைனை வம்புக்கு இழுக்கும் செயல் ஏற்கெனவே இந்தப் பிராந்தியம் ரஷ்யா சார்பு கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவர்களுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து இன்றுவரை இருபதாயிரம் பேர்வரை பலியாகி இருக்கின்றார்கள். அதற்கு முன்னர் உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா 2014ல் கைப்பற்றி விட்டது.

வியாழன் ஆரம்பித்த போரில் துவக்க நாளில்  11 விமானங்களை ரஷ்யா வீழ்த்தி இருக்கின்றது 74 படை முகாம்களைத் தகர்த்திருக்கின்றது. இப்போது உக்ரைனில் அனைத்து இடங்களில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கினறது. தலைநகர் கியூம் கடும் தாக்கதலுக்கு இலக்காகி வருகின்றது. தரை ஆகாயம் கடல் வழிகளில் தாக்குதல் நடக்கின்றது.

பிந்திய தகவல்களின் படி போர்க் களத்தில் உக்ரைன் தரப்பில் 148 பேர் பலி. 500 பேர் வரை காயம். இழந்த விமானங்கள் 14. ரஷ்யா தரப்பு 17 பேர் பலி. 46 பேர் காயம் இழந்த விமானங்கள் 5. இருந்தாலும் இந்த செய்திகள் பக்கச் சார்பான செய்திகளாக இருக்க முடியும். ஒருவர் மற்றவர்களைப் பற்றி சொல்லிக் கொள்கின்ற தகவல்கள்தான் இவை. இது போர்க்களத்தில் சாதரணமானவை. ரஷ்யா வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் 6257. அமெரிக்க வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் 4018.

ஜீ 7 நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. நாம் இந்த செய்தியை எழுதிக் கொண்டிருக்கின்ற வெள்ளி பகல் 2 மணிக்கு புதினுடன் பிரான்ஸ் அதிபர் தொலைபேசியில் கலந்துரையாடிதாக அவரே தெரிவிக்கின்றார். உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தான் புதினுடன் பல தடவைகள் பேச முயன்றபோதும் புதின் பதிலளிக்க வராமையால் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரேன், உக்ரைன் அதிபர் வேண்டுகோளின் பேரில் புதினுடன் பேசியதாகக் கூறுகின்றார். சண்டையை நிறுத்துமாறு தான் அவரைக் கேட்டதாகவும் அவர் அதற்கு எந்தப் பதிலையும் தரவில்லை என்று கூறுகின்றார் பிரான்ஸ் அதிபர்.

செர்னோபில் அணு உலை அமைந்திருக்கின்ற பிரதேசங்கள் ரஷ்யா கட்டுப்பாட்டில் வந்து விட்டது. பல துறை முகங்களையும் அது கைப்பற்றி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் உக்ரைன் ரஷ்யாவின் பிடிக்குள் போய்விடும் என்று நாம் நம்புகின்றோம். அப்படி வருமாக இருந்தால் மீண்டும் ரஷ்யா சார்பு பொம்மை அரசு அங்கு அதிகாரத்துக்கு வரும்.

இந்தப் போர் ஏற்கெனவே பாதிக்ப்பட்டிருக்கின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் நெருக்கடியாக அதிகமான வாய்ப்பு இருக்கின்றது. உலக எரி பொருள் உற்பத்தியில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. எனவே பெற்றோலியா விலை ஏற்றம் நிச்சயம் நம்மை பாதிக்கும். அதே போன்ற கோதுமை  உற்பத்தியில் ரஷ்யா முக்கிய இடத்தில் இருக்கின்றது அது கூட இலங்கையில் தாக்கத்தை செலுத்தும். விலை அதிகரிக்கும்.

இந்தப் போர் நோட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு கௌரவப் பிரச்சினையாகப் போய்விட்டது புலிவாலைப் பிடித்த நிலை. ரஷ்யா தாக்குதலை நடத்தும் என்று பல ஆய்வாளர்கள் கருதவில்லை. ஆனால் ரஷ்யா போர் என்ற தெரிவை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னே எடுத்து விட்டது. இதனானால்தான் உக்ரைனை நேட்டோவில் சேர்க்கக் கூடாது என்று அது அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்டது.

ஆனால் அமெரிக்கா அதற்கு இணங்கவில்லை எனவேதான் ஆக்கிரமிப்பு என்று கதை முடியப் போகின்றது. எனக்கு வேறு வழி இருக்கவில்லை என்ற புதின் கதை இதனால்தான் வருகின்றது. தாக்குதல் நடத்தாது இருந்தால் உள்நாட்டில் புதின் பற்றிய இமேஜ கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் பயந்து விட்டார் என்று அவரது அரசியல் எதிரிகள் மட்டுமல்ல முழு உலகமே பேசி இருக்கும். என்பதும் யதார்த்தமானது.

உக்ரைன் நட்டாற்றில்!

மறு முனையில் இந்த விவகாரத்தில் பைடன் ஏதாவது செய்யாவிட்டால் அது அவருக்குப் பெரும் தலை குனிவைக் கொடுக்கும். உக்ரைனை பிழையான பாதையில் அழைத்துச் சென்று நட்டாற்றில் கைவிட்டு விட்டார்கள் என்று கூட நாம் இதனைச் சொல்ல முடியும். ரஷ்யாவைப் பகைத்துக் கொண்டு உக்ரைன் உயிர் வாழ்வது என்பது இலகுவான காரியமாக இருக்க மாட்டாது .

இது இலங்கை அரசியல் வாதிகளுக்கும் நல்லதொரு படிப்பினை இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கை தொழில்படுவது சிக்கலான விவகாரம். ஜே.ஆர். காலத்தில் பருப்பு ஆகாயத்தில் இருந்து கொட்டிய கதையும் நமக்கு நினைவில் இருக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள் இராஜதந்திரமாக நடந்து கொள்வது மிக மிக முக்கியமானது.

இப்போது அமெரிக்காவால் செய்யக் கூடிய விடயம் பொருளாதாரத் தடை என்று ரஷ்யாவை அச்சுறுத்துவது ஒன்று மட்டுமே. ஐரேப்பிய நாடுகள் பல ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை வைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே இது ரஷ்யாவுக்கு மட்டுமல்லாது அவற்றுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கும்.

இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் போருக்கு எதிரான பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் சென். பீர்ட்டர்ஸ் பேக்கில் போர் எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் நடந்திருக்கின்றன. இது புதின் விரோதிகள் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். படையினர் பலரைக் கைது செய்திருக்கின்றார்கள்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகள் ரஷ்ய மீது பொருளாதர தடைகளை விதித்தாலும் சீனா அதற்குக் கை கொடுக்கும் என்பது உறுதி. இன்று வட கொரிய ஈரான் போன்ற நாடுகள் நெடுநாளாக அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளானாலும் உயிர் வழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று சீனா வலுவாக இருப்பதால் முன்பு போல அமெரிக்காவின் தடைகள் முழு அளவிலான தாக்கங்களைச் செலுத்த மாட்டது.

அத்துடன் இந்தியா போன்ற நாடுகளும் நடு நிலை என்று இருக்கும் போது இந்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் என்ற கதைகள் கூட ஒரு காலத்தில் செல்லாக் காசாகி விட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். மேலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் நம்பகத்தன்மையும் உக்ரைன் விவகாரத்தினால் உலக அரங்கில் கேள்விக்குறியாகி விடும்.

ஈரான் மீது தாக்குதல்!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மூக்குடைபட்டால் அதனை சரி செய்ய அவர்கள் எடுக்கின்ற ஒரு நடவடிக்கையாக ஈரான் மீதான ஒரு கடுமையான தாக்குதல் அமையும் என்பதனை நாம் முன்கூட்டியே உலகத்தாருக்கு எமது வார இதழுடாக சொல்லி வைக்கின்றோம். அடுத்து உக்ரைன் மீதானா தாக்குதல் தைவனுக்கும் பெரும் கலக்கத்தைக் கொடுக்கலாம். தைவான் கூட நேட்டோவில் அங்கத்துவம் பெறாத நாடு. என்னதான் இருந்தாலும் அது சீனாவின் காலடியில் இருக்கின்றது. ரஷ்யாவும் சீனாவும் ஒரு அணி என்பது மிக ஆபத்தானது.

இன்று நமது டசன் கணக்கான மாணவர்களும் இந்தியாவின் பல்லாயிரக் கணக்கான மாணவர்களும் உக்ரைனில் இருக்கின்றார்கள். அவர்களை மீட்டுவர போன இந்திய விமானங்கள் இடை நடுவில் திரும்பி வந்து விட்டன. பல்லாயிரக் கணக்கான அகதிகள் போலாந்திலும்; ரூமேனியாவிலும் ராஷ்யாவிலும் போய் தஞ்சமடைந்திருக்கின்றார்கள். இதனை ஐ.நா. உறுதி செய்கின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022

Previous Story

அரசு  முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் - இம்ரான் மகரூப்

Next Story

கெஹெலிய மின் கட்டணம்!