மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி -நடந்தது என்ன ?

 ******************

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் வாக்கெடுப்பிற்குப் பிறகு தோல்வியடைந்தது.

மசோதாவுக்கு ஆதரவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற பாஜக கூட்டணி தவறிவிட்டது

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின.

மீதமுள்ள இரண்டு திருத்த மசோதாக்களையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

முன்னதாக மசோதா குறித்த விவாதத்திற்குப் பிறகு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 ******************

பெண்கள் இட ஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக நடைபெற்ற விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

 நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, கனிமொழி பேசியது என்ன?

“முதல் உண்மை என்னவென்றால், இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவே அல்ல,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த மசோதா நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சியாகும்.

இது எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிரானது; அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு செயல்திட்டம் ,” என்று கூறினார்

மேலும் அவர் கூறுகையில், “இந்த மசோதாவுக்கும் பெண்கள் அதிகாரம் அளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே முயற்சிக்கிறீர்கள். இந்த மசோதா தேச விரோதமானது.

இதைச் செய்ய நாங்கள் அரசை அனுமதிக்க மாட்டோம். தென்னிந்தியா மற்றும் வட இந்தியா இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. தலித் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு குறைந்து வருகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது.

இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவதை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்கிறது.

தற்போதுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது.

கனிமொழி பேசியது என்ன?

முன்னதாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

அவர் பேசுகையில், “இந்த சிறப்பு கூட்டத்தில் அரசு மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தல்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அவசரகதியில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

என் கட்சி மற்றும் மாநிலம் சார்பாக இந்த மசோதாக்களை எதிர்க்கிறேன். இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் இது.” என்றார்.

மேலும், ” 1976ல் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543ஆக முடக்கப்பட்டது.

மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தென் மாநிலங்கள் இறங்கின. அதன் வாயிலாக, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது.” என்றார்.

அமித் ஷா

அமித் ஷா

தொகுதிகளின் எண்ணிக்கையை இப்போது அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு நினைப்பது ஏன்? எதன் அடிப்படையில் அதை நிறைவேற்ற போகிறது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும்போது பல உறுப்பினர்களுக்கு சபையில் பேசுவதற்கே வாய்ப்பில்லாமல் போகும் என்றும் அவர் கூறினார்.

“அரசு கூறுவதைக் கேட்டு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலத்தினர் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினர். ஆனால், இப்போது மத்திய அரசின் நடவடிக்கை, ‘அரசு கூறுவதை கேட்டு நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்’ என மக்களிடம் கூறுவது போன்று உள்ளது.” என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதாவில், “சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும்” என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேச அரசு 13 தொகுதிகளை பெறும், ஆனால் தமிழ்நாடு 11 தொகுதிகளை இழக்கும். தங்களுக்கு தேவையானது எதுவோ அதையே ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேவை என மத்திய அரசு நினைக்கிறது” என்றும் அவர் கூறினார்.

“நாடாளுமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மையுடன் இருக்கிறதோ, அந்த கட்சியே எந்த மக்கள்தொகை அடிப்படையில் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வகையிலான அம்சம் மசோதாவில் உள்ளது” என குறிப்பிட்ட கனிமொழி, “இந்த மசோதாக்கள் உள்நோக்கம் கொண்டது. ” என்றார்.

தங்களின் தேர்தல் லட்சியங்களுக்காக பாஜக பெண்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறது, என்று விமர்சித்த அவர், ஏற்கெனவே இருக்கும் 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் மகளிர் இடஒதுக்கீட்டையும் தொகுதி மறுவரையறையையும் இணைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.

கனிமொழியின் பேச்சைத் தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இம்மசோதா மீதான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று மாலை இந்த மசோதாக்கள் மீது தனித்தனியே வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

நேற்று நடந்தது என்ன?

நேற்று நடைபெற்ற விவாதத்தில், மகளிருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் மற்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது ‘சாண்ட்விச்’ போல இருப்பதாக கூறிய திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதாவால் வட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற தென்மாநிலங்களின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில், இம்மசோதாக்கள் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

Previous Story

හරි!ඔහු අස්වුණා! ඊළගට වෙන්නේ මොකක්ද?ARKAM ILYAS..!..?

Next Story

உலக ஒழுங்கை மாற்றியது ஈரான்