3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றிய தாலிபான்கள்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, தாலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு அடிபணிந்த ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் பின்வாங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகர் காபுலைக் கைப்பற்றிய தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். மேலும் அரசுப் படைகள் வீழ்ந்ததுடன், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டே தப்பிச் சென்றார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய ஆட்சியை நிறுவியுள்ளனர்.

தாலிபான் ஆட்சியானது இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவதாக அமைந்துள்ளது. இருபாலர் கல்விக்கு தடை, பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம், பெண்கள் தனியாக பயணிக்க தடை என ஏற்கனவே பெண்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை கையிலெடுத்து தாலிபான்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தொலைக்காட்சிகளில், டிவி தொடர்களில் பெண் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்களை குறிவைத்து ஆப்கானில் தாலிபான் அரசு பிறப்பித்து வரும் உத்தரவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுஒழிப்பையும் தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் மதுபானம் தயாரிப்பது, பயன்படுத்துவது போன்றவை ஏற்புடையதல்ல என கருதும் தாலிபான்கள் மது பயன்பாட்டை ஒழிக்க தீவிரமான தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் காபுலில் மதுபானங்களை தயாரித்து, கடத்திய மூவரை கைது செய்த தாலிபான்கள் அவர்களிடமிருந்து 3,000 லிட்டர் மதுவை பறிமுதல் செய்துள்ளனர்.

General Directorate of Intelligence (GDI) வெளியிட்டுள்ள வீடியோவின்படி, காபுலில் உள்ள வாய்க்கால் ஒன்றில் பேரல்களில் உள்ள மதுவை தாலிபான்கள் ஊற்றி அழித்துள்ளனர்.

Previous Story

பதவி ராஜினாமா- சூடான் பிரதமர்!

Next Story

யாழ். பட்ட விழாவிற்கு  எதிர்ப்பு!