29 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்குக்கு தடை !ஏன்?

-யூ.எல். மப்றூக்-

இலங்கையில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிரான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 31ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து வழக்குடன் சம்பந்தப்பட்ட மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் பள்ளி ஒன்றில் 2018ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவிகளை, அவர்களுக்கு ஆங்கிலப் பாடம் கற்பித்த ஆசிரியர், பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த வழக்கு தொடரப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜுலை 21ஆம் தேதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் அழைக்கப்பட்டது. அப்போது ஆஜரான குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு – குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டது. பின்னர் 31ஆம் தேதி வழக்கு விசாரணைகள் ஆரம்பமாயின.

அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சார்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை. அன்று வழக்கு முடிவின்போது, குறித்த ஆசிரியரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர்கள் தவிர, வழக்குடன் தொடர்புபடாத வேறு எவரும் அந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை 31ஆம் தேதியும் இம்மாதம் இரண்டாம் தேதியும் நடந்த வழக்கு விசாரணைகளில், சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதையடுத்து விசாரணை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி வழக்கில் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியரின் மனைவி தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு இணங்க, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் 9ஆம் தேதி வரை இடைநிறுத்துமாறு, கடந்த 2ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

இதனால், ஏற்கெனவே ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த இந்த வழக்கு மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.

நீதிமன்றம்

நடந்தது என்ன? அப்போதைய அதிபர் தகவல்

இந்த வழக்கின் பின்னணி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த பெண்கள் பள்ளியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.ஏ.எம். கலீல் என்பவரை, ஏறாவூரிலுள்ள அவரின் இல்லத்தில் பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

அப்போது அவர் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

”கடந்த 2018ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு மாணவிகள் கையொப்பமிட்டு, அப்போதைய அதிபராகக் கடமையாற்றிய எனக்கு கடிதமொன்றை வழங்கினர். அதில், தமக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் இனி தமக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் தமது வகுப்பு ஆசிரியர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரிடம் இந்த மாணவிகள் சென்று, குறித்த ஆங்கிலப் பாட ஆசிரியர் தமக்கு வேண்டாம் என்றும், அவரை தமக்கு வகுப்பு எடுப்பதிலிருந்து நீக்குமாறும் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அதைச் செய்ய தங்களுக்கு அதிகாரமில்லை என அவர்கள் கூறியதை அடுத்தே, அந்தக் கோரிக்கையை கடிதம் மூலம் என்னிடம் முன்வைத்தனர்,” என கலீல் கூறினார்.

குறிப்பிட்ட ஆங்கிலப்பாட ஆசிரியர் – தமக்கு பிழையான வார்த்தைகளைப் பிரயோகிப்பதாகவும், தம்மிடம் தவறான செயற்பாடுகளில் ஈடுவதாகவும், தமக்கு அவர் கைகளால் அடிப்பதாகவும், அந்தக் கடிதத்தில் மாணவிகள் குற்றம் சாட்டியிருந்ததாகவும் அதிபர் கலீல் தெரிவித்தார்.

”இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆசிரியர் குழுவொன்றை நியமித்தேன். அவர்களும் இதுகுறித்து விசாரித்த பின்னர் எனக்கு அறிக்கையொன்றினை வழங்கினார்கள். அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. மாணவிகளிடம் குறித்த ஆசிரியர் பாலியல் ரீதியான சேட்டைகள் மற்றும் தொந்தரவுகளைப் புரிந்துள்ளார் என்பது அவற்றில் முக்கியமானது” என்றார்.

இந்த விடயங்களை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் தான் அறிவித்ததாக அதிபர் கலீல் குறிப்பிட்டார். இதனையடுத்து வலயக் கல்வி அலுலகத்திலிருந்து குழுவொன்று பாடசாலைக்கு வந்து, 07ஆம் வகுப்பில் அன்று வந்திருந்த 29 மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தியதாகவும் அதிபர் தெரிவித்தார்.

பாலியல் தொந்தரவு

”இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுசரணையுடன், சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, குறித்த ஆசிரியர் எந்தவொரு வகுப்புக்கும் சென்று, பாடம் நடத்துவதற்கான நேர அட்டவணையை நான் வழங்காமலிருந்தேன்” என்றார்.

இதனையடுத்து தனக்கு பாடவேளை வழங்கப்படாமைக்கு எதிராக குறித்த ஆசிரியர் மனித உரிமை ஆணைக்குழு, வலயக் கல்வி அலுவலகம் மற்றும் ‘ஒம்புட்ஸ்மன்’ (Ombudsman) ஆகிய இடங்களில் முறையிட்டதாக அதிபர் கலீல் தெரவித்தார். அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரப்பட்டபோது, நடந்த விடயங்களைத் தெரியப்படுத்தி, உரிய இடங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்ததாகவும் கூறினார்.

பின்னர் கணக்காய்வுத் திணைக்களத்துக்கும் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்ததாகவும், மாணவர்களுக்கு கற்பிக்காமல் சும்மா இருந்து கொண்டு தான் சம்பளம் எடுப்பதாக அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருந்தாகவும் கூறிய அதிபர் கலீல், ”அதனையடுத்து அந்தத் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர்” என்றார்.

”இதன் பின்னர் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் ஒருநாள் என்னைச் சந்தித்தனர். பாடசாலையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகவும் அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் அதிபர் எடுக்கவில்லை எனவும், அவர்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக என்னிடம் கூறினார்கள். எனவே எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தார்கள். அதனையடுத்து நடந்த விடயங்கள் அனைத்தையும் அவர்களிடம் கூறினேன். அதன் பின்னர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்” என்றார் அதிபர் கலீல்.

பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மாணவிகள் பிரசன்னப்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

”இந்த நடவடிக்கைகளின் பின்னர் 31 அக்டோபர் 2019 அன்று, குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று மாதங்களுக்கு பின்னரே அவருக்கு பிணை வழங்கப்பட்டது” என அவர் விபரித்தார்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மூடிய அறையில் நடந்த அந்த வழக்கு விசாரணையின்போது 05 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் சாட்சியமளித்தனர். இதனையடுத்து வழக்கின் எதிராளியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டார். இம்மாதம் 02ஆம் தேதியும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவி

இந்த நிலையில், குறித்த ஆசிரியருக்கு எதிராக அதிபரிடம் முறைப்பாடு செய்த மாணவிகளில் ஒருவரை – அவரின் தாயினுடைய அனுமதியுடன் பிபிசி தமிழ் கடந்த புதன்கிழமையன்று (02ஆம் தேதி) சந்தித்துப் பேசியது. அதன்போது மாணவியின் பெயர் மற்றும் அடையாளங்கள் எவற்றினையும் வெளியிடக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏறாவூரைச் சேர்ந்த குறித்த மாணவி தற்போது சாதாரண தரப் பரீட்சை (11ஆம் வகுப்பு) எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார். அவரிடம், ”நீங்கள் 07ஆம் வகுப்பு படிக்கும்போது, உங்கள் ஆங்கிலப்பாட ஆசிரியர் தொடர்பில் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நீங்களும் கையெழுத்திட்டீர்களா?” என கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அந்த மாணவி ”அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நானும் கையெழுத்திட்டேன். அந்த ஆசிரியரின் சேட்டைகள் பற்றி அந்தக் கடிதத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அவற்றினை நாம் விவரிக்காமல். பொதுவாகவே எழுதியிருந்தோம். அந்த ஆசிரியர் எனக்கு அவரின் கைகளால் அடிப்பார். நான் அவ்வாறு கைகளால் அடிக்க வேண்டாம் என்றும், பிரம்பால் அடிக்குமாறும் அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் கைகளால்தான் தொடர்ந்து அடித்தார். இதனையடுத்து நான் உட்பட இவ்வாறு பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகள் இணைந்து, எமது பிரதியதிபருக்கும் ஒரு முறைப்பாட்டுக் கடிதத்தைக் கொடுத்தோம். அதிபருக்கு கடிதம் கொடுப்பதற்கு முன்னர் இது நடந்தது” என்றார்.

அதேவேளை, வேறு மாணவிகளிடம் அந்த ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாகவும், அவற்றினை தான் கண்டுள்ளதாகவும் இந்த மாணவி பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

”மாணவிகளிடம் மிக மோசமான முறையில் அவர் நடந்தார். மாணவிகளை அவர் தொடுவார். அப்போது அந்த ஆசிரியரின் கையை சம்பந்தப்பட்ட மாணவிகள் தட்டிவிடுவார்கள். சில பிள்ளைகள் ‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்’ என்று அந்த இடத்திலேயே கேட்பார்கள். இதுதொடர்பில் முறைப்பாட்டு கடிதமொன்றை அதிபருக்கு நாம் வழங்கிய பின்னர், அந்த ஆசிரியர் எமது வகுப்புக்கு வருவதில்லை” எனவும் குறித்த மாணவி கூறினார்.

இந்த வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை (04ஆம் தேதி) வருமாறு தனக்கு அழைப்புக் கிடைத்திருப்பதாகவும் மேற்படி மாணவி தெரிவித்தார்.

நீதிமன்றம்

வழக்கு விசாரணையை இடைநிறுத்த உத்தரவு

இவ்வாறான நிலையில்தான், மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் எதிராளியாகப் பெயரிடப்பட்டுள்ள ஆசிரியர் சார்பாக, அவரின் மனைவி சில கோரிக்கைகளை முன்வைத்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக, சட்டத்தரணி எம்.ஏ.எம். சித்தீக் – பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கடந்த 02ஆம் தேதி குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரின் மனைவி சார்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி அமில பல்லியகே மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.எம். சித்தீக் ஆகியோர் ஆஜராகினர்.

அந்த மனுவில், ஆசிரியருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும், தற்போது அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமான் அல்லாத வேறொரு நீதிமானுக்கு அந்த வழக்கை மாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிணங்க, மனுவை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் 09ஆம் தேதி வரை, ஆசிரியருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கு இடைக்காலத் தடைவிதித்து கடந்த புதன்கிழமை (02ஆம் தேதி) உத்தரவிட்டதோடு, 09ஆம் தேதி வரை மனுவை ஆராயும் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் முடியும் வரை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆசிரியருக்கு எதிரான வழக்கு நடைபெறுவதற்கான இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் சட்டத்தரணி சித்தீக் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

மேற்படி ஆசிரியருக்கு எதிரான வழக்கில், அவர் புணர்ச்சி (intercouse) அற்ற ரீதியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதாகவும், மாணவிகளுக்கு கையினால் அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சித்தீக் கூறினார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, இந்த வழக்கை முறையிட்டுள்ளது.

”கடந்த ஜுலை மாதம் 21ஆம் தேதி, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு அழைக்கப்பட்டு, எதிராளியான ஆசிரியருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டது. அதனையடுத்து தான் குற்றவாளியல்ல என நீதிமன்றத்துக்கு எதிராளி கூறியுள்ளார்” எனவும் சட்டத்தரணி சித்தீக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“அன்றைய தினம் திறந்த நீதிமன்றத்தில் தன்னைப் பார்த்து பேசிய நீதிவான் சமூகத்துக்கு முன்மாதிரியான தண்டனையொன்றை உனக்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்’ என கூறியதாக, வழக்கின் எதிராளியான ஆசிரியர் கூறுகின்றார்.

இதனையடுத்து இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டி, குறித்த நீதிவானுக்கு எதிராக அந்த ஆசிரியர் – நீதிச் சேவை ஆணைக்குழுவில் எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை ஜுலை 23ஆம் தேதி நேரடியாக கையளித்தார். அந்த முறைப்பாட்டின் பிரதிகளை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து கடந்த 31ஆம் தேதி குறித்த வழக்கில் ஆஜராகுவதற்காக ஆசிரியர் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோது, அந்த நீதிமன்றத்தின் நீதிவானுக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்துள்ளார் எனும் காரணத்தினால், எந்தவொரு சட்டத்தரணியும் அவர் சார்பில் ஆஜராக முன்வரவில்லை” என சட்டத்தரணி சித்தீக் குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில் – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெறவிருந்த குறித்த வழக்கு விசாரணைகள், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளன.. ஆனாலும், வழக்கின் எதிராளியான ஆசிரியரை தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் தேதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

Previous Story

ரஷ்யா யுக்ரேன் போர் : இந்தியா வல்லரசு வாய்ப்பை தவறவிட்டதா? 

Next Story

சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்!