என்பிபி. அரசின் பலம் பலவீனம்!

நஜீப் பின் கபூர்

நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்து இன்று ஒரு வருடமும் மூன்று மாதங்களும் இருபது நாட்களும்  ஆகின்றன. அதே போன்று பொதுத் தேர்தலில் என்பிபி.  நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி இப்போது சரியாக ஒரு வருடம் ஒரு மாதம் ஏழு நாட்கள்.  எனவே ஜனாதிபதியும் புதிய அரசு அதிகாரத்துக்கு வந்து ஒரு வருடங்கள் என்று நாம் இதனை எடுத்தக் கொள்வோம்.

இந்த ஒரு வருடம் என்பது ஜனாதிபதி மற்றும் அவர்களது அரச செயல்பாடுகள் பற்றி மதிப்பீடு செய்து பார்க்க ஓரளவுக்குப் போதுமான காலம் என நாம் கருதுகின்றோம். அந்த வகையில் அரசின் பலம் பலவீனங்கள் என்று சில விடயங்களைத் தலைப்பிட்டு ஆராய முற்பட்டிருக்கின்றோம்.

நாம் தலைப்பிடுகின்ற விடயங்கள் அதன் தரவரிசை என்பவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் இல்லாமாலும் இருக்கலாம். எனவே வழக்கம் போல நாம் குறிப்பிடுகின்ற தலைப்புக்களையும் கருத்துக்களையும் விமர்சிக்கின்ற உரிமையை வாசகர்களுக்குச் சமர்ப்பித்துவிட்டு விடயத்துக்கு வருவோம்.

அரசாங்கத்தின் பலம் என்ற தலைப்பில் நாம் 12 விடயங்களையும் அதே போன்று பலவீனங்களையும் அதே எண்ணிக்கைக்கு கொண்டு வந்திருக்கின்றோம். இந்தத் தலைப்புக்கள் கனதியானவையாகவும் கனதியற்றதாகவும் இருக்கக்கூடும். அதனால் அந்த இடங்களுக்கு ஒருவர் இதனைவிட கனதியான தலைப்புக்களையும் கருத்துக்களையும் பொருத்திக்கொண்டு ஆராயமுற்பட்டாலும் அதில் எந்தத்தவறுகளும் கிடையாது.

பலம்

01.ஜனாதிபதி அனுரதிசாநாயக ஆளுமை:இந்த அரசாங்கத்தின் பலம் என்று பார்க்கின்ற போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவை நாம் முதலாம் இடத்தில் வைக்கின்றோம். நமது இந்தக் கருத்துடன் முரண்பாடுகள் இருக்கும் என்று நாம் கருதவில்லை. எதிரணியினர் கூட அதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதுவரையிலும் ஜனாதிபதி அனுர பிரச்சினைகளை அணுகுகின்ற ஒழுங்கு, ஒரு இடத்திற்கு வருகின்ற போது மக்கள் மனங்களில் தன்னைப்பற்றிய நல்லெண்ணத்தை அவர் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார். அடுத்து அந்த இடத்தில் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற போதும் நல்ல தயார் நிலையில் விடயதானத்துடனும் விடயங்களை கையாண்டு வருகின்றார். இதுவரை அதிகாரத்தில் இருந்த நமது தலைவர்களில் அனுர முன்னுதாரணமான ஒரு தலைவர். இதில் மாற்றுக்கருத்துகள் கிடையாது.

02.டில்வின்-செயலகம்தொண்டர்கள்:நாம் மேற்சொன்ன ஜனாதிபதியின் ஆளுமைக்கும் நெறிப்படுத்தல்களுக்கும் ஜேவிபி. செயலாளர் டில்வினிடமிருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்பு கனிசமாக பங்களிப்புச் செய்கின்றது. பிரச்சினைகளை அறிவுபூர்வமாக அணுகுவதிலும் விடயதானங்களைத் தொகுத்து வழங்குவதிலும் பொலவத்தை ஜேவிபி காரியாலயம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனால்தான் சிலர் இந்த அரசாங்கத்தின் கோட்பாதர் ஜேவிபி.செயலாளர் டில்வின் என்றும் விமர்சிக்கின்றார்கள். அதேபோன்று துறைவாரியாக விவகாரங்களை ஆய்வு செய்து தகவல் வழங்க கட்சியில் திறமையான ஆளணிகள்-குழுக்கள் அங்கு இருக்கின்றன. அவர்கள் தரப்பில் ஊழல்களுக்கு வாய்ப்பில்லாத நிலை நமது அரசியலில் நல்ல உதாரணம்.

அதே போன்ற தியாகத்துடன் கட்சிப்பணிபுரிய ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு இருக்கின்றார்கள். மேலும் முழுநேரம் கட்சிப்பணிபுரியவும் இவர்களிடம் ஆயிரக்கணக்கான செயலணி இருக்கின்றது. இப்படியான தியாகப் பணிகளை செய்கின்ற கட்சிகள் நமது நாட்டில் வேறு ஏதும் கிடையாது. இதனால்தான் சஜித்தின் சகாக்களே அவ்வப்போது நாமும் எமது கட்சியையும் ஜேவிபி. போல வடிவமைக்க வேண்டும் என்று பேசி வருகின்றார்கள். நாம் முன்பொருமுறை சொன்னது போல அவர்களால் அப்படி சிந்திக்க மட்டுமே முடியும் செயலாற்ற முடியாது.

03.பலயீனமான எதிர்க்கட்சிகள்:இந்த அரசாங்கத்தின் பலம் என்ற விடயத்தில் நாம் எதிரணிகளின் பலவீனங்களை குறிப்பிட முடியும். அவர்கள் இதனை நிராகரித்தாலும் புத்தீஜீவிகள் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் இது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. நாட்டிலுள்ள பிரதான எதிர்க்கட்சி என்றவகையில் சஜித்தின் ஆளுமை தொடர்பாக கட்சிக்குள் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ரணில் மீதான வெறுப்பே அங்கு சஜித்துக்கான அங்கிகாரமாக மாறியுள்ளது.

ஐதேக-ஐமக இணைய வேண்டும் என்று பேசுகின்ற ஐதேக.செயலாளரே சஜித் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமில்லாத ஒரு மனிதன் என்று இணைவு முயற்சிகளுக்கு மத்தியிலும் விமர்சிக்கின்றார்.! அதே போன்று இன்னும் பல ஐதேக. தலைவர்கள் சஜித்தை நாள்தோறும் கொச்சைப்படுத்தி வரும் போது  இணைவு எப்படி சாத்தியம்.? ரணில் ஆளுமை பற்றி அவரது சகாக்கள் புகழ்பாடினாலும் அது தற்போதய அரசியலில் வெறும் மாயை.

எதிர்க்கட்சி அடுத்த பலமான அணி என்று பார்க்கின்ற போது. மொட்டுக்கட்சியும் ராஜபக்ஸாக்களும்தான். ஆனால் மஹிந்த ராஜபக்ஸ உடல் நிலை அவர்களது அணியைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றது. நாமல்தான் ராஜபக்ஸாக்கள் வாரிசாக இருந்தாலும். இந்த அரசாங்கத்தின் முன்னால் அவர் ஒரு செல்வாக்கான தலைவராக வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மி. இதர அரசியல் செயல்பாட்டாளர்கள் பற்றி பேசுவது வேஸ்ட்.! அதனால் அதனை இங்கு தவிர்க்கின்றோம்.

உபதலைப்புக்கள் நிறைய இருப்பதால்  நாம் மிகச்சுருக்கமாகவே இங்கு கருத்துக்களை பதிய முடியும். இதனை நமது வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

04.குடிகளின் மனமாற்றமும் புரிதலும்:ஜனாதிபதி அனுரவையும் என்பிபி.அரசையும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததில் அவர்களின் அரசியல் செல்வாக்கு என்பதனைவிட பொதுமக்களிடத்தில் அவர்கள் பற்றிய ஒரு நல்லெண்ணமும் புரிதலும் அரகலயாவுக்குப் பின்னர்தான் சடுதியாக ஏற்பட்டது. அது இவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த முக்கிய காரணி. அனைத்து சமூகங்களிலும் இந்த மனமாற்றம் ஏற்பட்டிருந்தது. பொதுமக்களை தெளிவுபடுத்துவதில் என்பிபி. தலைவர்கள் இதில் சாதித்துக்கொண்டார்கள்.

05.பௌத்த தேரர்களின் நிலைப்பாடு:நமது நாட்டில் தீர்க்மான ஒரு சக்தியாக பௌத்த பீடங்களைக் குறிப்பிடலாம். அவர்கள் அரசியலில் தலையிடுவதும் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றது. இந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் பிரதான பீடாதிபதிகளாக அஸ்கிரிய மல்வத்த அரசாங்கத்தை அவதானிக்கின்ற ஒரு காலமாக இந்த நாட்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்களின் விருப்பதுடன் முட்டி மோத விரும்பவில்லையோ அல்லது இவர்களுகளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்போம் என்று யோசிக்கின்றார்களோ தெரியாது. இது ஆட்சியாளர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது. அண்மையில் மல்வத்தை பீடாதிபதி ஜனாதிபிதி அனுராவிடம் நீங்கள் அரசாங்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் ஏனைய விவகாரங்களை பார்க்கின்றோம் என்று சொல்லி இருந்தார்.

06.சமூக ஊடகங்களின் ஒத்துழைப்பு:இந்த அரசை பதவிக்குக் கொண்டு வந்தது முதல் இன்றுவரை செல்வாக்கான அனைத்து சமூக ஊடகங்களும் போல ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

07.வாக்குறுதிகளின் நடைமுறை:தேர்தல் காலங்களில் அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு முப்பது சதவீதமவiர் சாத்தியமாகியுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த அசாதாரன சலுகைள்-பொசன் என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கள்வர்கள் மோசடிக்காரர்களுக்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் படுகொலைகள் வங்கின் கொள்ளை மோசடிகள் போன்றவை நமது நிருவாக அமைப்பில் வேகமான தீர்வை எதிர்பார்க்க முடியாது. அதற்கு இன்னும் காலம் தேவை. காலம் இருக்கின்றது என்றும் விவாதிக்கலாம்.

08.சமபலமான வெளியுறவுக் கொள்கை:என்பிபி. அதிகாரத்துக்கு வருவதை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் இந்தியாவும்கூட ஏற்காது. இவர்கள் ரஸ்யா மற்றும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பாhகள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் அதிகாரத்துக்கு வந்ததும் அனுர தலைமையிலான அரசு இது தப்பான ஒரு கருத்து என்பதனை நிரூபித்துவிட்டது. இதனால் நாம் சொன்ன அனைத்த நாடுகளும் சீனாவும் ரஸ்யாவும் கூட இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இது நம்பமுடியாத ஒரு அரசியல் இராஜதந்திர வெற்றி.

09.சர்வதேச செயல்பாட்டாளர்கள்:அனுர ஜனாதிபதியானது என்பிபி.பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றி என்பவற்றில் வெளிநாட்டில் இயங்கி வருகின்ற செயல்பாட்டாளர்களின் பங்களிப்பு கனிசமாக இருக்கின்றது. இன்றுவரை ஆட்சியாளாகளுக்கு இவர்கள் நல்ல துனையாக இருக்கின்றார்கள்.

10.நளிவடைந்துள்ள இனவாதம்:இன்று நாட்டில் இனவாதம் நளிவடைந்த நிலையில் இருக்கின்றது. ராஜபக்ஸாக்களின் காலத்தில் சிறுபான்மை இனங்கள் மத்தியில் இருந்த அச்ச உணர்வுகள் கணிசமாக இன்று வீழ்சியடைந்துள்ளது. இனவாதிகள் இன்று நமது அரசியலில் காணாமல் போய் இருக்கின்றாhகள்.

11.சம்பள அதிகரிப்பு:இதுவரை நாட்டில் இருந்து வந்த பல சம்பள முரண்பாடுகளை அரசு நீக்கி இருக்கின்றது. அதேபோன்று பென்சனில் இருந்த முரண்பாடுகளும் கனிசமாக சீர் செய்யப்பட்டிருக்கின்றது. ரணில் காலத்தில் ஒரு ஐந்து சதம் கூட சம்பள அதிகரிக்க முடியாது என்று பொருளாதார விற்பண்ணர் பந்துல கூறி இருந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது. இந்த அரசு பதவிக்கு வந்திருக்கா விட்டால் இப்படியான ஒரு சம்பள அதிகரிப்பை தொழிலாளர்கள் பெற்றிருக்க முடியாது.

12.பேரிடரும் புனர்நிர்மானமும்:நாட்டில் நடந்த மிகப்பெரிய பேரிடரை புனர்நிர்மானம் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நம்பிக்கை கொடுக்கின்ற வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றது. அதே நேரம் வேறு ஒரு அரசு இருந்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும். சுனாமியின் போது என்ன நடந்தது என்றும் யோசிக்கலாம்.

பலவீனம்

Sajith meets Ranil, says NO to positions

01.நிலையற்ற ஆதரவாளர்கள்:ஜனநாயக நாடுகளில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு ஆதரவாலர்கள் இருப்பார்கள். அந்தவகையில் அனுராவுக்கும் என்பிபிக்கும் ஆதரவாலர்கள் இருப்பார்கள்-இருக்கின்றார்கள். ஜேவிபி. கட்சி துவங்கி ஆறு (1965) தசாப்தங்கள் வரை. ஆனாலும் கடந்த தேர்தல்வரை இவர்களின் ஆதரவாலர்கள் எப்போதும் ஐந்து சதவீதத்தைக்கூடத் தொடவில்லை. அரகலயுடன் வந்த மனமாற்றம்தான் இவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த ஆதரவு தொடர்பாக எமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. இதனை இந்த அரசு தொடர்பான ஒரு எச்சரிக்கையாகவும் நாம் பார்க்கின்றோம். காரணம் இது நிச்சயமில்லாத ஒரு அங்கிகாரம்.

02.எதிர்பாராத பேரிடர்:இந்த அரசுக்கு திடீரென வந்த பேரழிவு மிகப் பெரிய தாக்கத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்களுக்கு நிறையவே காலமும் நிதியும் தேவை. அதற்கான நிதி.? பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது.

03.நிருவாகக் குறைபாடுகள்:இந்த அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகப் பெரிய நெருக்கடி ஊழல் மோசடிகளுக்குப் பழக்கிப்போன நிருவாகசேவை. சட்டம் நீதி நிருவாகம் படைத்ததரப்பு என்ற அனைத்துத் துறைகளிலும்  ஊழலுக்கும் மோசடிகளுக்கும் பழகிப்போன ஒரு நிருவாகம். இது அரசுக்கு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.

04.வங்குரோத்து நிதி நிலை:கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீரழிவை புனர்நிர்மானம் செய்வதில் அரசு ஏற்கெனவே நெருக்கடிகளையும் நிதி பற்றாக்குறையையும் எதிர்நோக்கி இருந்தது. பேரிடரால் அதில் மேலும்  சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றது.

05.புரிதலின்மையும் ஆழம் அறியாமை:என்னதான் ஜேவிபி-என்பிபி நிருவாகிகள் நாட்டில் நெருக்கடிகள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்தி அதிலிருந்து மீண்டு வருவது பற்றி கதைகளை மேடைகளில் சொல்லி வந்தாலும். அவர்கள் புரிதல் அதன் ஆழம் சரி செய்ய கொடுத்த காலக்கெடுகள் தொடர்பாக நிறையவே தெளிவில்லாத ஒரு நிலை இருக்கின்றது. இது அவர்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கும் இது காரணமாக அமைகின்றது..

06.மிகைப்பட்ட வாக்குறுதிகள்:தற்போதய ஆட்சியாளர்களின் தேர்தல் பரப்புரைகளில் மிகைப்பட்ட வாக்குறுதிகளும் நம்பிக்கைகளும் வாக்குறுதிகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. போலி வாக்குறுதிகள் நமது அரசியலில் பழகிப்போன ஒன்றாக இருந்தாலும். என்பிபி.யிடம் மக்கள் அப்படி எதிர்பார்க்க மாட்டார்கள். இதில் தவறுகள்-குறைபாடுகள் நடக்கின்ற போது மக்கள் இவர்களை அதேவேகத்தில் நிராகரிப்பார்கள்.

07.உறுப்பினர் பலயீனங்கள்:என்பிபி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் கிளிப்பிள்ளைகள் போல செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களிடம் காணப்படுகின்ற பலவீனங்கள் பெரிய இசுவாக எதிரணியினர் எடுத்து விமர்சித்து வருகின்றார்கள். இதனை நாடாளுமன்றம் வந்து ஜனாதிபதி சரி செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு ஒரு வாடுவாகலாம்.

08.சொந்தமான ஊடகங்கள் இன்மை:ஜேவிபி-என்பிபிக்கு ஆதரவாக எந்த ஒரு தொலைக்காட்சி அச்சு ஊடகமும் இல்லை. இருந்திருந்தாலும் அவை ஜனரஞ்சகமானதல்ல. ஆனால் கடந்த ஆட்சிகாலங்களில் ஊடகங்களுக்கு நிறையவே சலுகைகளைக் கொடுத்து அவர்களை தமது தேவைக்கு-கட்சிக்கு ஏற்றவிதமாக அரசியல் கட்சிகள் பாவித்துக் கொண்டன. அந்த நிலை இன்று இல்லை. அரசு சார்பு ஊடகங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இருந்தாலும் அது அரசு அதிகாரத்தில் இருக்கும்வரை மட்டுமே இவர்களுக்கு இசைவாக நடக்கும். இன்று சில தனியார் ஊடகங்கள் அரசை ஆதரிப்பது போல தோன்றினாலும் அவை எந்த நேரத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள இடமிருக்கின்றது. அரசின் செல்வாக்கு சரிகின்ற போது தற்போது ஆதரிக்கின்ற ஊடகங்களும் இவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

09.மூக்குடைவுகள்:இந்த அரசு பதவிக்கு வந்ததும் சபாநாயகர் விவகாரத்தில் முதல் மூக்குடைவு வந்தது. அதனை இந்த ஆட்சியாளர்களினால் இன்றுவரை சரி செய்ய முடியாது போனது. அதே போன்று கல்விச்சீர்திருத்த விவகாரத்தில் குறிப்பாக ஆறாம் ஆண்டு ஆங்கிலப் புத்தகத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய சர்ச்சையிலும் அரசுக்குத் தெளிவான பதிலைக் கொடுக்க முடியாது போயுள்ளது. இதனை அவர்கள் ஒரு சதி என்று கூறினாலும் அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

10.இனப்பிரசினை:இனப்பிரச்சனைகளுக்குத் தீர்வு பற்றி இந்த அரசு திட்டவட்டமான எந்த முன்மொழிவுகளை வைக்காத போதிலும் அரசியல் அமைப்பில் இதனைச் சரி செய்வது போல அவர்களது கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அது சாத்தியமாகும் என்று நாம் கருதவில்லை. இதனால் இனப்பிரச்சனை தொடர்ந்தும் இருந்து கொண்டுதான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

11.அதிருப்திகள்:அரசு பதவிக்கு வந்தவுடன் அவர்கள் பேசிய சொன்ன அனைத்து மாற்றங்களும் இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் நடக்க வேண்டும் என்ற ஒரு கூட்டமும் அரச ஆதரவாலர்கள் மத்தியில் இருக்கின்றார்கள்.

12.தினம் தோறும் ஆட்சி மாற்றம்:இவை தவிர நாள்தோறும் அரசுகள் மாறவேண்டும் என்ற அரசியல் அரிச்சுவடியே புரியாத ஒரு கூட்டம் நாட்டில் இருக்கின்றது. இவர்களை ஒரு நாளும் எவராலும் சந்தோசப்படுத்த முடியாது.

ஓட்டுமொத்தமாக அல்லது சராசரி என்று பார்க்கின்றபோதும் பலம் பலமாகவும் பலவீனம் பலவீனங்களாகவுமே நமக்குத் தெரிகின்றன.

Previous Story

මට එයාගේ ඔඩොක්කුවේ නිදාගන්න බෑ

Next Story

சமூக ஊடகவியலாளர் ஹர்சன ஹதுன்கொட கடைசி வாக்குமூலம்!