-நஜீப் பின் கபூர்-
எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது
உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி!
கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது
தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்!
கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி
கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். ஜனாதிபதி ஜீ.ஆர். பதியேற்ற முதல் ஆண்டு நிறையுவும். பிரதமர் எம்.ஆருக்கு 75 வது பிறந்த தினமும் இதற்கு சமாந்திரமாக அமைந்திருந்தது.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமானது என்று ஆளும் தரப்பில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் ஆளும் தரப்பில் பேசிய எல்லாப் பேச்சாளர்களும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முதல் ஆண்டு நிறைவுக்கும் பிரதமருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எதிரணியினர் போலித் தகவல்களுடனும் புள்ளி விபரங்களுடனும் தான் அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து மக்களை ஏமாற்ற முனைகின்றது என்று குற்றம் சாட்டி இந்த வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்தனர்.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் மத்திய வங்கிக் கொள்ளை நடந்த போது இன்று சஜித் தரப்பில் இருக்கின்ற பலர் அந்த அரசாங்கத்தில் இருந்தனர். அன்று இவர்களில் எவரும் இந்த வங்கிக் கொள்ளைக்கு எதிராக தமது கட்சிக்குள்ளோ ஆளும் தரப்புக்குள்ளோ பிரதமர் ரணிலுக்கு எதிராக வாய்திறக்காமல் மௌனமாக இருந்தவர்கள். இன்று புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பதற்கோ விமர்சிப்பதற்கோ இவர்களுக்கு தார்மீக ரீதியில் எந்த அருகதையும் இல்லை என்பதுதான் எமது கருத்து. அதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம் என்று அர்த்தப்படாது.
சரி இன்னும் மைத்திரி-ரணில் ஆகியோரின் நல்லாட்சி அல்லது சஜித் வெற்றி பெற்று ஜனாதிபதியாகவும் ஆளும் தரப்பில் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமராகவும் இருக்கின்றார் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது இந்தக் கொரோனா பின்னணியில் அவர்களால் இதற்கு மேலாக ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியுமா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். எனவே இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியதிலும் தன்னலத்து அதிகாரங்களைப் பாவித்தார்கள் என்பதிலும் இருதரப்பும் குற்றவாளிகளே. குருனாகல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்று பாராளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் எங்கு இருக்க வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்க்கின்றோம்.
ஈஸ்டர் தாக்குதல் கெரோனா என்பன நாட்டின் பொருளாதாரத்தை முற்றும் முழுதாக சீர்குழைத்து விட்டது. நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவிலுமுள்ள நாடுகள் கொரோனா அட்டகாசத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியாத ஒரு நிலை இருக்கின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்த அடைந்து வரும் நாடுகள் அனைத்திலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் நோக்கி சரிந்திருக்கின்றது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் நமது நாட்டில் மாட்டும் பொருளாதார வளர்ச்சி பிளஸ் என்று நமது பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்துள்ள வரவு செலவு அறிக்கையில்;; சொல்லப்பட்டிருக்கின்றது.
எனவே இது ஆசியாவின் ஆச்சர்யத்தையும் கடந்து சர்வதேச ஆச்சர்யம் என்று நாம் நினைக்கின்றோம். உண்மையிலே அரசாங்கம் தனது பொருளாதரத்தை இப்படி வளத்துக் கொள்ள முடியுமானால் நாம் பாரட்டத்தான் வேண்டும். அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்ற வரவு செலவு தொடர்பான ஒரு பதிவேட்டில் 72ம் பக்கத்தில் 2020 பொருளாதார வளர்ச்சி பற்றி அரசாங்கம் வெளியிட்ட குறிப்பில் இந்திய -10.3 ஜப்பான் -5.3 மலேசியா-6 இந்தோனேசியா-1.5 சிங்கப்பூர்-6 தென் கொரியா-1.9 ஐரோப்பிய நாடுகளின் நிலையும் இதுதான். அவை அனைத்தும் மைனஸ் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆச்சர்யம் என்ன வென்றால் இலங்கை மட்டும் பொருளாதார பிளஸ் 10 1.7 என்று அதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதனை எவராவது ஏற்றுக் கொள்ள முடியுமா? நம்புவார்களா?
இந்த வரவு செலவு அறிக்கை தயாரிக்கின்ற போது போலியான தகவல்களை ஒத்துக் கொள்ளாத ஒரு அதிகாரியை அந்த குழுவில் இருந்து வெளியேற்றியும் இருக்கின்றார்கள் என்று எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றார்கள். பிரதமர் ஓரிடத்தில் நான் நாடுபூரவும் போனேன் யாரும் பொருள்களின் விலையைக் குறைக்குமாறு என்னிடம் கேட்கவில்லை என்று சொன்னதாக ஒரு தகவல் சொல்கின்றது. அப்படிப் பார்க்கும் போது பொருள்களின் விலை ஆகாயத்தை நோக்கி உயர்ந்தாலும் விரட்டிப்போய் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களிடம் கையில் நிறையக் காசு இருக்கின்றது என்று தான் நாம் கருதுகின்றோம்.
மனித வேட்டைக்காரன் சஹ்ரான் கொடுத்த அடியில் வீழ்ந்த உல்லாசப் பிரயாணத்துறை இன்னும் தலை தூக்கவில்லை. கொரோனா புரிகின்ற அட்டகாசம் எப்போதுதான் முற்றுப் பெறப் போகின்றதோ தெரிய வில்லை. நமது சுகாதார அமைச்சர் இன்னும் மூன்றரை வருடங்கள் வரை கொரோனா நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார். அவரது முட்டிக் கிரியையும் வெற்றி அளிக்கவில்லை போலும். எனவே 2023 நடுப்பகுதியில்தான் இயல்பு நிலை என்று நாம் கணக்குப்போட வேண்டி இருக்கின்றது.
மொத்த வருமானத்தில் செலுத்த வேண்டிய கடன் தெகை 72 சதவீதம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரி வருமானம் 5 பில்லியன் செலவு 8 பில்லியன் துண்ட விழும் தொகை 3 பில்லியன். எனவே வருட வருமானத்தையும் துண்டுவிழும் தொகையையும் சரிபார்த்துக் கொள்ள முடியும். பொதுவாக வருமானம் வருடாந்தம் 5 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் இது 22 வரை என்று கூறப்பட்டுள்ளது. 2015 ல் மட்டும் வருமானம் இந்த இலக்கு எட்டப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி ஜீ.ஆர். தனது ஓராண்டு பூர்த்தி தின உரையில் நகரப் பல்கலைக்கழகங்களை மாவட்ட மட்டத்தில் அமைக்க இருப்பதாகவும் தாதிகளுக்கு மற்றும் விளையாட்டுத் துறைக்கு விசேட பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக நிறுவ இருப்பதாகவும். கிராம மட்டத்தில் 10000 பாலங்கள். ஒரு இலட்சம் கிலோ மீற்றருக்கு பாதைகளுக்கு கார்ப்பட் போட இருப்பதாகவும் தனது உரையில் குறிப்பிடடிருக்கின்றார். மக்களின் குடிநீர் வசதிகளை மேலும் விஸ்தரிக்க இருப்தாகவும் தனது உரையில் குறிப்பட்டார். இது ஆரோக்கியமான விடயங்கள் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கின்ற வருமானம் வந்து சேர விட்டால் இவை எல்லாம் ஏட்டுச் சுரக்காய் நிலையில்தான் இருக்கும். யார் பதவிக்கு வந்தலும் நிலை இதுதான்.
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் காலம் கடந்து போன ஒன்று அது பல வருடங்களாக நடந்து வருகின்றது. இந்தத் தொகை குறைந்தது 1300 என்ற அளவில் அமைந்தால்தான் பொருத்தமானது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் 1000 அதிகரிப்பு என்று சொல்லப்பட்ட அடுத்த கனமே தோட்ட முதலாளிமார் ஒன்று கூடி இது சாத்தியம் இல்லாத விடயம். நாங்கள் இதனை வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட போது ஆளும் தரப்பில் அமைச்சர் ஜோன்டன் பர்ணாந்து நாங்கள் இரு தரப்பும் இணைந்து இதனை எப்படியும் வெற்றெடுப்போம் என்று எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பதில் வழங்கும் போது கூறி இருக்கின்றார். எனவே இதுவும் எந்தளவு நடைமுறைச் சாத்தியம் என்பது தெரியவில்லை.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தனியர்தான் அப்படிச் சொல்கின்றார்கள் என்றால் அரசுக்கு சொந்தமான தோட்டங்கள் பல இருக்கின்றது. அதிலாவது நாளையில் இருந்து இந்தப்ப பணத்தை வழங்கலாம் என்று கேட்டிருக்கின்றார். சுரேஸ் வடிவேல் இந்த அறிக்கையில் அதற்காக எந்த இடத்திலும் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை சுட்டிக் காட்டுக்கின்றார். எனவே பாரியதோர் தொழிலாளர் போராட்டத்திலதான் தோட்டத் தொழிலாளர்கள் இதனை அவர்கள் வென்றெடுக்க முடியும் என்று நாம் கருதுகின்றோம்.
இன்று தலைக்கு நாம் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் ஆறு இலட்சத்துக்கு மேல். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் குறைந்தது 30 இலட்சம் ரூபாய் கடன்காரனாக இருக்கின்றது. நமது நாட்டில் குடித் தொகை 2 கோடி 20 இலட்சம் என்று எடுத்துக் கொண்டால் நாம் செலுத்த வேண்டிய கணக்கை கண்டு கொள்ள முடியும். இது தமக்கு தனிப்பட்ட ரீதியில் சுமையாக இல்லாவிட்டாலும் நமது நாட்டுப் பொருளாதார நிலை இதுதான் என்பதனை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணம் திட்டமில்லாத பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொதுமக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுமாகும்.
இதற்கிடையில் பதுக்கி வைக்கிப்பட்டிருக்கின்ற பணம் அல்லது கருப்புப் பணத்தை அரசாங்கம் வெளியில் கொண்டு வருவதற்கு சில உத்திகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் மேற் கொண்டிருக்கின்றது. 100 இலட்சம் ரூபாய்களை எவராவது வைத்திருந்தால் அதில் ஒரு சதவீதத்தை அதாவது ஒரு இலட்சம் ரூபாய்களை அரசுக்கு செழுத்தி விட்டு அதனை உள்நாட்டில் ஏதாவது ஒரு துறையில் முதலீடுசெய்யலாம் என்று அறிவித்திருக்கின்றது. எதிரணியினர் ஆளும் தரப்பிலுள்ளவர்கள் தமது கருப்புப் பணத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளத்தான் இந்தத் திட்டத்தை இங்கு அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கின்றது என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அருனி அமரசூரிய கவர்ச்சிகரமான வார்த்தைகளை சோடித்து இங்கு ஜாலம் புரிந்து இருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார். அதே கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பேசுகின்ற போது வருமானம் 1961 பில்லின் என்றும் செலவு 3500 பில்லின் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகளுக்கும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகளுக்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது இது ஏன் என்று தெரியவில்லை.
2017 வரை வெளிநாட்டுக் கடன் தொகை 7000 பில்லியன் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் 6000 பில்லியனைக் கடனாக வங்கியது. மொத்தம் 13000 பில்லியன். இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் இந்த வருடம் 2000 பில்லியன்களைக் கடனாக வாங்கியது. இது சட்ட முறனானது. மேலும் 2021ல் இன்னும் புதிதாக 3000 பில்லியனைக் கடனாக வாங்குகின்றது. எனவே இந்த இரு வருடங்களுக்கு மட்டும் இவர்கள் இன்னும் 5000 பில்லியனை கடனாக வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் இந்தத் தொகை எங்கு போய் முடியும் என்பதனைக் கற்பனை செய்து பார்க்கக் கஷ;டமாக இருக்கும். 1961 பில்லியன் வருமனம் செலவு 3500 பில்லியன் என்று கணக்குச் செல்லப்பட்டிருக்கின்றது. இடையில் குறை நிறப்பு என்று வேறு நமது நாட்டில் வருவது வழக்கமான நிகழ்வுதான். எனவே காசை அச்சடிப்பதும் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கடனுக்கு வாங்குவதும் சொத்துக்களை அன்னியருக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பதும் கமிஷ; வாங்குவதும் தான் நமது அரசாங்கங்கள் இப்போது வழக்கமாகச் செய்கின்ற வேலையாக இருந்து வருகின்றது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதாவது திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருக்கின்றதா என்று புரியவில்லை.
நல்லாட்சி காலத்தில் நடந்த பினைமுறி அல்லது வங்கிக் கொள்ளை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது அர்ஜூன் மஹேந்திரன் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாமல் இருப்பதனால் அவருக்கு எதிரான நீதி மன்ற அழைப்பானையை தம்மல் ஒப்படைக்க முடியால் இருக்கின்றது என்று குறிப்பிட்டார். நீங்கள் தானே அவரை இங்கு கொண்டு வந்தீர்கள் அவரை நீங்கள் தான் கண்டுபிடித்து தரவேண்டும் என்ற தோரனையில் நீதி அமைச்சர் அலி சப்ரி பதில் வழங்கி இருக்கின்றார்.
வடக்கு கிழக்கில் போரில் இழந்த தமது உறவுகளை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளளைத் தமிழ் தரப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. இதற்கு அரசு வழக்கம் போல் தமது கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். வடக்கில் இதற்கான ஏற்பாடுகளச் செய்வதற்காக 10 ஏக்கரில் அமைந்துள்ள நிலத்தை 30 பேர் அளவில் கூடித் துப்பறுவு செய்திருக்கின்றார்கள். அப்போது அதிரடியாக அங்கு வந்த பாதுகாப்புத் தரப்பினர் கொரோனா நாட்களில் இப்படியெல்லாம் ஒன்று கூட சட்டத்தில் இடமில்லை என்று அங்கு இருந்தவர்களை மிரட்டி இருக்கின்றார்கள்.
அதே நேரம் வடக்கில் ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் கலந்து கொண்ட ஒரு வைபவத்தில் சிறு மண்டபத்தில் 250 பேர்வரை ஒன்று கூடி இருக்கின்றார்கள் அவர்களிடத்தில் பொலிசார் எந்தக் கோள்விகளையும் எழுப்பவில்லை. இது என்ன நியாம்.? எங்கள் உறவுகள் இந்தப் போரில் 140000 காணாமல் போயுள்ளார்கள் அல்லது கொல்லப்ட்டுள்ளார்கள். நாமும் நமது மக்கள் ஒரு அன்னிய நாட்டில் வாழ்வது போல் உணர்வுடனே வாழ்கின்றோம். இது என்ன நீதி என்று தமிழ் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வரவு செலவு விவாதத்தில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி நியாயம் கேட்டார்.