நஜீப் பின் கபூர்
நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல்
*****
ரணிலால் ஐதேக. அழிந்தது.மைத்திரியால் சு.கட்சி நாசமானது.
கோடா மொட்டை கசக்கியதன் விளைவுதான் அனுர எழுச்சி!
அரசியல் தன்னலங்கள். குடிகளின் பலம் பலயீனம் ஓர் பார்வை
*****
அடுத்த நொடியில் என்ன நடக்கும்? இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு உயிர் வாழ முடியும் என்பதெல்லாம் நிச்சயம் இல்லாத விவகாரங்கள்தான். என்றாலும் குறுகிய காலத் திட்டங்கள் மத்திய காலத் திட்டங்கள் நீண்டகாலத் திட்டங்கள் என்பது மனிதனிடத்திலும் சமூகங்களிடத்திலும் நிருவாக-அரசியல் மட்டங்களிலும் இருந்து வருகின்றன. ஒரு வகையில் அது இயல்பானதும் மற்றொருவகையில் அவை திட்டமிடப்பட்டவையாகவும் அமைகின்றன. மனிதனை எடுத்துக் கொள்வோம். அந்த ஜீவன் தாயின் கருவறைக்குள் குடிகொண்ட பின்னர் உள்ள செயல்பாடுகளைச்சற்றுப் பாருங்கள். கரு சிசுவாகி குழந்தையாகி பள்ளிச் சிறுவன் இளைஞன் குடும்பஸ்தன் பாட்டன்-பாட்டி என்றெல்லாம் பருவங்கள் அல்லது காலங்கள் உண்டு. இங்குதான் திட்டமிட்டதும் இயல்பானதும் வருகின்றன.
அந்த வகையில் 2029 ஆண்டுக்கு இன்னும் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் வரை இருக்கின்றன. எனவே அதனை ஒரு குறுகிய காலம் என்றுதான் பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்த குறுகிய காலத்துக்குள் நமது நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டி இருக்கின்றது. தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற என்பிபி. ஜனாதிபதி அனுரகுமாரவின் பதவிக்காலம் 2029 வரைதான் இருந்து வருகின்றது. இதற்கிடையில் என்பிபி. ஜனாதிபதி அனுராவை கோடாபே ராஜபக்ஸாவைப்போல விரட்டியப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற கணக்கில்தான் நமது இந்த அரசியல் பிரவேசமும் விமர்சனங்களும் அமைகின்றன. இங்கு தீர்க்கமான சக்தி ஆளும் என்பிபி. அடுத்து நாட்டில் இருக்கின்ற எதிரணி அரசியல் செயல்பாட்டாளர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் குடிமக்கள் எடுக்கும் முடிவுகள் இது விவகாரத்தில் தீர்க்கமாக அமையும்.

இந்த விவகாரங்களை பேசுமுன்னர் இங்கு ஒரு சிறுகுறிப்பையும் பதிய வேண்டும் போல் இருக்கின்றது. நமது கட்டுரைகளைப் படித்து விட்டு அது பற்றி கலந்துரையாடல் செய்கின்ற நண்பர்கள் சகாக்கள் பலர் நமக்கு இருக்கின்றார்கள் அவர்களில் ஒருவர் நமது கட்டுரைகள் தொடர்பில் இப்படி ஒரு குறிப்பை முன்வைத்தார். நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத சில கருத்துக்களை-தகவல்களைச் சொல்லி சில சமயங்களில் எங்களது தலைகளை நீங்கள் குழப்பிப் போடுகின்றீர்கள் என்று ஒரு கருத்தையும் சொல்லி இருந்தார். அவரது கருத்துக்கு அமைவாகத்தான் நமது இந்த கட்டுரையின் போக்கும் அமையும் என்று நாம் நம்புகின்றோம். தற்போதய ஆளும் என்பிபி.க்கு எதிரான பெரிய இசுக்கள் ஏதும் கிடையாது. தித்வா நெருக்கடியுடன் வந்த சேதாரங்கள் அதனைத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற ஈரான்-அமெரிக்க இஸ்ரேல் போரின் பின்விளைவுதான் பிரச்சினை என்றிருக்கின்றன.
ஜேவிபிக்கு முதல் ஜனாதிபதித் தேர்தல் பிரவேசம் 1982ல் அமைந்தது. அன்று கட்சியில் கோட்பாதர்தான் அவர்களின் வேட்பாளர். அந்தத் தேர்தலில் ஐதேக-ஜே.ஆர். ஜெயவர்தன (3450811) ஸ்ரீலசுக ஹெக்கடர் கொப்பேகடுவ. (2548438) ஜேவிபி. ரோஹன விஜேவீர (273428) அவர்கள்தான் பிரதான வேட்பாளர்கள். ஜீஜீ.பொன்னம்பலம் (173934) கொல்வின் ஆர்டி சில்வா(58531) வாசுதேவ நாணயகக்கார(17005). இந்தத் தேர்தலில் ரோஹனவிஜேவீர 4.19 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். அதே நேரம் 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய ஜனாதிபதி அனுரவால் அன்று 3.16 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. முப்பத்தேழு (37) வருடங்களுக்குப் பின்னர் ஜேவிபி. பெற்றுக் கொண்ட வாக்குகள்தான் இவை. ஆனால் இந்தத் தேர்தலில் பத்து இலட்சம் வாக்குகளை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். என்பதை நாம் நன்கு அறிவோம்.

நாம் 1982 மற்றும் 2019 தேர்தல்களை ஏன் இங்கு ஒரு அளவு கோலாகக் எடுத்துக் கொள்கின்றோம் என்றால், ஏறக்குறைய இந்த நான்கு தசாப்தங்கள் வரை அவர்களது அரசியல் இயக்கம் மக்கள் மத்தியில் எந்த பெரிய வளர்ச்சியையும் பெற்றிருக்கவில்லை. மாறாக அவர்கள் சற்றுப் பின்னடைவைத்தான் எதிர்நோக்கி இருந்தார்கள் என்றாலும் அந்தக் கட்சி செயல்பாட்டாளர்களின் விடாமுயற்சியும் தியாகங்களும்தான் அவர்களுக்கு 2024ல் ஒரு ஜனாதிபதியைப் பெற்றுக் கொடுத்தது. இது இலங்கை அரசியல்வரலாற்றில் ஒரு திருப்பு முனை. அத்துடன் ஏழுதசாப்தங்கள் வரை ஆட்சி செய்த தலைவர்களால் விடப்பட்ட தவறுகள் குறிப்பாக ராஜபக்ஸாக்களின் குடும்ப ஆதிக்கம் பிள்ளைகளின் அரசியல் அடாவடித்தனம் என்பனதான் மக்களின் மனமாற்றத்துக்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது. அத்துடன் பிரபுத்துவ ரணிலின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஐதேக நிராகரிக்கப்பட காரணமாக அமைந்தது.
மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் சுதந்திரக் கட்சியை கடுமையாகப் பலயீனப்படுத்தியது. மைத்திரி ஐதேக செல்வாக்கில்தான் ஜனாதிபதியானார். இந்தப் பின்னணியில் சு.கட்சியில் இருந்து வெளியேறி ராஜபக்ஸாக்கள் மொட்டுக் கட்சியை துவங்கினாலும் ஒரு தசாப்தங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அங்கு ராஜபக்ஸாக்கள் வழிபாடுகள்தான் நடந்து வந்தது. இன்றும் அதே நிலை. இந்தப்பின்னணியில் கோடா அதிகாரத்துக்கு வந்து அவரால் இரண்டுவருடங்கள் கூட அதிகாரக் கதிரையில் அமர்ந்திருக்க முடியவில்லை. இனவாதத்தை முன்னிறுத்தியஇவர்களின் அரசியல் செயல்பாடுகள் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. கோடா தன்னை ஒரு சர்வாதிகாரியாக எண்ணிக் கொண்டு தனக்கு பின்னால் இருக்கின்ற ஒரு சிறு கூட்டத்தை வைத்து அரசை முன்னெடுத்து வந்ததுடன் சுற்றுநிருபங்களை குப்பையில் போடுங்கள் எனது வார்த்தைகள் சட்டம் என்று நின்றார். அந்த ஆணவத்தில் மனிதன் தொலைந்தார்.

இப்போது களத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் என்பிபி.தான் மிகவும் வலுவாக இருக்கின்றது. ஆனால் அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவு இயல்பாக வந்த-வளர்ந்த ஒன்றல்ல. ராஜபக்ஸாக்களில் அரசியல் அடாவடித்தனங்கள்தான் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியது. எனவே இந்த ஆதரவை அவர்கள் தொடர்ந்து எப்படித் தக்கவைத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியாது. அரசியல் வியூகங்களை வகுப்பதிலும் பொதுசன அபிப்பிராயங்களை உருவாக்குவதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். ஆனாலும் நாம் மேற்சொன்ன புள்ளிவிபரங்களின் படி 1982 ஆண்டு முதல் 2019 வரையிலான முப்பத்து ஏழு வருடங்கள் வரைவெறும் நான்கு சதவீதம் என்ற அளவில்தான் அவர்களுக்கு ஆதரவு இருந்தது. 2019ல் கோடாவுக்கு-மொட்டுக்கு வாக்குப் போட்டவர்கள்தான் இந்த முறை இவர்களை ஆதரித்திருக்கின்றார்கள். இந்த ஆதரவை தொடர்ந்தும் எப்படி நம்ப முடியும்.
பொதுத் தேர்தலில் என்பிபி.க்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க இரண்டாம் இடத்துக்கு சஜித் தலைமையிலான என்பிபி. வந்தது. அதில் பல கூட்டணிகள் இருக்கின்றன. ஆனால் அந்த அரசியல் இயக்கத்தில் கவர்ச்சிகரமான தலைவர்கள் என்று எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. சொந்தக் கட்சிக்குள்ளே முரண்பாடான கருத்துக்களும் அவநம்பிக்கைகளும் நீடித்து வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சஜித்துக்கு எதிராக அங்கு பலர் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். தலைவர்கூட முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டு வருகின்றார். ஈஸ்டர் தாக்குதலின்; போது குற்றவாளிகளுக்குத் தண்டனை என்று முழங்கிக் கொண்டிருந்த சஜித் இன்று மௌனம் சாதித்து குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக நிற்பது போல ஒரு நிலை. ஊழல் பேர்வளிகளுக்கு தண்டனைவழங்கி மக்களுக்கு நல்லாட்சி தருவதாக சொன்னவர் இன்று ஊழல்வாதிகளுக்கு பக்க துணையாக நிற்பதையும் உணர முடிகின்றது.
2019 தேர்தலில் மிகவும் செல்வாக்குடன் இருந்த மொட்டுக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் போல தேர்தலில் போட்டிக்கு வந்தால் தமக்கு வாய்ப்பே இல்லை என்பதனை அறிந்த அவர்களே தாமாக ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாமல் கூட தேசியப்பட்டியலில் ஊடாக குறுக்குவழியில் நுழைந்திருக்கின்றார். அவர் ஒரு செல்வாக்கான அரசியல் தலைவரோ புத்திஜீவியோ கிடையாது. என்றாலும் மொட்டு ராஜபக்ஸாக்களின் நலன் பேணுகின்ற ஒரு அரசியல் இயக்கமாக இருப்பதால் அவரை முன்னிறுத்தி அரசியலை நகர்த்த எதிர்பார்க்கின்றார்கள். கோடாவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஓடி ஒழித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது தலையை வெளிக்காட்ட முனைகின்றார்கள். ஆனால் அங்கு செல்வாக்கான அரசியல் தலைவர்கள் என்று எவரையும் இனம் காட்ட முடியுமாக இல்லை. என்றாலும் 2029 நாம் அதிகாரத்துக்கு வந்து விடுவோம் நாமல்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் ஜீஎல் மைத்திரி போன்ற செல்லாக் காசான சில அரசியல்வாதிகள் அங்கு இங்கு என்று எல்லா அரசியல் மேடைகளிலும் போய் நின்று கொள்கின்றார்கள். ஆனால் அவர்களை எவரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. ஒருவகையில் இவர்கள் பொழுது போக்குக்கு காலத்தைக் கடத்துவதற்காக என்னவோ எங்குஎல்லாம் அழைக்கின்றார்களோ அங்கு எல்லாம் போய் நின்று முகத்தை காட்ட நின்றுகொள்கின்றார்கள். ஆனால் இப்போது இந்த அமர்வுகளில் ரணிலைப் பெரிதாகக் கண்டு கொள்ள முடிவதில்லை. ஆனாலும் அவருக்கு இன்னும் அரசியல் ஆசைகள் தலைக்கு மேல் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சஜித் கூட்டணியில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் இந்த அரசாங்கத்தை அதன் பதவிக்காலம் முடியும் மட்டும் அசைக்க முடியாது எனவே நமக்கு நாடாளுமன்றத் தேர்தலும் ஆசனமும் தானே முக்கியம். காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நிற்கின்றார்கள்.
இந்த எல்லாக் கூட்டணிகளையும் விட கடந்த ஆட்சிகாலத்தில் ஊழல் மோசடி கொள்ளை பண்ணி காசு சொத்து சேர்த்த அரசியல்வாதிகள் மற்றும் படுகொலைகளைப் பண்ணிய அரசியல் தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கின்ற அரசுக்கு எதிரான ஒரு கூட்டணியில் இருக்கின்றார்கள். இதனை நெறிப்படுத்துவதில் உதய கம்மன்பில் விமல் வீரவன்ச சுவிஸ்வர தயாசிரி ஞானசார போன்றவர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றாhகள். கடந்த காலக் குற்றங்களுக்கு தாம் சிறை செல்ல இருப்பதை நன்கு உணர்ந்து கொண்டவர்கள் இப்போது இந்தக் கூட்டணியில் இணைந்து அரசாங்கத்தை முடியுமான அளவு விரைவாக வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று எதிர்பார்த்து மக்களை தூண்டி வருகின்றார்கள். ஆனால் இவர்கள் பேச்சைக்கேட்டு மக்கள் திரல்வதாகத் தெரியவில்லை.சுரேஸ் சலேக்கு ஆதரவு தெரிவித்து நடந்த கூட்டத்தில் அவர்கள் மூக்குடைபட்டார்கள். பெரிய விளம்பரங்களைப் பண்ணியும் அவர்களால் ஒரு 50-100 பேரையாவது அங்கு சேர்க்க முடியவில்லை.

தெற்கில் எதிரணி அரசியல் செயல்பாடுகள் திக்குத் தெரியாத காட்டில் வழிதேடுவது போல நிற்க வடக்குக் கிழக்கில் இன்று அரசியல் செயல்பாடுகள் பொதுவாக நல்ல உறக்கத்தில்தான் இருக்கன்றார்கள். அரசியல் கட்சிகள்தான் அப்படி இருக்கின்றது அவர்கள் சீசனுக்குத்தான் வருவார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சிவில் அமைப்புக்களும் இளசுகளும் எதையுமே கண்டு கொள்ளாமல் சம்பிரதாய நிகழ்வுகளில் கொடிபிடித்தால் போதும் என்ற நிலை. தழிழ் இனத்தின் விமோசனத்துக்கு ஒரு கவர்ச்சிகரமான இயக்கத்தையோ கோசங்களையோ அங்கு காணமுடிவதில்லை. தெற்கிலும் வடக்குக் கிழக்கிலும் மாகாணசபைத்தேர்தல் என்று ஒன்று வந்தால் எல்லோரும் வரிச்சுகட்டிக் கொண்டு நிற்பார்கள். தேர்தல்கள் மட்டும் ஒரு இனத்தின் விமோசனங்களுக்கு வழிசமைக்க மாட்டாது என்பது நமது கருத்து. ஆனால் அப்படித்தான் அரசியல் கட்சிகள் மக்களை பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.
இப்படி அரசியல் கட்சிகள் தலைவர்கள் நிகழ்ச்சி நிரல்கள் இருக்க இவற்றுக்கு எல்லாம் மாற்றமாக சிந்திக்கின்ற ஒரு தலைமுறைதான் தெற்கில் தலையெடுத்து வருகின்றது. அவர்கள் முன்னிலையில் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் காணாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இதனைத்தான் என்பிபிக்கு கிடைத்த கடந்த கால ஆதரவுகள் காட்சிப்படுத்தி வருகின்றன. இதில் சமூக ஊடகங்களின் தாக்கங்களில் கடுமையாக இருக்கும். எனவேதான் அவர்களை விலைக்கு வாங்கியும் வாடகைக்கு அமர்த்தியும் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்ற ஒரு வேலை இன்று நடந்து கொண்டிருக்கின்றன. எனவே 2029 ஜனாதிபதித் தேர்தல் இதில் தீர்க்கமான ஒரு மைல் கல்லாக அமையும்.
2029 அரசியலை சுருக்கமாகச் சொல்வதானால் ஆளும் தரப்பு எதிரணிகள் குற்றங்களில் இருந்து தப்பிக்க முனைகின்ற கும்பல்கள். அவற்றுக்கு ஒத்துழைக்கின்ற தரப்புக்கள் பாதாள உலகம் போதை வியாபாரிகள் அரசியல் அதிகாரத்தில் குறுக்குவழியில் உழைத்த நிருவாகிககள் விமோசனங்கள் என்பனவற்றின் செயல்பாடுகளை நாம் இதில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.மறுபுறத்தில் குடிமக்கள் இதற்கு எந்தவiகையில் பதில் கொடுக்கப்போகின்றார்கள் என்பதுதான் இங்கு தீர்க்கமாக அமையும்.




