33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா! லோக்சபாவில்  நிறைவேறியது

நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியது. இந்நிலையில் தான் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இடஒதுக்கீடு மசோதா கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமயைிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்று விவாதம் நடந்து வந்தது. காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, திமுக சார்பில் கனிமொழி எம்பி உள்பட பலர் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இந்த விவாதத்தை தொடர்ந்து இன்று லோக்சபாவில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக மொத்தம் 454 பேர் ஓட்டளித்தனர். 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர்.

இதன்மூலம் 27 ஆண்டுகளாக லோக்சபாவில் நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது இந்த இடஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2029ல் வாய்ப்பில்லை..2039ல் தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வருமாமே!

இவ்வளவு நாள் ஏன்?

புதுக்குண்டு அதாவது தற்போது நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள மசோதாவில் அது நிறைவேற்றப்படும் ஷரத்து குறித்த விபரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு மசோதா செயல்பாட்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் மக்கள்தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போய் உள்ளது.

2026ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மக்கள்தெகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள சட்டத்திருத்தத்தின் படி இந்தியாவில் தொகுதி வரையறை என்பது 2026ம் ஆண்டுக்கு பிறகு தான் மேற்கொள்ள முடியும். இதனால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் அமலுக்கு வராது என்பது உறுதியாகி உள்ளது. அதோடு 2026ம் ஆண்டில் தான் மக்கள்தெகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை பணிகள் தொடங்கும்.

இந்த பணிகள் முடிவடைய சில ஆண்டுகள் எடுக்கும் என்பதால் இந்த மசோதா என்பது 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் அமலாகும் என கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு தரப்பினரோ 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது செயல்பாட்டு வரும் வாய்ப்பு என்பது குறைவு என்றே கூறுகின்றனர். அதாவது தொகுதி மறுவரையறையில் பல சர்ச்சைகள் எழலாம். இதனால் தொகுதி மறுவரையறைக்கான ஆணையம் என்பது 4 முதல் 5 ஆண்டுகள் வரை நேரம் எடுத்து கொள்ளலாம்.

அப்படி பார்த்தால் இது 2029ம் ஆண்டையும் கடந்து செல்லலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, திமுகவின் எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Story

சனல் 4 கதை! புரிவோருக்கும் புரியாதாருக்கும் சில தகவல்கள்!

Next Story

விக்கி ஐயா கலர் கனவு!