4 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்-ஜப்பான் ஆய்வாளர்

கொரோனா தொடர்பாக முன்னுக்குப் பின் முரனான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒமிக்ரோன் ஆபத்தானது வேகமாக பரவுகின்றது. இல்லை அது ஒன்றும் பெரிய ஆபத்தானதல்ல என்றும் சில ஆய்வாளர்கள் சொல்லி வருகின்றார்கள் யார் சரி யார் பிழை என்பதை ஒரு பக்கம் வைத்து விட்டு முடிந்த வரை ஒவ்வொரு தனிமனிதனும் அதனிடமிருந்து எப்படி எல்லாம் தப்பி வாழ முடியுமோ அந்த முயற்ச்சிகளைச் செய்து கொள்ளும்படி கூறி நெகடிவ்-பொசிடிவான செய்திகளையும் நாம் வாசகர்களுக்கு உடனுக்குடன் தர எண்ணி இருக்கின்றோம்.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா, டெல்டா கொரோனாவை காட்டிலும் 4.2 மடங்கு வேகமாகப் பரவலாம் என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை முழுமையாக ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் கடந்த காலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதலில் புதிய உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா

இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், ஓப்பீட்டளவில் இது புதிய உருமாறிய வைரஸ் என்பதால் இது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

4.2 மடங்கு வேகம்

இது தொடர்பாக ஜப்பான் நாட்டின் பேராசிரியரான ஹிரோஷி நிஷியுரா கூறுகையில், “முதற்கட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை விட 4.2 மடங்கு வேகமாகப் பரவுகிறது. இந்த புதிய உருமாறிய கொரோனா மிக வேகமாகப் பரவுகிறது என்பதையே இது காட்டுகிறது. அதேபோல மனிதர்கள் உடலில் தோன்றும் தடுப்பாற்றலில் இருந்தும் பெரியளவில் தப்பிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இவர்

முன்னதாக இதே ஆய்வாளர் ஹிரோஷி நிஷியுரா டோக்கியோ ஓலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்திருந்தார். அதில் டோக்கியோ ஓலிம்பிக் தொடருக்கு முன்பு டோக்கியோவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தார். அதேபோல டோக்கியோவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வைரஸ் கேஸ்கள் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு

ஏற்கனவே ஓமிக்ரான் கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று உலக நாடுகள் மத்தியில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இந்த உருமாறிய கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளது. இருப்பினும், ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வரை தீவிர பாதிப்புகள் பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஓமிக்ரான் இதுவரை லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது,

பூஸ்டர் டோஸ்

இருப்பினும், இது வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து உலக நாடுகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பைசர் அறிவுறுத்தியுள்ளது. இதுபோல உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஓமிக்ரான் கொரோனாவின் தீவிர தன்மையைக் கண்டறியத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது வரை முதற்கட்ட ஆய்வுகளில் ஓமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குக் கடந்த நவ.29 முதல் டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 111% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நவ. முதல் வாரத்தில் 1.2%ஆக இருந்த பாசிட்டிவ் விகிதம் தற்போது 22.4%ஆக அதிகரித்துள்ளதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Story

நஜீப் சிறைஉறுதி

Next Story

மோதியும் பல்டி :டெல்லி விவசாயிகள் போராட்டம்  முடிவு