2024 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன்

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட? மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21.11.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2023 ஆம் ஆண்டில் எமது வருமானம், நிர்ணயித்த இலக்குத் தொகையில் 16% குறைவடைந்தது. வீழ்ச்சியடைந்த பொருளாதார ஆண்டில், எதிர்பார்த்த இலக்கைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவது இயல்பானதொரு நிலையாகும்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா : ரஞ்சித் சியம்பலாபிடிய | 10 Billion Rupees Earmarked For Elections

வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிக்கும் போது, முதன்மைக் கணக்கை மேலதிகமாக வைத்திருக்கும் இலக்குடன் நகர்வதில் கடுமையான தடைகளை நாம் எதிர்கொள்கிறோம். மேலும், வருமானத்தை விட அதிக செலவுகள் ஏற்படுவதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையுடன் செயற்படவேண்டியுள்ளது.

அந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யத் தேவையான தொகையை கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் எதிர்வரும் ஆண்டில், கடன் பெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. இதுவரை உள்ளநாட்டுக் கடன் பெறுவதில் பல எளிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.

மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம், மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அவசர நிலைமை அறிவிக்கப்படும் போது மாத்திரமே கடன் பெறமுடியும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

80% மறைமுக வரி

ஆனால் பொருளாதார ரீதியில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் பிரச்சினைகளுக்கு விடை காண வேண்டிய நிலையிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும் எதிர்காலத்தில் நடைபெற உள்ள எந்தவொரு தேர்தலுக்காகவும் 10 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இவை நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் அது உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உலகில் வரி வருமானமோ, அரச வருமானமோ இன்றி முன்னேறிய நாடு இல்லை.

அதை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரச வருமானம் தொடர்பான விடயத்தை பொறுத்தவரை நாம் பொறுப்பேற்கும்போது, நாட்டில் 80% மறைமுக வரியே காணப்பட்டது. 20% ஆக இருந்த நேரடி வரிகளை தற்போது சுமார் 30% அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Story

கப்பல் கடத்தல்:"இது வெறும் ஆரம்பம் தான்.." 

Next Story

யாஹ்யா சின்வார் எங்கே ? இஸ்ரேல் இவருக்கு குறி வைப்பது ஏன்?