நஜீப் பின் கபூர்
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் நாட்டில் ஒரு எதிர்பார்ப்பும் பரபரப்பும் தோன்றி இருக்கின்றது. எதிர்பார்ப்பு என்பது வெள்ளி நடக்கின்ற பொது எதிரணியின் இருபத்தியோரம்-21 திகதிய நுகேகொட கூட்டம்.
அடுத்து மீண்டும் இன வன்முறையைத் தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற முயற்ச்சிக்கும் ஒரு நடவடிக்கை. இதனால் இன்று சிறுபான்மையினரின் செல்வாக்கு மிக்க அல்லது தமிழர்களின் தலைநகர் எனும் திருமலையில் ஓர் கொதி நிலை காணப்படுகின்றது.
இவற்றுக்கு மத்தியில் அரிதாகப் பார்க்கக் கூடிய ஒரு காட்சியாக இருப்பது மலையக குடிமக்கள் பிரதான எதிர்க் கட்சியினருக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். ஆனால் அரசுக்கு எதிராக மக்கள் போராடுவதுதான் வழக்கம் ஆனால் இங்கு அதற்கு மாற்றமான ஒரு நிலையும் தெரிகின்றது. இந்த வாரம் இவை பற்றிப் பேசுவோம்.
கட்டுரை அனுப்பி வைக்கின்ற நேரம் நுகோகொட கூட்டத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. கட்டுரை பிரசுரமாகும் நேரத்தில் இந்த பேரணியின் பெருபேறுகள் என்னவென்று தெரிய வருந்திருக்கும்.
இறுதிக்கட்ட ஏற்பாடுகள் என்று பார்க்கின்ற போது இந்தப் பேரணி நாம் முன்பு சுட்டிக்காட்டி இருந்தது போல முழுக்க முழுக்க மொட்டுக்கட்சி அதுவும் நாமல் தலையில் இன்று விடப்பட்டிருக்கின்றது.

கூட்டத்துக்கு ஆட்களை கூட்டி வரும் ஏற்பாடுகள் என்று பார்க்கின்ற போது மொட்டுக் கட்சியை தவிர்த்து அதிலுள்ள ஏனைய அனைத்து அமைப்புக்களும் ஒரு நூறு இருநூறு பேரைத்தான் அழைத்து வரமுடியுமாக இருக்கும். அதற்கு மேல் அவர்களிடத்தில் கூட்டம் கூட்டி வரும் சக்தி கிடையாது. அப்படியும் கூட்டம் சேர்ப்பதாக ஏதாவது கொடுக்கல் வாங்கள்கள் அங்கு இருக்கத்தான் செய்யும்.
ஒரளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கூட்டத்தை எதிர்பார்த்தாலும் நாமலுடன் இணைந்து அரசியல் செய்வது என்பது ஒரு தற்கொலை முயற்சி என்று அந்தக் கட்சி முக்கியஸ்தர்களே இப்போது கட்சிக்குள்லேயே முட்டி மேதிக் கொண்டிருக்கின்றனர்.
கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன தனது பிரதித் தலைவர் பதவியை இராஜினாமச் செய்யது விட்டார் அல்லது தனது நிலைப்பாட்டை உறவினரும் கட்சித் தலைவருமான ரணிலிடம் நேரில் கூறி இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது.
ருவன் தனது பதவியை வைத்துக் கொண்டு கட்சிப்பணிக்கு எதையுமே உருப்படியாகச் செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் கட்சிக்குள் இருந்து வருகின்றது. அதனால்தான் என்னவோ ஹரின் பர்ணந்துவுக்கு ஐதே.வில் உயர் பதவி கொடுத்து அந்தக் குறைபாட்டை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுக்கின்றது.
கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தரும் கட்சியின் செல்வாக்கான தலைவர்களில் ஒருவருமாக இருந்த காமினி திசாநாயகாவின் மகன் நவின் திசாநாயக்க தான் இந்தப் நுகேகொடப் பேரணியில் கலந்து கொள்ளத் தயாரக இல்லை என்று பகிரங்கமாகவே கூறி இருக்கின்றார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் ராஜபக்ஸாக்களுக்கு கூஜாதூக்கத் தயாராக இல்லை என்பதாக இருக்கின்றது.
ஆனால் கட்சிக்காரர்களும் தொண்டர்களும் கூட்டத்துக்குப் போக வேண்டும் என்று ரணில் கட்டாயப்படுத்தி வந்திருக்கின்றார். கூட்டத்தில் கடைசி நேரத்தில் சஜித்தை கலந்து கொள்ள எடுத்து முயற்சிகள் ஏதுவுமே கைகூடவில்லை என்றுதான் தெரிகின்றது.
மொட்டுக் கட்சியுடன் நாம் அரசியல் செய்ய முற்பட்டால் நமது அரசியல் எதிர்காலம் சூன்யமாகிவிடும் என்று பெரும்பாலான ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகின்றார்கள். பகிரங்கமாகவும் பேசுகின்றார்கள். அதே நேரம் கட்சியில் இருக்கின்ற சாகல ரத்னாயக்க வஜிர அபேவர்தன அகில விராஜ் ஹரின் பர்ணாந்து போன்ற ரணில் விசிரிகள் தலைவரைத் திருப்திப்படுத்துவதற்காக எப்படியாவது ஒரளவு கூட்டத்தை அங்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று இரவு பகலாக ஓடித் திரிகின்றார்கள்.
எனவே ஏற்பாட்டாளர்களே எதிரும் புதிருமாக இந்த இறுதி நேரத்தில் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சேறு பூசிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் கடந்த வாரம் சொன்னது போல மொட்டு கட்சி தனது அமைப்பாளர்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவர்களை வைத்து கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக இந்த நுகோகொட கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கின்றது. என்றாலும் அங்கு இருக்கின்ற சிலர் யார் வந்தாலும் வராவிட்டாலும் நாம் கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அம்பிடியத் தேரர் தானும் ஒரு வசு வண்டி நிறைய கூட்டத்துக்கு ஆட்களை கிழக்கிலிருந்து அழைத்து வருவேன் என்று நாமலிடம் நேரடியாக சென்று வாக்குறுதி வழங்கி வந்திருக்கின்றார். இதற்கு மத்தியில் இன வன்முறையைத் தூண்டி பேரணிக்கு ஆட்களைச் சேர்கின்ற ஒரு முயற்சியும் இப்போது நடந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
கலபொட அத்தே ஞானசாரத் தேரர் கூடினால் அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் போகும். ஆனால் இந்த நாட்டில் பௌத்தம் 2500 வருடங்களுக்கு மேலாக இங்கு இயங்கி வருகின்றது. ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அது இந்த நாட்டில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் யாப்பாலோ சட்டத்தாலோ மாற்றம் செய்ய முடியாதது.
இதனை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த நாட்டில் இருக்கும் அரசியல் அதிகாரத்துக்கு சவால் விடுத்து வருகின்றார். எச்சரிக்கின்றார். பௌத்த மதத்துக்குப் பேராபத்து என்ற இசுவை இவர்கள் திருமலை சம்பவத்தின் மூலம் உண்டு பண்ணி அதிலும் ஒரு சிறு தொகையினரை கூட்டத்துக்குக் கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பும் தற்போது காணப்படுகின்றது.
என்னதான் அரசு பலமாகவும் செல்வாக்காகவும் இருந்தாலும் இனவாதிகள் அதற்கு அடங்கிப் போகத் தயாராக இல்லை என்பதனைத்தான் இந்த சம்பவங்களும் செயல்பாடுகளும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதனைக் குறிப்பாக இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவது மிகவும் ஆபத்தான ஒரு வேலை என்பதனை அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரை அச்சாகி வருகின்ற நேரத்தில் நுகேகொட கூட்டம் போட்டவர்கள் அதன் வெற்றி பற்றி விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருக்ககும் அதே நேரம் ஆளும் தரப்பும் கூட்டத்தில் இருக்கின்ற நடந்த இந்தக் பலயீனங்கள் வடுக்கல் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இது அரசியலில் இயல்பான ஒன்றுதான்.
இந்தக் கூட்டம் வெற்றி பெறுகின்றதோ இல்லையோ ரணில்-ராஜபக்ஸாக்களுக்கு சஜித்தை இல்லாமல் செய்யும் ஒரு மறைமுகத் திட்டமும் இந்த பேரணியில் பின்புலத்தில் இருக்கின்றது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இதற்குப் பின்னர் எந்தக் காரணம் கொண்டும் ரணில் மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு கொண்டுவர மாட்டார்கள். அதற்காக அந்த வாய்ப்பு சஜித்துக்கு இருக்கின்றது என்றும் நாம் நம்பிக்கை வெளியிடத் தயாராக இல்லை.
அவரிடம் நிறையவே பலயீனங்கள் இருக்கின்றன. என்றாலும் சஜித்-நாமல் என்று நிலை வரும் போது அதில் நாமலை ஊதிப் பெருப்பிக்கும் ஒரு ஏற்பாடுதான் இந்தப் பேரணி. சஜீத் ஒரு செல்வாக்கான தலைவராக வருவதை ரணிலும் அவருடன் இருக்கின்ற பிரபுத்துவவாதிகளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை சஜித் நன்றாக அறிந்தே வைத்திருக்கின்றார். இதனைத்தான் ராஜபக்ஸாக்கள் தற்போது பாவித்துக் கொள்ள முனைகின்றார்கள்.
அந்தக் கதைகள் அப்படி இருக்க எதிரணியினருக்கு எதிராக குடிமக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் தலைவர்களின் கொடும்பாவிகள் எதிர்த்தல் நாடுபூராவிலும் குறிப்பாக மலையகம் எங்கும் நடந்திருக்கின்றது. வரவு செலவுத்திட்டத்தின் போது வரலாற்றில் முதல் முறையாக 400 ரூபா சம்பளம் அதிகரிப்பு நிகழ்ந்திருக்கின்றது. இந்த நாட்டுக்கு அவர்கள் வந்தது இருநூறு ஆண்டுகள் கடந்திருக்கின்ற இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிகரிப்பு நிகழ்ந்தது கிடையாது.
ஆனாலும் இந்த என்பிபி. ஆட்சியில்தான் அப்படி ஒரு நிகழ்வு இப்போது நடந்திருக்கின்றது. இந்த நிதியை அரச திறைசேரியில் இருந்து அதாவது மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்குவது மாபெரும் தவறு. அப்படிச் செய்திருக்கக் கூடாது அது சட்ட விரோதமானது என்று எதிர்க்கட்சியினர் தமது கண்டணங்களையும் தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இதற்கொதிராக பல முறைப்பாடுகளைக் கொடுத்திருந்தார். அந்தக் கட்சியின் பேச்சாளரும் இது அரசின் தவறான முன்மொழிவு என்று கண்டித்திருந்தார். அந்த அணியில் இருக்கின்ற மு.கா. தேசிய பட்டியல் உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான நிசாம் காரியப்பர் இதனை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மலையக மக்களுக்கு சம்பளம் வழங்குவது சட்டவிரோதமானது என காரியப்பர் கண்டித்திருந்தார். சஜித் தரப்பில் தேசிய பட்டியல் கிடைத்த நன்றிக்கடனுக்காகத்தான் அவர் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்று நாம் கருதுகின்றோம்.
ஒரு சிறுபான்மை சமூகம் மற்றுமொரு சிறுபான்மை சமூகத்தைக் காட்டிக் கொடுத்த ஒரு சம்பவமாகத்தான் நாம் இதனை பார்க்கின்றோம். அதுவும் இந்த அப்பாவி மலையகத்தாருக்கு இவர்கள் இப்படித் துரோகம் பண்ணி இருக்கக் கூடாது.
அதே நேரம் இதே கட்சியில் வெற்றி பெற்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் ராதகிருஸ்னண் தேசிய பட்டியில் உறுப்புரிமை பெற்ற மனோ கணேசன் ஐதேக.வில் வெற்றி பெற்ற ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்தை ஆதரித்துப்பேசியதுடன் 2026 வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இது என்ன கட்சி என்ன கொள்கை.!
அதே நேரம் முதல் நாள் நாடாளுமன்ற விவதத்தில் விவாதத்தில் சம்பள அதிகரிப்புக்கு எதிராக கருத்துச் சொன்ன ஐமச. தலைவர் சஜித் அடுத்த நாள் விஷேட பத்திரிகையாளர் மாநாடு போட்டு இந்த சம்பள அதிகரிப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிதிருந்ததுடன் இது சட்ட ரீதியான நடவடிக்கைதான் என்றும் சன்றிதழ் வழங்கி இருந்தார்.
அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா ரோஹினி கவிரத்ன எம்.பி. நடவடிக்கைகள் செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட செயல்பாடுகள். அவை கட்சியின் கருத்துக்கள் அல்ல என்று சொல்லிச் சமாளிக்க முயன்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் கட்சி உறுப்பினர்களின் இந்த செயல்பாடுகளுக்கு சிலர் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் நமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் ஐதேக. மற்றும் ஐமச. சக்தியில் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தவர்கள்.
இந்த அசாதரண சம்பள அதிகரிப்பால் தங்களது வாக்குகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தில்தான் அவர்கள் இந்த சம்பள அதிகரிப்புக்கு எதிராக போர்கொடி பிடித்திருக்கின்றார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
ஆனால் இன்று மலையகம் எங்கும் இவர்களுக்கு எதிராக குறிப்பாக எதிர்க் கட்சிக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். இதனால் பிரதான எதிர்க்கட்சியினருக்குப் பெரும் கலக்கம்-நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.
இதன் பின்னர் இந்தக் கட்சிகளை மலையக மக்கள் தங்களது துரோகிகளாக பார்க்கின்ற ஒரு நிலை தோன்றி இருக்கின்றது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி மூக்குடைபட்டிருக்கின்றது என்பது தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
எதிரணியில் இருக்கின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால் நமக்கு மலையகத்தில் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என்பதற்கு அஞ்சித்தான் இதற்கு அவர்கள் வாக்களித்திருந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார் மலையக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராச கிருட்டணன்.
மாகாணசபைத் தேர்தல் விரைவாக வருமாக இருந்தால் இதன் பிரதி பலன்களை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். மலையக மக்களும் அரசுக்கு வரிப்பணம் கட்டிக்கொண்டுதானே இருக்கின்றார்கள். அதே போன்று அஸ்வெஸ்ம போன்ற திட்டங்களுக்கும் அரச நிதியில் இருந்து பணம் கொடுக்க முடியுமாக இருந்தால் இது மட்டும் எப்படி சட்ட விரோதாமாக அமையமுடியும்.?
ஜனாதிபதிகள் முதல் சாதாரண உள்ளூராட்சி உறுப்பினர்கள் வரை மக்கள் வரிப் பணத்தை அப்பட்டமாகக் கொள்ளையடிக்க முடியுமாக இருந்தால் சம்பளத்துக்கு அரசு வழங்கி இருக்கின்ற இந்த மானியத்தை எப்படித் தவறு என்று பேசமுடியும் என்று நாம் கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.





