கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவதற்காக கூடியிருந்த போது, இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு கத்தாரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த நிலையில்தான், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தைக்கு வந்து இருந்த தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒப்புதல் அளித்ததாகவும் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதனை மறுத்துள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து தாக்குதல்
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- “அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற கொடூர சம்பவத்திற்கு பொறுப்பான ஹமாஸ் அமைப்பினரின் மூத்த தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோஹா நகரில் உள்ள பிரதான பகுதியான கடாரா மாவட்டத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் அப்பகுதி புகைமண்டலம் போல மாறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
கண்டனம் தெரிவித்த கத்தார்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா முன்மொழிந்த திட்டம் குறித்து விவாதிக்க ஹமாஸ் பிரதிநிதிகள் தோஹாவில் கூடியிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு கத்தாரும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் என்று கத்தார் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அரசியல் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கத்தார் கூறியுள்ளது.
மேலும், இஸ்ரேலின் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் மீறும் செயல் என்றும் கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜேத் அல் அன்சாரி கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.