ஈரான்:அமெரிக்கா புதிய மூவ்!
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், இன்று பேசியிருக்கும் விஷயம், இந்த அமைதியை பாதிக்கும் விதமாக மாறியிருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெக்செத், ஈரானுடனான போர் மற்றும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ திட்டம் மூலம், கடந்த சில வாரங்களில் ஈரானுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எட்டியுள்ளோம் என்று விளக்கமளித்திருந்தார்.

ஈரானுக்கு வாய்ப்பு
மேலும் அவர் பேசியதாவது, “ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடாமல் தடுப்பதே இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். தற்போது இப்போர் ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு முன்வர இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஹார்முஸ் நீரிணையை பொறுத்தவரை, ஈரான் மீதான கடல்வழி முற்றுகை மிகவும் பலமாக இருக்கிறது. விரைவில் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபரேஷன் எபிக் பியூரியில் இணையும்.
ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 34 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கடல் முற்றுகையை தீவிரப்படுத்திய அமெரிக்கா
குறிப்பாக M/V Touska என்ற கப்பல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஈரானுடன் தொடர்புடைய M/T Tifani மற்றும் M/T Majestic X ஆகிய கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைக்க முயன்றாலோ அல்லது அமெரிக்கக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தாலோ, அவர்களைக் கண்டதும் சுட்டு அழிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான தெளிவான விதிமுறைகள் அமெரிக்கக் கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார்.
போர் நிறுத்தம்
அமெரிக்கா – ஈரான் இடையே தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதை அதிபர் ட்ரம்ப் காலவரையறையின்றி நீட்டித்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
எனினும், ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்ட அவர் அவசரம் காட்டவில்லை. இதே நேரத்தில், இஸ்ரேல்-லெபனான் இடையேயும் போர் நிறுத்தமும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்னதான் நாங்கள் செய்தது எல்லாம் சரி என்று அமெரிக்கா சொல்லி வந்தாலும், டிரம்பின் நடவடிக்கைகள் மீது அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக, அமெரிக்கக் கடற்படைச் செயலர் ஜான் பிலன் டிரம்ப் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தியில் இருந்திருக்கிறார். இதன் காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




