தடுக்க தவறிய அயன்டோம்!
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை இஸ்ரேலின் அயன் டோம் அமைப்பு தடுத்துவிடும்.
அதேபோல சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கும். ஆனால் நேற்று நடந்த தாக்குதலில் இது இரண்டும் நடக்கவில்லை. இதனால் இஸ்ரேல் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தெற்கு இஸ்ரேலில் உள்ள ராமோன் விமான நிலையத்தின் வருகைப் பகுதியைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் விமான நிலைய ஆணையமும் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலின்போது எந்தவித எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இஸ்ரேலில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. இத்தகைய அமைப்புகள் இருக்கும்போது, வரும் தாக்குதல்கள் குறித்து சைரன்கள் ஒலிக்காமல் இருப்பது அரிதான நிகழ்வு.
இஸ்ரேலிய விமானப்படை மேற்கொண்ட விசாரணையில், ஹவுதிக்களின் ட்ரோன் முன்னரே கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அது அச்சுறுத்தும் ஒன்றாக வகைப்படுத்தப்படாததால், பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி விமான நிலையத்திற்குள் நுழைய முடிந்ததாகவும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
“தற்போதுள்ள கண்டறிதல் அமைப்புகளில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை” என ராணுவம் கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாக்குதலின்போது, மேலும் சில ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ராமோன் விமான நிலையத்தின் தெற்குப் பகுதி வான்வெளி போக்குவரத்துக்காக மூடப்பட்டது.
சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ராமோன் விமான நிலையம் இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக செங்கடலின் தெற்கு முனையில் உள்ள எய்லாட் நகரத்திற்கு சேவையை வழங்குகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் ஜன்னல்கள் உடைந்தும், கண்ணாடித் துகள்கள் சிதறியும் கிடந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
இஸ்ரேலின் அவசரகால சேவை நிறுவனமான மேகன் டேவிட் ஆடம், பிற்பகல் 2:35 மணிக்கு விமான நிலையப் பகுதியில் ஒரு ட்ரோன் விழுந்ததாக தகவல் கிடைத்ததாகக் கூறியது.
இத்தாக்குதலில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. உலகிலேயே மிகவும் வலுவான வான் பாதுகாப்பு அம்சம் கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் இஸ்ரேல், சாதாரண ட்ரோனை இடைமறிக்காமல் விட்டது ஏன் என்று கேள்வி எழுந்திருக்கிறது.