2023ல் தேர்தலா! இறுதித் துரும்பை கையில் எடுத்த ஆட்சியாளர்கள்!

-நஜீப் பின் கபூர்-

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்டு வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்டத்திலுள்ள ஓட்டைகளை வைத்து இது தொடர்பாக எடுக்கபட்ட எந்த முயற்சிகளும் இதுவரை வெற்றி பெறவில்லை. அடுத்த கட்டமாக அரசியல் தொழிநுட்ப வன்முறையைப் பாவித்து இந்தத் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் இருந்து வருகின்றன. இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு இடம் கொடுத்தால் ஜனாதிபதி ரணிலின் பதவியும் மொட்டுக் கட்சி அரசாங்கமும் தேர்தல் முடிவுகளுடனே மலைகள் சரிவதுபோல இடிந்து விழும். அதனை எவராலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. இது தான் கள நிலை.

நமக்கு வருகின்ற நம்பகமான தகவல்களின் படி இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு எக்காரணம் கொண்டும் இடம் வழங்கி விடவேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் விசுவாசமானவர்கள் கண்டிப்பான அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இருவரும் (ரணில்-மஹிந்த) இந்த நிலமையைப் புரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். அவர்களின் இந்த கருத்துக்கள் முற்றிலும் யதார்த்தமானது என்பதனை நாமும் கடந்த காலங்களில் சொல்லி வந்திருக்கின்றோம்.

எனவேதான் இது விவகாரத்தில் ஜனாதிபதி ரணில்,மஹிந்த,பசில் என்போர் இரகசிய பேச்சுவார்த்தைகளை அன்றாடம் நடாத்திக் கொண்டு வருகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது.  தமக்கு சம்பந்தமில்லாதவகையில் தேர்தலைத் தவிர்ப்பதில் ராஜபக்ஸாக்கள் திரைமறைவில் நின்று காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தேர்தல் செலவுகள் தொடர்பிலான விவாதங்களிலும் நாம் பார்க்க முடிந்தது. ராஜபக்ஸாக்களுக்கு நெருக்கமானவர்கள் தாம் தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் வேட்புமனுக்களை கையேற்கக் கூடாது என்ற பொதுநிருவாக உள்ளூராட்சி அமைச்சரின் செயலாளர் நீல் அபுஹின்ன சுற்றுநிரூபமும் அந்த நிகழ்ச்சி நிரல் படித்தான் அமைந்திருந்தது. குறிப்பிட்ட துறைக்குத் தான் அமைச்சர் என்றவகையில் அப்படி ஒரு அறிவித்தலைக் கொடுக்கவோ அல்லது அமைச்சரவையில் அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படவோ இல்லை என்று பிரதமர் தினேஷ; கூட பகிரங்கமாக அந்த சுற்றுநிரூபம் பற்றி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டி வந்தது.

அப்படியானால் இப்படி ஒரு கடிதம் எப்படி தயாரிக்கபட்டு அது தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளுக்கு  அனுப்பி வைக்ப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஓரே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் அந்தக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தனாவின் ஆலோசனைப்படி ஜனாதிபதி ரணிலும் நேரடியாக சம்பந்தப்பட்டு கொடுத்த உத்தரவுக்கு அமையவே செயலாளர் நீல் அபுஹின்ன இந்த சட்டவிரோத கடிதத்தை அனுப்பி வைத்து அட்டகாசத்தை பண்ணி இருக்கின்றார். வேடிக்கை அவர் இன்னும் அதிகாரம் மிக்க அந்தப் பதவியிலே வைக்கப்பட்டிருப்பதுதான். அத்துடன் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு ராஜபக்ஸாக்களும் பாங்காளியாக இருந்தாலும் அவர்கள் நாம் முன்பு சொன்ன நியதியில் திரைமறைவில் இருந்துதான் இந்தக் காரியங்களை நகர்த்திக் கொண்டு வருகின்றார்கள்.

எப்படியாவது இந்த உள்ளூராட்சித் தேர்தல் வன்முறை திட்டங்கள் ஊடாக ரணில்-ராஜபக்ஸாக்கள் தவிர்த்து விடுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ரணில் விசுவாச அமைச்சர் ஹரின் பெர்ணாந்து மக்களுக்குத் தேர்தல் வேண்டுமா மருந்து வேண்டுமா என்று ஒரு நாகரிகம் இல்லாத கதையை சில தினங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். எப்படியும் தேர்தலை ஒத்திவைத்தால்  அதற்கு நாட்டில் பெரும் எதிர்ப்புக்கள் வரும் என்பதனை ஆட்சியாளர்கள் அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள். அதனை விட தேர்தலை நடாத்தாமல் விட்டால் சர்வதேசத்தில் இருந்து வருகின்ற எதிர்ப்புக்கள் விடயத்தில்தான் ஆட்சியாளர்கள் அதனைவிட மிகுந்த அச்சத்தில் இருக்கின்றார்கள். எனவே உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் ரணிலும் ராஜபக்ஸாக்களும்  புலிவாiளைப் பிடித்த நிலையில் இருக்கின்றார்கள் என்பது தெளிவு.

இதற்கு முன்னைய  நாடாளுமன்ற அமர்வின் போது தற்போது நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய தேர்தல்; செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக கேள்விகளை ஜேவிபி. அணுரகுமாரவும் சஜித்தும் எழுப்பிய போது முட்டால்தனமாகப் பேச வேண்டாம். நாம் இங்கு முன்வைத்திருக்கின்ற யோசனைகளை ஒரு போதும் வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் அமுல்படுத்த முடியாது சிறுபிள்ளைகளைப் போல இது விடயத்தில் நடந்து கொண்டு சபை நடவடிக்கைகளைக் குழப்ப வேண்டாம் என்று நீதி அமைச்சர் விஜேதாச இது தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் கொடுத்திருந்தார்.

இந்தப் பதிலுக்கு தனது இணக்கப்பாட்டை பிரதமர் தினேஷ_ம் தெரிவித்திருந்த பின்னணியில் 19.01.2023ல் அவசரப்பட்டு ஆளும் தரப்பினர் இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சட்ட மூலம் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருக்கின்ற 2023 தேர்தலுக்கு செல்லுபடியாகது என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள் அப்படியாக இருந்தால் பிரேரணைக்குத் தாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம் என்று அணுரகுமார சபையில் கேட்ட போது அதற்கு ஆளும் தரப்பு இடம் கொடுக்கப்டவில்லை.

இவர்கள் தூய்மையான நோக்கில் இந்தப் பிரேரணையை முன்மொழிந்திருந்தால் அந்தத் திருத்தங்களை செய்திருப்பார்கள். எனவே இது இந்தத் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கு அரசு அவசரப்பட்டுக் கொண்டு வருகின்ற அப்பட்டமான ஓர் நடவடிக்கை என்பது உறுதியாகின்றது. ஆனால் நீதி அமைச்சர் இது இந்தத் தேர்தலுக்கு செல்வாக்குச் செலுத்தாது என்று சொல்கின்ற அதே நேரம் பிரேரணை நிறைவேறிய பின்னர் யாராவது இதனை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்குப் போனால் அதற்குத் தன்னால் ஏதும் பண்ண முடியாது என்றும் கை விரிக்கின்றார். இதிலிருந்து வேட்புமனுக்களை ஏற்றுக் கொண்டாலும் தேர்தலுக்கு ஆப்பு வைக்க ஆளும் தரப்பினர் அடியாட்களைத் தயாராக வைத்துக் கொண்டுதான் இந்தத் திருத்தத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும். இதில் அமைச்சரின் இரட்டை வேடமும் தெளிவாகின்றது.

இது ஆரோக்கியமான ஒரு மசோதாவாக இருந்தாலும் இதற்கான திருத்தங்களைச் செய்து முடிக்க குறைந்தது ஆறு மாதங்களாவது எடுக்கும். அரசுக்குத் தேவையாக இருந்தால் அந்தக் காலத்தை ஆமை வேகத்தில் நகர்த்தி காரியங்களைப் பார்த்து மேலும் நீடித்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எனவேதான் எதிரணியினர் இந்த சட்டமூலம் இந்த 2023 தேர்தலுக்குச் செல்லுபடியாக மாட்டாது என்று ஒரு வார்த்தையைச் சேர்க்கும்படி திரும்பத் திரும்பக் கேட்டனர். ஆனால் அதற்கு ஆளும்தரப்பு தயாரில்லை.

சட்டமூலம் தற்போது 97 க்கு 36 என்ற வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இது ஒரு தீர்க்கமான நேரம் ஆளும்தரப்பு எப்படிப்போனாலும் எதிரணிக்குக் கிடைத்திருக்கின்ற வாக்குகளைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். எனவே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ லக்ஸ்மன் கிரியெல்லவுக்குச் சொன்னது போல தேர்தல் வேண்டும் என்று தெருவில் கத்துகின்றார்கள் இரகசியமாக வந்து தேர்தலைத் தள்ளிப் போடுங்கள் என்ற கதையும் அமைகின்றது.

தேர்தல்; செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் அமுலுக்கு வந்தால்  ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தமது செலவுகளை தேர்தல் ஆணைக்குழு  குறிப்பிடுகின்ற  பணத் தொகைக்குள் செய்து முடிக்க வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளர்  தான் தேர்தலுக்கு செலவு செய்கின்ற பணம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று இந்த சட்டத்தில் கட்டாயப்படுத்தி கேட்கப்பட்டிருக்கின்றது. இந்த செலவுகள் தேர்தல்களுக்கு ஏற்ப வித்தியாசப்படும்.

கடந்த முறை 2018ல் நடந்த உள்ளூராச்சி சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் மதுருகெட்டடிய என்ற வட்டாரத்தில் ஒரு வேட்பாளர் நான்கு கோடிகளைச் செலவு செய்திருந்தார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலாகி உண்மைகள் நிரூபனமானாலும் அவர் இன்றுவரை பதவியில் இருந்து வருகின்றார். சரி இந்த சட்டமூலம்  தொடர்பான முக்கிய சில குறிப்புக்களைப் இப்போது பார்ப்போம்.

1.வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் வரை செய்யப்படுகின்றன.

2.அதற்கேட்ப தேர்தலுக்கு வேட்பாளராக வருகின்ற ஒருவர் குறிப்பிட்ட ஒரு தேர்தலில் தான் செலவு செய்கின்ற பணத்தை  இலங்கை ரூபாவில் தெரிவிக்க வேண்டும்.

3.ஜனாதிபதித் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் மாகாணசபைத் தேர்தலுக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான செலவுத் தொகை  வித்தியாசமாக அமையும்.

4.இந்த விதிமுறைகள் உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் தற்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

5.குறிப்பிட்ட ஒரு தேர்தலில் அந்த தேர்தல் பரப்பு-எல்லை அதில்  இருக்கின்ற வாக்காளர் எண்ணிக்iகை என்பன கணக்கிடப்பட்டு செலவுத் தொகை வாக்காளர் தலைக்கு என்று தீர்மானமாக இருப்பதாகத் தெரிகின்றது.

6.இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இப்படி எல்லாம் கட்டுப்பாடுகளைப் போடுவது நல்ல விடயமாக இருந்தாலும் இதே சட்ட மூலத்தில் சொல்லப்பட்ட தொகையை விட ஒருவர் செலவு செய்து விட்டார் என்று கண்டறியப்பட்டால் அந்த செலவுகளை தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவருக்குத் தப்பிக் கொள்ளவும் இதில் இடம் இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

7.இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால்  மிகப் பெரிய செல்வந்தர்கள்  தேர்தலில் நின்றாலும் ஒரு சரிhசரி மனிதன் தேர்தலுக்கு வந்தாலும் அவருக்கும் செல்வந்தருக்கும் ஒரோ எண்ணிக்கையான பணம்தான் தேர்தல் செலவுக்காக அங்கீகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மேலும் விளக்குவதாக இருந்தால் குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு ஆறாம் வட்டாரத்தில் போட்டியிடுக்கின்ற ஒரு வேட்பாளர். தனக்கு அங்கிகரிக்கப்பட்ட தொகையை கடந்து செலவு செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பாக பத்திரிகை விளம்பரம் போஸ்டர் பதாதைகள் அன்பளிப்புக்கள் தொலைக் காட்சி விளம்பரங்கள் என்பவற்றுக்கு அது செலவாகி இருக்கின்றது என்று எடுத்துக் கொவோம்.

இவை எல்லாம் தனக்குத் தெரியாது தனது ஆதரவாலர்கள்தான் செலவு செய்திருக்கின்றார்கள், தான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை. இதற்குத்தான் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பி அவர் தப்பிக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது இந்த சட்டமூலம் கூட கேலிக் கூத்ததாகவும் அமைய  இடமிருக்கின்றது.

நமது நாட்டில் தேர்தல்களுக்கு அனேகமாக பணத்தை செலவு செய்வது போதை வர்த்தர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள். மற்றும் மோசடி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் வேட்பாளருக்காக செலவு செய்கின்ற பணம் வேட்பாளரில் வரவில் பதிவாக வாய்ப்பு இல்லை. எனவே இந்த சட்டதை கொண்டவருவதன் மூலம் அதன் நோக்கங்கள் வெற்றியளிக்குமா என்பது தொடர்பில் குழறுபடிகள் இருக்கின்றன.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இப்படியான  ஒரு சட்மூலத்தை  கொண்டு வருவது இந்தத் தேர்தலைக் குழப்புவதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை என்ற அச்சம் பொது மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் ஏற்பட்டிருக்கின்றது. அடுத்து வருகின்ற நாட்களில் என்ன நடக்கின்ற என்பதனை அனைவருக்கும் கண்டு கொள்ள முடியும்.

நன்றி: 22.01.2023 ஞாயிறு தினக்குரல்

Default thumbnail
Previous Story

ஐஸ் போதை:நாதிரா உயிரைப் பறித்த பணிப்­பெண்

Next Story

போதை ஒழிப்பு:ஆமை வேகத்தில்  ஜம்­இய்­யத்துல் உலமா!