அணுர அரசு மீது ஆதரவு ஆதங்கம் குற்றப் பதிவுகள்!

நஜீப் பின் கபூர்

நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல்

*****

தலையால் நிற்பவனை கால்களால் நிற்கப் பழக்குதல்!

முதுகெழும்பு இல்லாஎதிரணி கொடுக்கின்ற பாதுகாப்பு!

கருக்கட்டாத கூட்டணிகளும் கதைவிடும் ஊடகங்களும்!

*****

மனிதர்கள் கால்களால் நிற்பதுதான் இயற்கை. இதற்காகத்தான் இறைவன் மனிதனுக்கு கால்களைக் கொடுத்திருக்கின்றான். ஆனால் தலையால் நிற்கப் பழகிக் கொண்ட ஒருவன் நான் இப்படித்தான் நிற்பேன். அதுதான் தனக்கு வசதி என்று அடம்பிடிக்கின்ற போது அவனை வழிக்குக் கொண்டுவருவதற்கு ஏதோ ஒரு அணுகுமுறை தேவைப்படும்.

அப்படி ஒரு நிலை நமது அரசியலிலும் நிருவாகத் துறைகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது என்று ஒரு கருத்தை நாம் இங்கு பதிய விரும்புகின்றோம். இப்படி விளக்கம் கொடுத்தாலும் இது என்னடா புதுக்கதையா இருக்கு என்று குழம்பிப் போகின்ற ஒரு கூட்டமும் நமக்குள் இருக்கத்தான் செய்யும். எனவே இதனை நேரடியாக அனைவருக்கும் புரிகின்ற மொழியில் சொல்லி விடுவதுதான் நல்லது.

அதற்கு முன்னர் நமது கருத்துக்களும் குறிப்புக்களும் தொடர்பான ஒரு சிறு விளக்கத்தையும் இங்கு சுட்டிக் காட்டுவது நல்லதென்று எதிர்பார்க்கின்றோம். காரணம் நாம் என்னதான் நடுநிலையாக நின்று பேசினாலும் நியாயங்களுக்காக நாம் சொல்கின்ற பேசுகின்ற கருத்துக்கள்ஒரு பக்கச்சார்பானது போல கூட அமைகின்றது. ஒரு வகையில் நமது செய்திகளில் அப்படி ஒரு சாயல் இருக்கின்றது என்பதனையும் நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.அது நமக்கும் புரிகின்றது.

இப்போது தலையால் நிற்பவனும் கால்களில் நிற்பவன் பற்றி மீண்டும் பார்ப்போம். நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகள் தலைவர்கள் அதில் செயல்பட்ட பிரபல்யங்கள் என்பன பற்றியும் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் கடந்த கால நூற்றாண்டுகளாக நமது அரசியல் ஊழல் மோசடி மக்களின் பணத்தை கொள்ளையடித்தல் என்பன இங்கு இயல்பான ஒன்று என்பது தற்போது ஆதாரபூர்வமாக தெரியவந்திருக்கின்றது.

அனுரகுமாரதிசாநாயக்க அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்த அரசியல் செயல்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று சொல்லப்பட்டது. அவர்களின் தேர்தல் பரப்புரைகள் விஞ்ஞாபனங்கள் என்பவற்றில் இந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்பதனை அவர்கள் தெளிவாக சொல்லி இருந்தனர்.அதுதான் அவர்களுக்கு வாக்குகளையும் கொண்டு கொட்டியது.

அது போலவே அரசியல் படுகொலைகள் கொள்ளைகள் நிதி மோசடிகள், குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் லசந்த படுகொலை எகனலிகொட காணாமலாக்கப்பட்டது. தாஜூதீன் கொலை என்பன தொடர்பாக நாம் நீதி பெற்றுத் தருவோம் என்று அதிகாரத்தில் இருக்கு அனுர தரப்பால் மக்களுக்கு உறுதி மொழி கொடுக்கபட்டிருந்தது.

அதே போன்று சிற்றூழியர் முதல் நிறுவனங்களில் கடமைபுரிகின்ற அதிகாரமிக்க பதவிகளில் இருந்தோர், ஜனாதிபதிகள் பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்து தரப்பினர் செய்து வந்த மோசடிகள் தவறுகள் ஊழல்கள் பற்றியும் அவர்கள் மீதுசட்ட நடவடிக்கை என்றும்அடித்துச் சொல்லப்பட்டிருந்தது.

எனவே ஊழலுக்கு தலைவர்களினாலே பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஆட்சி, நிருவாக முறை நாட்டில் இருந்தது. இதனைத் தான் நாம் தலையால் நிற்கப்பழக்கப்பட்டவன் என்று துவக்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனவே அப்படியான ஒரு வாழ்க்கை முறைக்குப் பழகிப்போன ஒரு சமூகத்தை-நிருவாகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதை, அதாவது கால்களால் இவர்களை நிற்கப் பண்ணுவது என்ற கருத்தை இங்கு சொல்லி வருகின்றோம்.

எனவே தலையில் நிற்கின்றவனை கால்களில் நிற்கப் பழக்கும் போது அதற்குப் பழகிப் போனவனுடன் ஒரு முரண்பாட்டை அரசு கடக்க வேண்டி இருக்கும். அந்த நாட்கள் தான் இப்போது நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் நிருவாகத்துறையில் அரசுடன் சில  முரண்பாடுகளையும் நாம் காணமுடிகின்றது.

எனவேதான்பல இடங்களில் சம்பிரதாய அரசியல் கட்சிகள் நிருவாகம் என்போருடன் அரசு முட்டி மோதுகின்ற ஒரு நிலை பல மட்டங்களில் இன்று நடந்து  வருகின்றது.

அதனால்தான் இன்று அனைத்தது சம்பிரதாய அரசியல் கட்சிகளும் தலைமைகளும் பதவியில் இருக்கின்ற இந்த அனுரதலைமையிலான  அரசுக்கு எதிரான ஒரு பொதுக் கூட்டணியாக இன்று செயல்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். ஈஸ்டர் தாக்குதலுக்கு விசாரணை தேவையில்லை.தண்டனை தேவையில்லை.

SJB to form strongest alliance in Sri Lanka's history for Presidential  Election - Sri Lanka

நாம் போடுகின்ற புத்தகத்தில் குற்றவாளிகள் பற்றி சொல்லி இருக்கின்றோம். நீதி சட்டம் எல்லாம் குப்பையில் போடுங்கள் என்று கம்மன்பில கூற அந்தப் புத்தகத்துக்கு அனைத்து எதிர் கட்சிகளும் ஒப்புதல் கொடுத்திருக்கின்றது. இது எவ்வளவு ஆபத்ததான முன்னுதாரணமாக அமையும் என்பதனையும் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற அரசு பற்றிய ஒரு முறை சற்றுப்பார்ப்போம். நாம் வழக்கமாகச் சொல்வது போல என்பிபி அரசு பதவிக்கு வந்தது ஒரு பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அல்ல. இது ஒரு மக்கள் கருத்துப் பிரழ்வினால் அதிகாரத்துக்கு வந்த அரசு. எனவே தமது ஆதரவு மக்கள் மனநிலையை இவர்களினால் எந்தளவு கட்டிக்காக்க முடியும் என்பது நமக்குத் தெரியாது.

ஆனாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சிந்தனை மாற்றத்தில் பெரிய மாற்றங்கள் கிடையாது என்பதால் அரசுக்கு ஆபத்துக்கள் கிடையாது. ஆனால் ஆதங்கங்கள் இருந்து வருகின்றன.

அதானால்தான் தலையால் நிற்பவனை கால்களால் நிற்கப் பண்ண அரசுக்கு சில காலத்தைக் கொடுக்க வேண்டும். என்பது நமது வாதம். அதே நேரம் எந்த ஒரு அரசானாலும் அது அதிகாரத்தில் இருக்கின்ற ஒவ்வொரு ஆண்டுக்கு ஒரு சதவீத சரிவு என்ற ஒரு விதிப்படி எதிர்ப்பு வரும்.

ஆபூர்வமாக இந்த விகிதாசாரத்தில் அதிரடி மாற்றங்கள் வருமாக இருந்தால் ஆபத்துக்களுக்கு இடமிருக்கின்றது. மேலும் எதிரணி அரிசியல் கட்சிகளில் இருக்கின்ற தலைவர்கள் மிகவும் பலயீனமான நிலையில் இருப்பது அனுர தலைமையிலான அரசுக்கு இது நல்ல பாதுகாப்பாகவும் இருந்து வருகின்றது. இவர்கள் கூட்டணி பற்றி பேசினாலும் அந்தக் கூட்டணிகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.

அரசு அதிகாரத்துக்கு வந்த துவக்கத்தில் சபாநாயகர் விவகாரத்த்தில் மூக்குடை பட்டதை எவரும் மறுக்க முடியாது. அதே போன்று 325 கெண்டேனர், நிலக்கரி கொள்வனவு விவகாரங்களும் இருக்கின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பு நோக்கின்ற போது இது சில்லரை விடயமாக இருந்தாலும்.

SLPP District leaders in Colombo today (29) - Sri Lanka News Update

மக்கள் அனுர அரசை மெழுகுவர்த்தியாக மக்கள் பார்ப்பதால் தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவனுக்கு ஒளியைக் கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் அல்லது எதிர்பார்ப்பு நாட்டில் இருக்கின்றது. இதனை அனுர தரப்பு அறிந்துதான் வைத்திருக்கின்றது. அதனால் சிறுதவறுகூட பூதாகரமாக மாற்றப்படுகின்றன.

மேலும் இந்த அனுரவுக்கு எதிராக சில ஊடகங்கள் சமூக ஊடகங்களும் தப்பான செய்திகளை மக்கள் மயப்படுத்தி வருகின்றன. அதன் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும் அதனை மக்கள் சில நாட்களுக்கு பேசு பொருளாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் இன்றும் அரசு சார்பான சமூக ஊடகங்கள் மிகவும் வலுவாகத்தான் இருந்து வருவது இவர்களுக்கு வாயப்பாக இருக்கின்றது.

இன்று நாட்டில் இருக்கின்ற பிரதான எதிர்க் கட்சியாக ஐமச. இருந்து வருகின்றது. அதன் தலைவர் சஜித் செல்வாக்கு பெரியளவில் எடுபடாமல் இருந்து வருகின்றது. தன்னிடத்தில் இருக்கின்ற பலயீனங்களை மறைப்பதற்காக அவர் எவருடன் வேண்டுமானாலும் நட்புக் கொள்ளலாம் கூட்டுச்சேரலாம் என்று செயல்படுவதால் பல இடங்களில் அவர் மூக்குடை பட்டு வருகின்றார்.

அதே போன்று ஏதாவது கட்சியுடன் கூட்டணி என்றால் அது தனது தலைமைக்கு ஆப்பாக அமைந்து விடும் என்பதால் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்துவதை அவதானிக்க முடிகின்றது. தற்போது ரணில் தனக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பதால் மீண்டும் அந்த கட்சியுடன் இணைந்து சில வேலைகள் பார்க்கலாம் என்றும் சஜித் யோசிக்கின்றார். இதில் ஒன்றுதான் அவர்களின் மேதினத்தை நாம் பார்க்க முடிகின்;றது.

மொட்டுக் கட்சி மக்களிடம் மீண்டும் செல்வதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்க  குடிமக்கள் தயாராக இல்லை. என்றாலும் வழக்கமாக அவர்களுடன் ஒத்துழைக்கின்ற ஒரு கூட்டம் அங்கு செயல்பட்டுக் கொண்டு வருவதை பார்க்க முடிகின்றது.

மீண்டும் கட்சியை மக்கள் மயப்படுத்தும் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கையில் எடுத்திருப்பது போல ஒரு காட்சி சில தினங்களுக்கு முன்னர் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கட்சியின் வருடந்த செயல்பாட்டை துவங்க அங்கு மஹிந்த ராஜபக்ஸாவை கூட்டி வந்து ஆளை அமர்த்தியதே பெரும் பரிதாபமாக இருந்தது. பலர் மனிதனை அங்கு தாங்கிப் பிடித்து அழைத்து வந்ததை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில் என்பிபி. அரசியல்வாதிகள் அமைச்சர்கள் சொகுசு வசதிகள் தொடர்பான கதைகளை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதுடன் தப்பான தகவல்களைக் கொடுத்து அரசுக்கு மக்களிடத்தில் நெருக்கடிகளைக் கொடுக்கின்ற ஒரு உத்தியையும் செய்து தற்போது  அந்த தப்பான தகவல்களுக்காக மன்னிப்பு என்று அவமானப்பட்டு வருகின்றன.

லால் காந்த சொத்துப் பற்றிய செய்தியைத்தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். இதே ஊடகம் தான் கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறை பரப்புரை செய்து கொண்டிருந்தன.

ராஜபக்ஸகாலத்தில் ஒரு முறை இதே தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்திக்காக ராஜபக்ஸக்கள் அந்த சேவையை இடைநிறுத்தி விட்டது. வேடிக்கை என்ன வென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்ஸாக்கள் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டதுடன் எடுத்த அதிரடி அரசியல் தீர்மானத்தால் அவர் பல்டியடித்து ராஜபக்ஸ ஆதரவாளராக மாறியதால் தடையும் நீக்கப்பட்டு அவருக்கு உயர் பதவிகளும் கொடுக்ப்பட்டது.

பிற்காலத்தில் மரண தண்டனை குற்றவாளியாக இருந்தவருக்கு விடுதலையும் கொடுத்த உயர் பதவியும் கிடைத்தது என்றால் நீதி நியாயத்தை பாருங்கள். இது அப்படி இருக்க…

நமக்குத் தெரிந்த என்பிபிக்கு ஆதரவாக செயல்பட்ட சிலரும் கூட இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி கடுப்பில் இருப்பது தெரிகின்றது.  தப்பான செய்திகள்தான் இவற்றுக்கு அடிப்படைக் காரணமாக இருந்து வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் நூறு சதவீத மாற்றத்தை உடனடியாக எதிர்பார்ப்போரும் இதில் இருக்கின்றார்கள். அரசியல் விஞ்ஞானம் என்பது ஒரு இராஜதந்திர நகர்வு. எனவே அனைவரையும் திருத்திப்படுத்துவது இயலாத காரியம் என்பதும் தெரிந்ததே.

தித்வா பேரிழிவு மற்றும் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த அசாதாரண வரி.இவை இரண்டையும் அனுர தலைமையிலான அரசு வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போரும் எல்லா நாடுகளையும் போல இந்த அரசு சமாளித்து வருகின்றது.

இவை தவிர்க்க இயலாதவை. அதே நேரம் சஜித் அல்லது ரணில் மஹிந்த இவர்களில் எவராவது அரச தலைவர்களாக இருந்திருந்தால் எந்தளவுக்கு சமாளித்திருப்பார்கள் என்பதனை மனசாட்சி அடிப்படையில்தான் மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கும் ஒரு அரசியல் புரிதல் அவசியப்படும்.

அதற்காக இந்த அரசு செய்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்க முடியாது. இப்போது அது பற்றி பேசுகின்ற நேரம் கிடையாது. என்பது நமது கருத்து. அதற்கான வாய்ப்பு வரும் போது நாம் எமது விமர்சனங்களை துவங்கலாம்.

அதே நேரம் இந்த அரசுக்கு குறிப்பாக அனுரவுக்கு மாற்றீடான தலைவர்கள் எவரும் இன்று நாட்டில் இல்லை. அதே போன்று எதிரணி என்ற ஒன்றும் இன்றுநாட்டில் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. அடுத்த தலைவர் யார் என்பதனை முதலில் எதிர்க் கட்சிகள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அவர்கள் நெடுங்காலமாக தமக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முட்டி மோதுவார்கள் என்று நாம் நம்புகின்றோம். இதுதான் இந்த அரசுக்கு இருக்கின்ற நல்ல வாய்ப்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வருகின்றது.

Previous Story

අසාද් මවුලානා බැසිල්වයි- ගෝඨාවයි හමු වූ හැටි! රොහාන් පිල්ලෙයාන් හමු වූ හැටි!

Next Story

ஈரான் அமெரிக்கா பேச்சுக்கள் ஆரம்பம் வெடிக்கிறது எரிமலை...!