டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ13910 கோடியை இந்தியா நிவாரணமாக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளின் உறவில் புதிய அத்யாயம் என இலங்கை அதிபர் நன்றி தெரிவிக்கிறார்.

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுரா குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுகட்டமைப்புக்கு இந்தியா ரூ.13910 கோடி உதவித் தொகுப்பை அறிவித்திருக்கிறார்.

டிட்வா புயல் 600க்கும் மேல் உயிர்களைப் பலி கொண்டது. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை அழித்து, சுமார் 2,00,000க்கும் அதிகமான மக்களை இடப்பெயர செய்தது. இந்த துயரத்தில் பங்கேற்கும் வகையில், ‘சாகர் பந்து நடவடிக்கை’ மூலம் இந்தியாவின் முதன்மை மீட்புப்படை செயல்பாடாக இந்த மறுகட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவின் உதவி

ரூ.13910 கோடியில், ரூ.3088 கோடி மானியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த தொகையை இலங்கை திருப்பி தர வேண்டியதில்லை. மீதி உள்ள ரூ.10809 கோடி, கடனாக வழங்கப்படுகிறது. இந்த கடன் மிக குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
இந்த நிவாரண உதவி சேதமடைந்த சாலைகள், ரயில்வே மற்றும் பாலங்களை சீரமைத்தல், சேதமடைந்த வீடுகளை மறுசீரமைத்தல், புயலால் பாதிக்கப்பட்ட கல்வி மற்றும் மருத்துவமனைகளை சரி செய்தல், புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளாண் நிலங்களை சரி செய்தல், எதிர்கால பேரிடர்களை சமாளிக்க இலங்கையை தயார்படுத்துதல் ஆகியவற்றிற்காக செலவழிக்கப்படும்.
எவ்வளவு உதவி செய்யப்பட்டிருக்கிறது?

புயல் பாதிப்பை அடுத்து, நவம்பர் 28ஆம் தேதி இந்தியா தரப்பிலிருந்து உதவிகள் செய்ய தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 1,134 டன் உணவு, உடைகள், நீர் சுத்திகரிப்பு கருவிகள் என நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல 14.5 டன் அளவுக்கு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இந்தியா தரப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை சென்று இருந்த அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரையும் சந்தித்து பேசி இருந்தார். மேலும் இலங்கை தமிழர் தலைவர்களை சந்தித்து புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.





