21வது திருத்த சட்டவரைவு: ஒப்புதல் பெறுமா?

Numeral 21, twenty one, isolated on white background, 3d render

இலங்கை ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்தல், நாடாளுமன்ற பிரவேசத்திற்கு இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டவரைவை செயல்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர்.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இல்லையென்றால், இது காலத்தை கடத்தும் ஒரு முயற்சியாக இருக்குமா?

சட்டவரைவு அமைச்சரவையில் சமர்பிப்பு

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் கடந்த 23ம் தேதி, அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டவரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சட்டவரைவு குறித்து மே மாதம் 27ம் தேதி வெள்ளிகிழமையன்று கலந்துரையாட, உடனடியாக அனைத்து கட்சி தலைவர்களிடமும் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி சட்டவரைவு தயாரிக்கப்பட்டு, அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற அனுமதிக்காக, சபையில் சட்டவரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

21வது திருத்தத்த யோசனைகள் என்ன?

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரத்தை வரையறுத்தல்
  • அரசியலமைப்பு சபையொன்றை ஸ்தாபித்தல்
  • சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்தல்
  • இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்காதிருத்தல்
  • அரசின் உயர் பதவிகளுக்கான நியமனங்களை நியமிக்கும் அதிகாரம், அரசியலமைப்பு சபைக்கு வழங்குதல்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்தல், அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் ஊடாக வலுவிழக்கச் செய்யப்பட்ட அரசமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் ஸ்தாபித்து, அதனை மேலும் வலுவடையச் செய்தல் இந்த புதிய சட்டவரைவு ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்பு சபையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.

இதைத் தவிர, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினால் பிரேரிக்கப்படும் தொழிலாளர் ஒருவரும் இதில் இடம் பெறுவர்.

இலங்கை வணிக சபையினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவரும், அரசியலமைப்பு சபைக்குள் இடம் பெறுவார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயரிடப்படும் அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவரையும் ஜனாதிபதி, இந்த சபைக்கு நியமிக்க வேண்டும்.

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அரசியலமைப்பு சபைக்கு உள்வாங்கப்பட வேண்டும்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக சபாநாயகர் செயற்படவுள்ளார்.

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்

சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் வலுவடையச் செய்து, தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, நீதி ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு, தேசிய போலீஸ் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு ஆகியவற்றை இந்த சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் பிரகாரமே, குறித்த ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜனாதிபதியினால் நியமிக்க முடிகின்றமை விசேட அம்சமாகும்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது.

இலங்கை பிரஜை அல்லாத அல்லது இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவருக்கு, நாடாளுமன்ற பிரவேசத்தை ஏற்படுத்தும் வகையிலான சரத்து, 21வது திருத்தத்தின் ஊடாக ரத்து செய்யப்படுகின்றது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்திலிருந்து அதனை அமல்படுத்துவதற்கான அதிகாரம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.

உத்தேச திருத்த சட்டத்தின் மூலம் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைவர் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதி சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர், அரச கணக்காய்வாளர், போலீஸ் மாஅதிபர், மத்திய வங்கி ஆளுநர், நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரை, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கு அமைவாகவே நியமிக்க முடியும்.

இந்த நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகள் கிடைத்து, 14 நாட்களுக்குள் அதனை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என சட்டமூலத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களை, பிரதமரின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்க வேண்டும் என்பது சிறப்பம்சமாகும்.

19வது திருத்தத்திலுள்ள முக்கிய விதிகள், 21ல் சேர்க்கப்படவில்லை என சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்திலுள்ள மிக முக்கிய விதிகள், 21வது திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பிலான தமது கவலையை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

”அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி தனக்கான விடயங்கள் மற்றும் பணிகள் வழங்குவதைத் தடுத்தது. எனினும், 21வது திருத்தத்தில் அவ்வாறான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை. அதனால், ஜனாதிபதிக்கு அமைச்சு பொறுப்புக்களை தொடர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும், எந்தவொரு விடயதானங்களையும், பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளவும், எந்தவொரு அமைச்சின் விடயதானங்களையும், பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21வது திருத்தத்தற்கு, அரசியலமைப்பின் 44(2)வது சரத்து உள்வாங்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதிக்கு அமைச்சு பொறுப்புக்களை தம்வசம் வைத்திருக்கும் அதிகாரத்தை இல்லாது செய்து, அவருக்கு ஏதேனும் விடயதானங்கள் அல்லது பொறுப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.

இதைத்தவிர, அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு மாறாக, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நான்கு ஆண்டுகளின் பின்னர் மாத்திரமே ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் வகையிலும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தல் மற்றும் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்கள் அவ்வாறே காணப்படுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள், 19வது திருத்தத்தில் இருந்தவாறான ஏற்பாடுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிடுகின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைகளையும் 21வது திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

01. அரசியலமைப்பு சபை அனுமதியுடன் (மத்திய வங்கி ஆளுநர் தவிர்த்த) நியமிக்கப்படும் நிதி சபை உறுப்பினர்களுக்கான ஏற்பாடுகள்.

02. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், தூதுவர்கள், தூதுக்குழுக்களின் பிரதானிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் – அமைச்சுக்களுடன் கலந்துரையாடி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்.

03. ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் – அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்.

04. சுயாதீன ஆணைக்குழுக்களின் நிதி சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்த, அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்து வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், 17வது திருத்தத்தில் காணப்பட்ட விதத்தில் அரசியலமைப்பு சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 7ல் இருந்து 5ஆக குறைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

21வது திருத்தம் இலங்கைக்குள் அமல்படுத்துவது அத்தியாவசிய நடவடிக்கை என்பதனால், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

”நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாது செய்யுங்கள்”

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்யுமாறு எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

”அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, 20வதை ரத்து செய்து, 19தை முழுமையாக கொண்டு வருவதற்கும், சட்டவாதிக்கத்தை வலுப்படுத்தும் திருத்தங்களை நோக்கி இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி தலைமையிலான அசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தொடர்ந்தும் மக்களை ஏமாற்றாது, அரசியல் சூழ்ச்சிகளை செய்யாது, சரியான உரிய நடைமுறைகளை பயன்படுத்தி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு நாம் முன்வைத்த 21வது திருத்தத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான நடவடிக்கைகளுக்கு நாமும், எமது நாட்டு மக்களும் தயார் இல்லை. தொடர்ந்தும் இந்த நாட்டு மக்களை ஏமாற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம்” என எதிர்கட்சித் தலைவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ஜுன் மாத முதல் வாரத்தில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 21வது திருத்தத்தை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

அமைச்சரவையின் தீர்மானமாக, சட்ட மாஅதிபரினதும், சட்டமூல பிரிவின் அனுமதியுடனும் இந்த நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

”குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம், போலீஸ் சுயாதீனம்,அரச சேவை சுயாதீனம், ஊழல் ஒழிப்புக்கான ஏற்பாடுகளில் உள்ள அதிகார வர்க்கத்திற்கு சார்பாக ஏற்பாடுகள், தேர்தல்களின் போது அந்தந்த கட்சியின் வேட்பாளர்கள் செலவிடும் முறைகள் தொடர்பிலான போலி தகவல்களை வெளியிட்டு, மற்றுமொரு வேட்பாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தல், கட்சிகளை வெற்றி பெற செய்யும் ஊடக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவொன்று அதிகாரத்துடன் நாம் அமைக்க வேண்டும். இந்த நாட்டிற்கு தற்போது அது அத்தியாவசியமானது. அப்படியாயின் மாத்திரமே சுத்தமான அரசியல்வாதிகளை எம்மால் உருவாக்க முடியும்” என அவர் குறிப்பிடுகின்றார்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள், இந்த நாட்டில் பதவிகளை வகிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

”வெளிநாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் பதவிகளை வகித்தல், பிரதமர் பதவியை வகித்தல், ஜனாதிபதி பதவியை வகித்தல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தல் ஆகியவற்றுக்கான இயலுமை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இது பஷில் ராஜபக்ஸவை இலக்காக கொண்ட விடயம் கிடையாது. நாட்டின் பிரஜை இல்லாத ஒருவர், வேறொரு நாட்டின் பிரஜைக்கு நாட்டின் பொறுப்பை ஒப்படைக்க முடியுமா?. அது பாரியதொரு பிரச்சினை. அது இந்த நாட்டின் முக்கிய விடயமாகும். 21வது திருத்தம் மற்றும் அதன் வரைவு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நிலைமை குறித்து நாம் தெளிவாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில், எமக்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் உரிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்திற்குள், இடைகால அரசாங்கத்திற்குள் நிபந்தனைகளுடன் நாம் செய்ய தயார்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

Previous Story

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கின்றார் மஹிந்த?

Next Story

"இலங்கையை இந்தியா 2500 ஆண்டுகளாக நாசமாக்கியுள்ளது"