குழந்தையை தத்தெடுக்க திருநங்கைக்கு அனுமதி மறுப்பு!

‘ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுக்கும் வகையில் இந்திய அரசின் தத்தெடுப்பு ஆணையத்தில் (CARA) விண்ணப்பித்தேன். ஆனால், திருநங்கை என்ற காரணத்துக்காக மனுவை நிராகரித்துவிட்டனர்’- சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் மனுவில் இவ்வாறாக திருநங்கை பிரித்திகா யாஷினி குறிப்பிட்டிருந்தார்.

திருநங்கை குழந்தை தத்தெடுக்கும் உரிமை

சிறார் நீதிச் சட்டத்தில் திருநங்கை என்ற பிரிவு இல்லாதது தான் மனு நிராகரிக்கப்பட காரணமாக இருந்ததாக, பிரித்திகா யாஷினியின் வழக்கறிஞர் கூறுகிறார்.

‘பிரித்திகாவின் மனு மீது இந்திய அரசு 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என, அக்டோபர் 7 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசின் தத்தெடுப்பு விதிகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி பங்கேற்றார்.

முன்னதாக, திருநங்கை என்ற காரணத்துக்காக உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் பிரித்திகா யாஷினியால் பங்கேற்க முடியவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேசம், இருமல் மருந்து கலப்படம், குழந்தைகள் உயிரிழப்பு, தமிழ்நாடு, இருமல் மருந்து சர்ச்சை

2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரித்தியா யாஷினி, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுப்பதற்கு விரும்பினார்.

“அவர் திருமணம் செய்யப் போவதில்லை அவருக்கு திருமணம் என்பது சாத்தியமில்லாமல் இருப்பதால் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் முயற்சியில் இறங்கினார்” எனக் கூறுகிறார், பிரித்திகா யாஷினியின் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார்.

“இதற்காக மத்திய அரசின் தத்தெடுப்பு ஆணையத்தின் இணையதளத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி ஒப்புதல் அளிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வழக்கின் மனுவில் கூறப்பட்டது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில் சில விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

‘ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன். அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பித்தேன். அதன்பிறகு மாநில அரசின் தத்தெடுப்பு வள முகமையில் (SARA) இருந்து வீட்டுக்கு வந்து ஆய்வு (Home study report) செய்தார்கள்’ என மனுவில் கூறியுள்ளார்.

திருநங்கை மொழி பேசும் புத்தகம் | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks

குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் நபர் விண்ணப்பித்த பிறகு அவரது பின்புலத்தை ஆய்வு செய்வதற்காக மாநில அரசால் (மாநில தத்தெடுப்பு முகமையால் (State Adoption Resource Agency – SARA) இப்படியொரு நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வது தொடர்பான விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில், ‘தத்தெடுக்கும் பெற்றோரின் விவரங்களைக் கொண்ட அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை, குடும்ப பின்னணி, வீடு மற்றும் புறச் சூழல் ஆகியவை அடங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விண்ணப்பதாரரின் வீட்டுக்கு அருகில் உள்ள மூன்று ஆதரவற்ற இல்லங்களைக் குறிப்பிட வேண்டும். இதன்பிறகு மனுதாரரின் பின்புலம், பணிபுரியும் இடம், அவரின் பொருளாதார சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையாக தத்தெடுப்பு மையத்துக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது’ என, வழக்கின் மனுவில் பிரித்திகா யாஷினி குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய விண்ணப்பத்தின் நிலவரம் குறித்துக் கேட்டபோது, நேரில் வருமாறு ஓர் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து அழைப்பு வந்ததாக மனுவில் கூறியுள்ள பிரித்திகா யாஷினி, ‘நான் யார் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. திருநங்கை என்பதால் தத்தெடுப்பதற்கு விதிகளில் இடமில்லை எனக் கூறி மனுவை நிராகரித்துவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாநில அரசின் தத்தெடுப்பு வள முகமை, மனுதாரர் தொடர்பான ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கிறது. இதற்கான இறுதி ஒப்புதலை இந்திய அரசின் தத்தெடுப்பு வள ஆணையம் வழங்க வேண்டும்’ என மனுவில் பிரித்திகா யாஷினி தெரிவித்துள்ளார்.

‘தத்தெடுப்பது தொடர்பான சிறார் நீதிச் சட்டத்தில் திருநங்கை, திருநர் தம்பதி, திருநம்பி குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக தனது மனுவை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். இது சட்டவிரோதம்’ எனவும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

“வழக்கின் வாதத்தின்போது, தத்தெடுப்பு தொடர்பான விதிகள், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14ஐ (சமத்துவத்துக்கான அடிப்படை உரிமை) மீறுவதாக குறிப்பிட்டோம்” என்கிறார், வழக்கறிஞர் சஞ்சீவ் குமார்.

திருநங்கை குழந்தை தத்தெடுக்கும் உரிமை

சிறார் நீதிச் சட்டம் கூறுவது என்ன?

“சிறார் நீதிச் சட்டம் பிரிவு 56 மற்றும் 57 ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. திருநங்கைகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

சிறார் நீதிச் சட்டம் 56ன்படி சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி,

* ஆதரவற்ற மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் குடும்ப உரிமையை உறுதி செய்யும் வகையில் தத்தெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

*ஓர் உறவினரிடம் இருந்து மற்றொரு உறவினருக்கு தத்து அளித்தால் மதத்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் விதி மற்றும் தத்தெடுப்பு வள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி செயல்படலாம்.

* நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் குழந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றோ அல்லது பராமரிப்பை வெளிநாட்டில் உள்ள மற்றொரு நபருக்கு மாற்றினால் பிரிவு 80ன்படி தண்டிக்கப்படுவார்.

சிறார் நீதிச் சட்டம் 57ன்படி,

* குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர் உடல்ரீதியாகவும் நிதி மற்றும் மனரீதியாகவும் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.

*ஒரு குழந்தையை நல்லமுறையில் வளர்க்கும் வகையில் தத்தெடுப்பதற்கான உத்வேகம் இருக்க வேண்டும்.

*தத்தெடுக்கும்போது மனைவியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

* தனி நபரோ அல்லது விவகாரத்து பெற்ற நபரோ தத்தெடுப்பு விதிகளின்படி குழந்தையை தத்தெடுக்கலாம்.

*ஒரு ஆண் நபர், பெண் குழந்தையைத் தத்தெடுக்க தகுதியற்றவர்.

இந்திய அரசின் விதிகள் என்ன சொல்கின்றன?

இதை அரசிழிதழில் (2022 ஆம் ஆண்டு) வெளியிட்டுள்ள இந்திய அரசு, ‘தத்தெடுக்கும் நபர் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சூழலில் இருக்கக் கூடாது. எந்தவொரு குற்றச் செயலிலும் தண்டனை பெற்றிருக்கக் கூடாது அல்லது குழந்தை உரிமை மீறல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ‘எந்தப் பாலினத்தைச் சேர்ந்த குழந்தையையும் ஒரு பெண் தத்தெடுக்கலாம். எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள் காட்டிப் பேசிய பிரித்திகா யாஷினியின் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார், “எந்தக் காரணத்தைக் கொண்டும் திருநங்கைகளிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. தமிழ்நாட்டில் திருநங்கை ஒருவர் குழந்தை தத்தெடுப்புக்காக விண்ணப்பிப்பது இதுவே முதல்முறை” என்கிறார்.

” ஓர் ஆண், பெண் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால், தனியாக வசிக்கும் தாய் (single parent) தத்தெடுக்கலாம். யார் தத்தெடுக்கக் கூடாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது தடையாக பார்க்கப்படும். அவ்வாறு குறிப்பிடாவிட்டால் நீதிமன்றமே திருநங்கை பிரிவை சேர்க்குமாறு உத்தரவிடலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

12 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு

இந்த வழக்கில் இந்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், பிரித்திகா யாஷினியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, “சிறார் நீதிச் சட்டத்திலும் தத்தெடுப்பு விதிகளிலும் மூன்றாம் பாலினத்தவர்களை தத்தெடுக்க அனுமதிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை. ஆகவே, மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது” எனக் கூறினார்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, “மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையை வழங்குமாறு இந்திய அரசுக்கு இரண்டு வாரங்களில் மனுதாரர் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்” எனக் கூறினார்.

“விண்ணப்பத்தின் மீது 12 வாரங்களுக்குள் இந்திய அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை அவர் முடித்து வைத்தார்.

வழக்கு தொடர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாஷினியின் கருத்தைப் பெற பிபிசி தமிழ் முயன்றது. பிரித்திகா யாஷினி, ” தற்போது அரசுப் பணியில் உள்ளதால் துறையின் அனுமதியின்றி ஊடகங்களிடம் இது குறித்துப் பேச இயலாது” என்று மட்டும் பதில் அளித்தார்.

“குழந்தையைத் தத்தெடுப்பதற்கு ஒருவர் விரும்பினாலும் உடனே தத்தெடுத்துவிட முடியாது. அதற்கான வரிசைப்படி மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல்களும் உள்ளன” எனக் கூறுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் அ.தேவநேயன்.

“மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு தத்தெடுக்க விரும்பும் நபரின் பின்னணி, பொருளாதார சூழல், குடும்ப நிலவரம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளித்த பிறகே அடுத்தகட்டத்தை நோக்கி விண்ணப்பம் நகரும்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தத்தெடுப்பு விதிகள் என்ன?

குழந்தைகளின் தத்தெடுப்பது தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, * தத்தெடுப்பை செயல்படுத்தும்போது குழந்தையின் சிறந்த நலனை மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

* குழந்தையை சமூக, கலாசார சூழலில் வைப்பதைக் கருத்தில் கொண்டு குழந்தையை இந்திய குடிமக்கள் தத்தெடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* தத்தெடுப்பு விண்ணப்பங்களை ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் ரகசியத்தன்மை இந்திய தத்தெடுப்பு வள ஆணையத்தால் பராமரிக்கப்படும்.

* குழந்தைகள் நலக் குழுவால் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், தத்தெடுப்புக்குத் தகுதியானவர்கள் என அரசிதழில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

‘மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்’

சிறார் நீதிச் சட்டத்தின்படி தத்தெடுப்புக்கான ஆணைகள் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இதனை எளிமைப்படுத்தி மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்து 1.9.2022 அன்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரே முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பெற்றிருப்பதால் தத்தெடுப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பரிசீலனைக்கு மாற்றப்படுவதாக இந்திய அரசு தெரிவித்தது.

இதற்கு மாறாக இடைத்தரர்கள் மூலம் தத்தெடுப்பு நடவடிக்கையில் இறங்கினால் மூன்று ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

“கணவன், மனைவியாக இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தத்தெடுப்பை நோக்கிச் செல்கின்றனர்” எனக் கூறும் குழந்தைகள் நல ஆர்வலர் அ.தேவநேயன், “தத்தெடுப்பில் திருநங்கை என்ற கோணத்தில் பார்ப்பது தவறானது” என்கிறார்.

“அவர்களின் இன்றைய வாழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. நீதிமன்றத்தில் போராடி காவல்துறையில் பணியில் பிரித்திகா யாஷினி சேர்ந்தார். அவருக்குப் பொருளாதார சிக்கல்கள் இல்லை. திருநங்கைகளும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் வகையில் சிறார் நீதிச் சட்டத்தில் விதிகளைச் சேர்க்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Story

කින්ඩි නම් මෙන්න කින්ඩි | සමන්ත විපක්ෂය පචම කරයි | තිත්ත වුණත් සිරාම කතාවක් | අද දවසේ සුපිරිම කතාව

Next Story

ළමුන් දෙදෙනෙක් අතුරුදන් වීමෙන් මහනුවර කැලඹෙයි