2023 புத்தாண்டு எச்சரிக்கை!

Welcome merry Christmas and happy new year in 2023,Silhouette Man jumping from 2022 cliff to 2023 cliff with cloud sky and sunlight.

-நஜீப் பின் கபூர்-

புத்தாண்டு என்று வந்துவிட்டால் வாழ்த்துச் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதுதான் வழக்கம்- சம்மிரதாயங்களாகவும் இருந்து வந்தாலும் நாம் 2023 புத்தாண்டுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற  குடிமக்களுக்குச் சில எச்சரிக்கைகளை விடுக்க விரும்புகின்றோம்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நாம் கடந்து வந்த பயணம் அதில் நாம் பெற்றுக் கொண்ட படிப்பிணைகள். சமகாலத்தில் நாம் சமூக ரீதியிலும் தனி மனிதனாகவும் குடும்பமாகவும் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் அதில் நம்மை விடுவித்துக் கொள்வது தொடர்பான சிந்தனைகள் செயல்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டி இருக்கின்றது என்பது எமது ஆரம்ப ஆலோசனையாக இருக்கின்றது.

இதுவரை நாம் சந்தித்த எல்லா வருடப் பிறப்புக்களுக்கும்  நமது அரசியல் மற்றும் சமயத் பெரியார்கள் நமக்கு ஆசிச் செய்திகளை சொல்லி வந்திருக்கின்றார்கள். இன்றுவரை இந்த சம்பிரதாயம் செவ்வனே ஆண்டுதோரும் வையகம் பூராவிலும் நடந்தேறி வருகின்றது. இந்த 2023லும் அவ்வாறான வாழ்த்துச் செய்திகள் உலகத்தாருக்குக் கிடைக்கும்.

அதில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். கடவுள் அவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்ற செய்திகளும்  அடங்கி இருக்கும். இன்று இப்போது உலகத்தார் அனைவருக்கும் அந்த வாழ்த்துச்  செய்திகள் ஊடகங்கள் வாயிலாக கிடைத்திருக்கும்.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தளவில் 2023ம் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பது ஒரு வேடிக்கையாகத்தான் அமையும். நாம் ஏன் அப்படிச் சொல்கின்றோம்.! நமது ஜனாதிபதி முன் கூட்டியே இந்த வருடத்தில் நல்ல செய்திகள் சொல்ல முடியாது. அனைவரும் ஒரு இருக்கமான வாழ்க்கைக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருந்தார். ஜனாதிபதி ரணில் நாடாளுமன்ற வந்த எல்லாச் சந்ததுப்பங்களிலும் அவர் நமக்கு இந்தக் கதையை சொல்லி வந்தார்.

நமது ஜனாதிபதியின் எந்தக் கதைக்கும் மவுசு கிடையாது அது ரூபாவின் பெருமதி போலத்தான் இப்போது அனைவராலும் பார்க்கப்படுகின்றது. அதை விட்டுவிடுங்கள். மிகவும் பொறுப்புடன் வார்த்தைகளை வெளியிடுகின்ற நமது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ நமது பொருளாதாரம் குறித்து இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதாக இருந்தால் மிகவும் வேதனையான பல முடிவுகளை நாம் எதிர்வரும் நாட்களில் எடுக்க வேண்டி இருக்கும் என்பது மத்திய வங்கி ஆளுநர் புத்தாண்டுக்கு ஓரிரு நாட்கள் இருக்க ஊடகங்களுக்குச் சொன்ன செய்தி.

நாம் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த எடுகின்ற ஒவ்வொரு முயற்சியும்-நடவடிக்கைகளும் நிச்யமாக குடி மக்களுக்கு பெரிய அளவில் வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்தும் என்று நந்தா கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். இதற்கு முன்னர் ஒரு முறை இவர்  தூயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கட்டத்தில் பொது மக்கள் வீதியில் இறங்குவார்கள். அப்போது நாட்டில் இரத்த ஆறு ஒடுவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாது என்று மனிதன் ஒரு முறை எச்சரித்திருந்தார். அவரது இந்த வார்த்தைகள் ஆளும் மொட்டுத் தரப்பினர் மத்தியில் பெரு அதிர்ப்த்தியை ஏற்படுத்தி இருந்ததும் தெரிந்ததே.

நாம் எடுக்கின்ற இந்த பொருளாதார ஸ்தீரப்படுத்தும் நடடிவடிக்கைகளின் போது குறைந்த மற்றும் மத்திய தர வருமானம் பெருபவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் அவர் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கின்றார். நாட்டில் பொருளாதாரம் ஸ்தீரமடையும் மட்டும் மக்கள் சிக்கனமாக வாழ வேண்டி இருக்கும் என்றும் கூறுகின்றார். ஏற்கெனவே மக்கள் இரண்டு வேலை சாப்பாடு என காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.!  அதுவும் அரைகுறை நிலை.

இந்த நேரத்தில் அவர் இப்படி மக்களை எச்சரித்திருக்கின்றார். அவர் கூறுகின்றபடி நமது பொருளாதாரம் எப்பபோது எப்படி ஸ்தீர நிலைக்கு வரப்போகின்றது என்று நாம் அவரிடத்தில் கோட்டால் அதற்கு அவரிடம் பதிலோ நமக்குத் தருவற்கு எந்த உத்தரவாதங்களோ கிடையாது. இதனை ஒரு சவாலாக நாம் அவரிடத்தில் முன் வைக்கின்றோம். ஆளுநரிடத்திலோ அதிகாரத்தில் இருக்கின்ற தலைவர்களிடத்திலோ இதற்குப் தெளிவான பதில் கிடையாது. எனவே பொருளாதார ஸ்தீரம் என்று அவர்கள் சொல்கின்ற கதை வெரும் ஏமாற்று மந்திரம் மட்மே.

எனவே இந்த முறை நமது நாட்டு மக்களுக்கு புத்ததாண்டு வாழ்த்துக்கள் என்று எவராவது கதை சொல்ல வருவார்களாயின் அவர்களை என்னவென்று சொல்வது. அவர்களது வாழ்த்துச் செய்திகளை காதில் போட்டுக் கொள்ளும் மன நிலையிலும் மக்கள் இல்லை. அப்படி எவராவது வாழ்த்துச் சொல்லி இருந்தால் அவர்கள் வடிகட்டிய கோமளிகளாகத்தான் இருப்பார்கள்.

மத்திய வங்கி ஆளுநர் நமக்குச் சொல்ல வரும் செய்தி என்னவென்றால்  தற்போதைக்கு ஐஎம்எப்.பைத் திருப்திப்படுத்துவதற்காக மின்சாரக் கட்டணம் குடிநீர் கட்டணம் ஏரிபொருள் மற்றும் அனைத்து இறக்குமதிப் பொருட்களும் விரைவாக விலைகள் அதிகரிக்கப்பட இருக்கின்றது என்பதுதான் அந்த செய்தி என்பது  தெளிவாகின்றது.

ஏற்கொனவே நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக மரத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அவர்களை மாடு குத்திக் குதர இருக்கின்றது. எனவே இந்த 2023ம் வருடத்துக்கான வாழ்த்துச் செய்திகளுக்குப் பதிலாக நாமும் மக்களுக்கு சில எச்சரிக்கைகளைத்தான் இந்த வாரம் சொல்ல வேண்டி இருக்கின்றது. வருமுன் காப்போன் வந்ததும் காப்போன் வந்த பின்னர் காப்போன் என்ற ஒரு கதை இருக்கின்றது. நமது நாட்டு மக்கள் இப்போது அனைத்தும் நடந்து முடிந்த நிலையில்தான் தங்களை காத்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது விடயத்தில் இன்னும் புரிதல் கிடையாது. எனவே வந்த பின் பாத்திரத்தின் நிலையில்தான் ஒட்டு மொத்த நாடும் இருக்கின்றது.

நாம் மேற்சொன்ன புதிய வரிகளுக்கு அப்பால் 2023 வருடத் துவக்கத்தில் பாடசாலை போகின்ற பிள்ளைகளின் அப்பியாசக் கொப்பிகள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு வருகின்றது. தமது அன்றாட வருமானம் கீழ் மட்டத்தில் இருக்கின்ற நிலையில் அவர்கள் தினச் சாப்பாட்டுக்கே திண்டாடும் இந்த நேரத்தில் பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகளை அவர்கள் நிறைவு செய்ய வரும் போது முன்பு ஒரு பிள்ளைக்கு 4000 ரூபாய்களைச் செலவு செய்த ஒரு தந்தை இன்று அதே பொருட்களுக்காக 12000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கின்றது. ஒருவருக்கு பள்ளி செல்லும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தத் தந்தை வருடத்துவக்கத்தில் இந்த முறை  36000 ரூபாய்களை அதற்கு தேட வேண்டி இருக்கின்றது.

2023ல் நாட்டில் கொலை கொள்ளை வழிப்பறி என்பன சர்வ சாதாரண நிகழ்வாக மாற நிறையவே இடமிருக்கின்றது. அண்மையில் கண்டி நகரில் பல புத்தகக் கடைகள் கள்வர்களால் உடைத்து அங்கிருந்து பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது என்ற ஒரு செய்தியைப் நமக்குப் பார்க்க முடிந்தது. இது எதனைக் காட்டுகின்றது. இப்படி கண்டியில் சில தினங்களுக்குள் உடைக்கப்பட்ட கடைகளின் பெரிய பட்டியல்லொன்றே தற்போது கண்டிப் பொலிஸ் பதிவில் இருக்கின்றது. இது போன்ற கொள்ளைகள் வழிப் பறி நிகழ்வுகள் நாட்டில் இன்று இருக்கின்ற ஐஸ் பாவனை போன்ற ஒரு அன்றாட செய்தியாக நமக்குப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இதற்கிடையில் புத்தாண்டில் எந்த நல்ல செய்திகளுக்கும் வாய்புக்கள் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை என்ற நிலையும் உறுதியாகி வருகின்றது. நாம் வழக்கமாகச் சொல்வதைப் போல இன்னும் ஐம்எப் நிதி நமக்கு வருடத் துவக்கத்தில் கிடைக்க வாய்ப்பு கண்ணுக் கெட்டிய தொலைவில் இல்லை என்றும் தெரிகின்றது.

அரசு வரவு செலவுத் திட்டம் என்று ஒன்றை 2023க்கு சமர்ப்பித்திருந்தாலும் அதில் செலவுகள் தெளிவாக தெரிகின்றன. ஆனால் அதற்கான வரவுகள் கல்லில் நார் உறிப்பது போன்றதோர் நிலையில்தான் இருக்கின்றது. ஏழுதலை பசில் 2022 க்காக தயாரித்த வரவு செலவு அறிக்கை போலத்தான் இந்த 2023 வரவு செலவு அறிக்கையையும் திட்டங்களையும் மாற்றி அமைக்க நிச்சயமாக அரசு முனையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்க்கிடையில் சீனாவில் மீண்டும் கொடி கட்டிப் பறக்கின்ற கொரோனா புதிய அலை இலங்கையிலும் மீண்டும் பிரவேசிக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று சுகாதார அமைச்சர் கெலிய ரம்புக்வெல எச்சரித்திருக்கின்றார். கதை யதார்த்தமாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் நமக்கு இப்படியும் ஒரு சந்தேகம் வருகின்றது. அரசு மக்களுக்கு எதிராக நெருக்கடிகளைத் தொடர்ந்து கொடுக்கின்ற போது மக்கள் மீண்டும் தெருவில் இறங்க  வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதனால் முன் கூட்டியே மக்களை வீடுகளுக்குள்ளே அடங்கி இருக்குமாறு அரசு மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றது என்றும் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு குறைபாட்டை நீக்குவற்காக வழங்கப் பட்ட மதிய உணவுக்கான அரசியை சீனாவே வழங்கி இருந்தது. இந்த அரசி இறப்பரில் தயாரிக்கபட்ட அரிசி போல் இருக்கின்றது என்று தமிழர் தரப்பில் இருந்து ஒரு செய்தி வருகின்றது. அந்த செய்தியை சொல்பவர் இந்த அரிசியால் சமைக்கப்பட்ட சோற்றை  நாய் பூனை கூட முகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிடாமல் நகர்ந்து விடுகின்றன என்று குறிப்பிட்டிருக்கின்றார். அந்த செய்தியை ராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. தனது முகநூலில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கதை உண்மையாக இருந்தால் நமது இளைய தலைமுறையினரது சுகாதாரம் உடலாரோக்கியம்?

2023 புத்தாண்டுக்கு துவக்கத்தக்கு சில நாட்கள் முன் கூட்டியே முன்னாள் ஜனாதிபதியும் தற்போதய நெருக்கடிக்கு முதல் குற்வாளியாக கருதப்படும் கோதாபே ராஜபக்ஸ மீண்டும் நாட்டை விட்டுத் தப்பியோடி இருப்பதாக தெரிகின்றது. இந்த முறை அவர் அதி விஷேட விஐபிகள் வெளியேருகின்ற கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஊடக தற்போதய ஜனாதிபதி ரணில் அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கின்றார்.

அவர் தனது மனைவி மகன் மருமகள் பேத்தி ஆகியோருடன் டுபாய் ஊடாக அமெரிக்க போய் இருக்கின்றார் அல்லது போக இருக்கின்றார் என்றுதான் செய்தி. சீனிப் பெரும் கொள்ளையில் குறிப்பிட்ட அமைச்சருக்கும் தெரியாது தானே நேரடியாகத் தலையிட்டு அதில் 1600 கோடி ரூபாய்வரை பணத்தை கொள்ளையடித்தார் அல்லது தனது நண்பர்களுக்கு பெற்றுக் கொள்ள உதவினார் என்ற குற்றச்சாட்டில் நீதி மன்றம் அவரை விசாரணைக்கு அழைத்திருந்த நேரத்தில்தான் அவர் நாட்டில் இருந்து ஸ்கெப்பாகி விட்டார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மேலும் அமெரிக்காவில் தனது இரட்டை குடியுரிமையப் இரத்துச் செய்யாமலே அவர் தேர்தலுக்கு நின்றிருக்கின்றார். இதனால் அவர் மீண்டும் தனது நாட்டுக்குப் போய்விட்டார் என்றும் அவரது அரசியல் எதிரிகள்  கருதுகின்றார்கள்.

விவசாயிகள் வாழ்க்கையில் மண்ணைத் தூவி நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்தவர், வரலாற்றில் என்றுமில்லதவாறு நிருவாகத்தை முன்னெடுத்தவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகின்ற ஒரு மனிதன் நினைத்த நேரம் நாட்டுக்குள் வருகின்றார் போகின்றார். அவருக்கு அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் அதற்கான வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுகின்றார்கள் இது என்ன நாடு என்ன சட்டம்.?

நன்றி: 01.01.2023 ஞாயிறு தினக்ககுரல்

 

Previous Story

உள்ளூராட்சி  தேர்தலை: ஆதரவும் இல்லை! எதிர்ப்பும் இல்லை:நீதி அமைச்சர்

Next Story

அடகு  தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல்