அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும் இந்த தாக்குதலின்போது இருநாடுகளையும் ஈரான் ஏமாற்றியது.
தாக்குதலுக்கு முன்பாகவே 440.9 கிலோ எடை கொண்ட 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ரகசிய இடத்தில் பதுக்கியது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில் இஸ்ரேல், அமெரி்க்காவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் யுரேனியத்தை பாதுகாத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரானுக்கு கடும் மோதல் போக்கு உள்ளது.
குறிப்பாக காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை ஈரான் கண்டித்தது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இது கடந்த ஜூன் மாதம் போராக மாறியது.
இந்த போர் மொத்தம் 12 நாட்கள் வரை நடந்தது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நுழைந்தது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்த சமயத்தில் கடந்த ஜூன் 22ம் தேதி திடீரென்று அமெரிக்கா, ஈரானில் உள்ள முக்கிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசியும், ஏவுகணைகளை வீசியும் தாக்கியது. ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா ‛அட்டாக்’ செய்தது.
இந்த 3 அணுசக்தி நிலையங்களில் தான் ஈரான் தனது அணு ஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்டி வந்த நிலையில் அதனை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதமடைந்தன.
இதனை ஈரானும் உறுதி செய்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இப்படி பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தாலும் கூட ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. ஈரானில் இனி அணு ஆயுதம் செய்ய முடியுமா? முடியாதா?, அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்பை அமெரிக்கா முற்றிலும் நொறுக்கிவிட்டதா?
இல்லாவிட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லையா? என்று பல கேள்விகள் எழுந்தன. அப்போது தான் இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து 440.9 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பத்திரப்படுத்தி உள்ளதாகவும், இதன்மூலம் 10 அணுஆயுதங்களை தயாரிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்த 440.9 கிலோ யுரேனியம் பற்றி ஈரான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவுக்கான அணுஆயுத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. ஆனால் ஈரான் மவுனம் காத்தது. அதன்பிறகு கடந்த 11ம் தேதி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், ‛‛இஸ்ரேல்-அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டது” என்று கூறினார்.
இதன்மூலம் நாங்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பத்திரப்படுத்தவில்லை. அது இடிபாடுகளுக்குள் உள்ளது என்று அறிவித்தது. ஆனால் இஸ்ரேல் தரப்போ ஈரான் பாதுகாப்பாக அந்த யுரேனியத்தை பதுக்கி உள்ளதாக தெரவித்துள்ளது.
அதாவது ஈரான் கையில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ எடை கொண்ட யுரேனியம் இருப்பதை இ்ஸ்ரேல் உளவுத்துறையான ‛மொசாட்’ உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் யுரேனியத்தை பதுக்கி வைத்துள்ள இடத்தையும் அறிந்து வைத்துள்ளதாக மொசாட் தெரிவித்துள்ளது.
ஈரான் மீண்டும் அந்த யுரேனியத்தை பயன்படுத்த நினைத்தால் இஸ்ரேல் உடனடியாக தலையீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‛மொசாட்’ அமைப்பு உறுதி செய்துள்ளது என்று ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தற்போது வரை அந்த யுரேனியத்தை ஈரான் பயன்படுத்தவில்லை. அதுதொடர்பான நடவடிக்கையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்பதையும் இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் சார்பில், ‛‛இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலுக்கு பிறகு ஈரான் தனது யுரேனியம் சார்ந்த நடவடிக்கையை தொடங்கவில்லை. மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் உள்பட தாக்குதலுக்கு உள்ளான அணுசக்தி நிலையங்களை புதுப்பிக்க ஈரானுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும்” என ‛ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐநாவுக்கான அணுஆயுத கண்காணிப்பு அமைப்பான IAEA ஈரானிடம் 440.9 கிலோ எடை கொண்ட 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இந்த யுரேனியத்தை இன்னும் செறிவூட்டுவதன் மூலம் ஈரானால் அணுஆயுதம் தயாரிக்க முடியும் என்று வார்னிங் செய்தது.
இதையடுத்து தான் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து அழித்தது.
ஆனால் தற்போது அந்த யுரேனியத்தை ஈரான் ரகசியமாக பூமிக்கடியில் வைத்துள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இது மீண்டும் ஈரான் மீதான கவனத்தை அதிகப்படுத்தி உள்ளது.





