சத்தமே இல்லாமல் சீனா தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே போர்க் கப்பல்கள் எண்ணிக்கையில் சீனா அமெரிக்காவை ஓவர்டேக் செய்துவிட்ட சூழலில், வரும் காலங்களில் விமானப்படை மற்றும் ராணுவத்திலும் கூட அமெரிக்காவைச் சீனா மிஞ்சலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின் மிகவும் வலிமையான ராணுவமாக அமெரிக்கா தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா தனது ராணுவத்தை வலிமைப்படுத்தப் பல லட்சம் கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.
சீனா ராணுவம்: அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவைப் போலவே சீனாவும் கூட ராணுவத்தில் பெரியளவில் முதலீடு செய்து வருகிறது. வலிமையான ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கச் சீனா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
கடந்த 2015-2020 காலகட்டத்தில் ஏற்கனவே கடற்படையில் அதிலும் குறிப்பாகப் போர்க் கப்பல்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவைச் சீனா ஓவர்டேக் செய்துவிட்டது. இதற்கிடையே வரும் 2027ம் ஆண்டிற்குள் ராணுவ வலிமையிலும் கூட அமெரிக்காவைச் சீனா ஓவர்டேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் டக் விக்கெர்ட் தெரிவித்துள்ளார்.
தளபதி பிரிகேடியர் ஜெனரல் டக் விக்கெர்ட் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் 412வது டெஸ்ட் பிரிவில் தளபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை
மிஞ்சும் சீனா: ராணுவம் மட்டுமின்றி விமான படையிலும் கூட சீனாவின் போர் விமானங்கள் எண்ணிக்கை சில ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சுவதாக இருக்கும் என்று தளபதி பிரிகேடியர் ஜெனரல் டக் விக்கெர்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு படுவேகமாக சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. அமெரிக்காவை விஞ்சும் அளவுக்கு இந்த நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.
கடற்படை: கடற்படையைப் போலவே விமானப் படைகளிலும் சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவின் F-22 மற்றும் F-35 உடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு வலிமையான J-20 மற்றும் J-31 போர் விமானங்களின் எண்ணிக்கை சீனா வேகமாக அதிகரித்து வருகிறது.
இதே வேகத்தில் சீனா தனது போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அமெரிக்காவை விட அதிகப்படியான போர் விமானங்கள் சீனா வசம் இருக்கும் சூழல் சில ஆண்டுகளில் உருவாகும். சீனா தனது விமானப் படையை இந்தளவுக்கு வலிமையாக மாற்றுவது வேறு விதமான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.
சத்தமே இல்லாமல் சீனா செய்யும் செயல்! இது பெரிய பிரச்சினை தான் அதாவது அண்டை நாடுகளை அச்சுறுத்தவும் மிரட்டவும் கூட சீனா தனது பலத்தைப் பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். சீனாவுக்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவின் நடவடிக்கை: அமெரிக்காவும் கூட சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுக்க ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தங்கள் கூட்டணியை வலிமையாக்கி வருகிறது. மேலும், ஆசிய- பசிபிக் பகுதியில் தனது ராணுவ இருப்பையும் அதிகரித்து வருகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ரகசிய போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களிலும் தனது முதலீட்டை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இதனால் வரும் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.