2024 பட்ஜெட்டும் தேர்தலும்!!

-நஜீப் பின் கபூர்-

வருகின்ற சில நாட்கள் இலங்கை மக்களின் சில கேள்விகளுக்கு எதிர்பார்ப்புக்களுக்கு பதில் கிடைக்கின்ற தினங்களாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு நாட்டில் நிலவுகின்றது. அந்தப் பதில்கள் பொதுமக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்ற விடயத்தில் நிறையவே சிக்கல்கள்-சந்தேகங்கள் இருக்கின்றன. அரசு 2024ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. அண்மைக் காலமாக இந்த வரவு செலவுத் திட்டங்கள் பற்றி நமக்கு இப்படி ஒரு மதிப்பீடு இருக்கின்றது. வரவு செலவு அறிக்கை என்பது ஒரு உத்தேச கணக்கு அறிக்கை. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் போல் பெரும்பாலும் இது துல்லியமாக தனது இலக்கை அடைக்கின்றது. அல்லது தொன்னூறு சத வீதம் வெற்றி பெருகின்றது.

நமது நாட்டைப் பொருத்தவரை வரவு செலவு அறிக்கை என்று சொல்வதை விட செலவு அறிக்கை என்று மட்டும் நோக்குவதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம். காரணம் அண்மைக் காலமாக நமது நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த வரவு செலவுத் திட்டத்தில் வரவுகள் தொடர்பாக மதிப்பீடுகள் அனைத்தும் படு தோல்வி.! அல்லது அது தனது இலக்கில் இருபத்தி ஐந்து சதவீதத்தைக்கூட எட்டவில்லை. எனவே வரவு பற்றிய கணக்கிலே செலவுகளும் தீர்மானமாக்கின்றன. வரவு பற்றிய கணக்கில் 75 சதவீதம் தோல்வியை தழுவும் போது அவை எப்படி வரவு செலவு அறிக்கை கணக்குகள் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.?

எனவே இந்த நாட்டில் சமகாலத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு செலவு அறிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களிடத்தில் எந்த எதிர்பார்ப்புக்களும் ஆர்வமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே சம்பிரதாயத்துக்கு நாமும் இதனை 2024 வரவு செலவு அறிக்கை என்ற ரீதியில் மதிப்பீடுகளை செய்ய வேண்டி இருக்கின்றது. நமது வரவு செலவு அறிக்கைகள் என்பது நாட்டு மக்களை ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கப் பண்ணுவது அல்லது ஆகாயத்தில் பறக்க வைப்பதுதான். எனவேதான் நமது அரசியல்வாதிகள் சிங்கப்பூர் கதைகளையும் ஆசியாவின் ஆச்சர்யத்தையும் நமக்கு கொண்டு வந்து கொடுப்பதாக தேர்தல் மேடைகளில் ஊழையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வழக்கமாக அப்பட்டமான பொய்களைத்தான் நமக்கு கட்டவிழ்த்து விடுகின்றார்கள் என்று தெரிந்தும் மக்கள் அவர்களை-அவற்றை நம்பி அவர்களை அதிகார கதிரையில் கொண்டு வந்து அமர வைப்பதும் தலைமுறை தலை முறையாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டு மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிந்ததை விட அவர்களது வாழ்க்கைச் செலவு இன்று மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்திருக்கின்றது.

இதனை ஒரு உதாரணமாக சொல்வதாக இருந்தால் முன்பு ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 40000 ஆயிரம் ரூபா என்றிருந்தது. இன்று அது 120000 ஆயிரம் அல்லது 160000 ஆயிரம் ரூபா என்று மாற்றமடைந்திருக்கின்றது. இதற்கு அரசியல்வாதிகள் கொரோனாவைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நியாயம் சொல்லிக் கொண்டிருந்தனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த கொரோனா பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டன. ஆனால் இலங்கை மட்டும் இன்னும் அதனைக் காரணம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தக் கதை இன்று மக்களிடத்தில் எடுபடுவதில்லை. அது காலவதியான சரக்கு.

இந்த நாடு வங்குரோத்து அடைந்ததற்கு அடிப்படைக் காரணம் அரசியல்வாதிகளின் பகிரங்கக் கொள்ளை மோடிகளும் ஊழல் அதற்கு பக்கதுணையாக இருந்து செயலாற்றிய அதிகாரிகளும் என்பது மிகத் தெளிவானது. பிணைமுறி விவகாரத்தில் விசாரணைகளை எதிர்நோக்கி இருந்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகோந்திரனை ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள இருக்கின்றது என்று சொல்லி அவரை அப்போதய பிரதமர் இப்போதய ஜனாதிபதி ரணில் விமானத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு ஏற்றிவிட்டது எத்தனை பேருக்கு இப்போது நினைவில் இருக்கின்றது. அவர் தனக்கு விசுவாசமானவர் திரும்பி வந்துவிடுவார் என்றும் அன்று ரணில் ஊடகங்களிடத்தில் பேசியும் இருந்தார்.

எனவே சிங்கப்பூர் பிரசையான மகேந்திரனை கொண்டு வந்ததும் அவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தவரும் இதே ரணில்தான். அவர் இன்று நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி. இந்த கட்டுரையை தயாரித்துக் கொண்டிருக்கின்ற போது, போலியான ஆவனங்களைத் தயாரித்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது போல் இரண்டு பில்லியன் பெறுமதியான மருந்து எனக் கணக்குத் தயாரித்து தரமில்லாத மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தில் தலைவரை கைது செய்து நீதி மன்றத்தின்முன் நிறுத்திய போது அவர் குற்றத்தை ஒத்துக் கொண்டதுடன் இந்த மோசடியில் தான் ஒரு சிறிய பங்குதாரி மட்டுமே.! தன்னை விட பெரிய பங்குதாரிகள் வெளியில் இன்னும் செல்வாக்கானவர்கள் நிறைப்பேர் இருக்கின்றார்கள் என்று ஒரு பெரிய பட்டியலை நீதி மன்றத்தில் முன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று அவர்களைத் தேடும் வேலைகள் நடப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அவரை ஆளும் மொட்டுக் கட்சி காப்பாறி இருந்ததும் பின்னர் அவரது அமைச்சை பறித்து திரும்பவும் செல்வாக்கான சுற்றாடல் அமைச்சராக கெஹெல்லிய ரம்புக்கெலவை ஜனாதிபதி ரணில் தற்போது நியமித்திருப்பதும். நாட்டில் மிகப் பெரிய ஊழல்கள் தொடந்தும் தங்கு தடைகளின்றி நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு மேலிடத்தின் ஒத்துழைப்புக்களும் கிடைக்கின்றன என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள் என்று சொல்ல முடியும்.

பொது மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னும் துரிதமாக இந்த ஆட்சி வீழ்ச்சியடையும் முன்னர் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது என்ற நிலைப்பாட்டில்தான் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றது. ஐஎம்எப். பிடன் கடன் வங்கித்தான் ஆளும் தரப்பு அரசாங்கத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கே முதலாம் தவணைக் கடனைப் பெற்றுக் கொள்ளும் போது கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால் இன்று வரை இரண்டாம் கட்ட பணம் இன்னும் நமக்கு வந்து சேரவில்லை. போலியாக புள்ளிவிபரங்களைக் கொடுத்து வரவு பற்றிய கணக்குகளைச் செய்வது போலத்தான் அவர்களையும் ஆட்சியாளர்கள் ஏமாற்றி இருக்கின்றார்கள்.

இரண்டாம்; தவணை ஐஎம்எப் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை இந்த நாட்களில் எடுத்துக் கொண்டிருப்பதால் அதிக வரிகளை மக்களிடத்தில் அறவிடுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் மின் கட்டண அதிகரிப்பு. இது மட்டுமல்ல இன்னும் நிறைய வரிகள் வருகின்ற நாட்களில் அதிகரிக்கப்பட இருக்கின்றது என்பதனை பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்கள் தமக்கு 20000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாடாளவிய ரீதியில் தற்போது போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். சம்பள அதிகரிப்புப் பற்றி கருத்துச் சொன்ன முன்னாள் நிதி அமைச்சர் பந்துல ஐம்பது சதம் கூட அதிகரிக்கவாய்பில்லை என்று ஒரு நாள் முன்னதாக சொல்லி இருந்தார். அந்த மனிதனே நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்தக் கொண்டிருக்கின்ற நேரத்தில்-இன்று அமைச்சரவைத் தீர்மானங்கள் பற்றி கருத்துக்களைச் சொல்கின்ற போது ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்த போது, அதற்கு நாங்கள் அனைவரும் ஆதரவளித்தோம் என்று பல்டியத்திருக்கின்றார்.

இதிலிருந்து நாட்டில் எடுக்கப்படுகின்ற எல்லாத் தீர்மானங்களும் அரசியல் கண்ணோட்டத்தில் தனி நபர்களின் விருப்பின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றது. ஐம்பது சதம் கூட தர முடியாது என்று சொன்ன பொருளாதார வல்லுணர் இப்போது ஜனாதிபதி கருத்துக்கு அடிபணிகின்றார் என்றால் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளே! நாம் இப்படிக் கருத்துக் சொல்வதற்காக அரச ஊழியர் சம்பளம் அதிரிப்புக்கு நாம் எதிரானவர்கள் என்று எவரும் எடுத்தக் கொள்ளக் கூடாது. சந்தர்ப்பவாதிகளை இனம் காட்டத்தான் இந்த உதாரணம். எப்படி இருந்தாலும் 2024 வருகின்ற வரவு செலவு அறிக்கையால் மக்களுக்கு நடைமுறையில் கிடைக்கப்போகும் எதுவும் இருக்காது என்பது உறுதி.

மத்திய வங்கி அறிக்கைப்படி நாட்டில் 60 சதவீதமான மக்கள் தமது சப்பாட்டு வேலைகளை குறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது நேரத்துக்குப் போதாமல் உணவை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளிச் சிறுவர்களில் கணிசமானவர்கள் மந்தபோசணைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எனவே எதிர்கால சந்தியினர் வாழ்வு ஆரோக்கியம் இருண்டதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. இது விடயத்தில் குடிகள் என்ன முடிவுகளை எடுக்கப் போகின்றார்களோ தெரியாது.

இப்போது உத்தேச தேர்தல்கள் பற்றிப் பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு சிலர் தயாராவது பற்றி ஜனாதிபதி ரணிலிடம் கோட்ட போது எங்கே தேர்தல்? யார் சொன்னது? என்று அவர் கேட்டிருந்தார். அதே ஆள் இப்போது 2024. மற்றும் 2025 களில் நடக்கின்ற மூன்று தேர்தல் தொடர்ப்பில் தனது அட்டவணையை சில தினங்களுக்கு முன்பு சமர்ப்பித்திருந்தார். அவர் கதைகளில் வழக்கம் போல நமக்கு நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும், தேர்தல் நம்பிக்கையில் பல காரியங்களை கட்சிகளும் அரசியல் செயல்;பாட்டாளர்களும் துரிதப்படுத்தி இருக்கின்றார்கள்.

இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் வரும் வரவு செலவு அறிக்கையில் இது தொடர்பான மேலும் சில தகவல்கள்-உறுதிகளை நாம் பார்க்க முடியும். தேர்தல் திணைக்களம் கோட்டிருக்கின்ற 1000 கோடிகளை அரசு ஒதுக்குகின்றதா? அல்லது அப்படிச் செய்யாது ஏதும் புதிய வியூகங்களை அங்கு ரணில் சொல்லப் போகின்றாரோ தெரியாது. அடுத்து தேர்தல் நடக்கும் என்றிருந்தால் வரவு செலவுத் திட்டத்தில் அரசு நிச்சயமாக என்ன பொருளாதார நெருக்கடிகள் காசுப் பிரச்சினைகள் இருந்தாலும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டி இருக்கும். அதனை நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசின் தேர்தல் முன்னேற்பாடாக நாம் பார்க்க முடியும்.! அரசு பொருட்களுக்கு வெட்வரிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது சலுகைகள் சாத்தியமா? என்ற கேள்வியும் எழுகின்றது.

நாம் துவக்கத்தில் சொல்லியது போல வரவு செலவு அறிக்கை என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்பட்டமான ஒரு மாயை-கற்பனை. எனவே நமது நிதி அமைச்சர்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டு வந்து அங்கு படிக்க முடியும். நடைமுறையில்தான் அதன் நிஜ உருவத்தை மக்கள் பார்க்க முடியும். கடந்த காலங்கள் நாம் பார்த்த அரக்கண்களுக்கு அப்பால் ரணிலும் நமக்கு எதனைத்தான் காட்ட-தர முடியும்? அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு பற்றி ரணில் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கின்றார். அவர்களின் பொருளாதார வல்லுனர் பந்துல ஐம்பது சதம்கூட தர முடியாது என்றும் சொல்லி இருந்ததும் தெரிந்ததே.

சம்பள அதிகரிப்பு தொடர்ப்பில் தொழிற்சங்கங்கள் 20000 ரூபா பணம் கேட்டு போராடுகின்றார்கள். நமக்கு தெரிந்த கணக்குப்படி, ரணில் கொடுப்பதாக இருந்தால் 2000 அல்லது 3000 ஆயிரம் ரூபா வரையில்தான் கொடுக்க முடியும். அவர் இதனை ஒரு 5000 ஆயிரம் ரூபாய் வரை என்று கொடுக்கின்றார் என்றால், பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பு அதிகம் என்பது நமது எதிர்பார்ப்பு.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை இது முட்டாய் சாப்பிடக் கொடுக்கும் பணமாகத்தான் இருக்க முடியும்.! எனவே இதில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். இதற்கு மேல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ரணில் என்னதான் வித்தைகளை கட்ட முடியும்? சட்டப்படி தனது பதவியில் இறுதி வரவு செலவு இது என்பதால், ஜனாதிபதி ரணில் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருக்கின்றது.

நன்றி: 05.11.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காசா மீது அணுகுண்டு!  இஸ்ரேல் அமைச்சர் !

Next Story

'TIMED OUT' ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டில் என்ன புதுமை?