2021இல் நடந்த உலகின் சுவாரசிய அறிவியல் நிகழ்வுகள்

மருத்துவ பரிசோதனை

தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன.அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம்.

பெர்சவரென்ஸ் ரோவர் எந்திரம்

பல்லாண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த செவ்வாய் கிரகத்தை, இப்போது மனிதர்கள் முத்தமிடும் தொலைவுக்குக் கொண்டு வந்துவிட்டது பெர்சவரன்ஸ் ரோவர்.நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாயில் தரையிறங்கியது. ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த ரோவர் வாகனம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஆதாரங்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

“இன்ஜென்யூட்டி” என்றழைக்கப்பட்ட ஹெலிகாப்டர், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் செவ்வாய் கோளில் பறந்தது. அதற்கு முன் மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி, வேறொரு கோளில் பறக்கவிடப்பட்டதில்லை.கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்தது. சமீபத்தில் ஜெசரோ க்ரேட்டில் அதன் அடிப்பாறையையே பெர்சவரன்ஸ் சேகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாயின.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், மொத்தம் 24 பாறை மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாறை மாதிரிகள் இந்த தசாப்த காலத்துக்குள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட உள்ளன.

பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம்

நாசாவின் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலன் (Parker Solar Probe), கொரோனா என்றழைக்கப்படும் சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது நிகழ்ந்திருந்தாலும், விண்கலன் கொரோனா வழியாகத்தான் கடந்து சென்றதா? என்பது தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது.

அதீத வெப்பம் மற்றும் கதிர்வீச்சை பார்க்கர் விண்கலம் எதிர்கொண்டது. சூரியன் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த புதிய தகவல்களை இதன் மூலம் தற்போது பெற முடிந்துள்ளது. “சூரியனின் புற வளிமண்டலத்தைத் தொட்டது மனித குலத்தின் மிகப்பெரிய முன்னேற்றம். பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் குறித்தும், அது சூரிய மண்டலத்தின் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள உதவும்,” என நாசாவின் சூரிய இயற்பியல் பிரிவின் இயக்குநர் நிக்கோலா ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, டிசம்பர் 25ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் குவானாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.இந்த சூப்பர் தொலைநோக்கி பிரபஞ்சத்தை மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள உதவும்.13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திரத்தின் ஒளியை இந்த தொலைநோக்கி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.பிற கோள்களில் உயிர்கள் உள்ளதா என, இந்த தொலைநோக்கி மற்ற கோள்களின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் குறித்து ஊடுறுவி கண்டறியும்.

விண்கலம்

சூரிய குடும்பத்தின் பிறப்பு ரகசியத்தை அறிய உதவி செய்யும் புதைபடிவங்கள் என்று கருதப்படும் விண்கல் கூட்டத்தை ஆராய வியாழன் கோள் நோக்கி கடந்த அக்டோபர் மாதம் கிளம்பியது நாசாவின் லூசி விண்கலன். செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் சூழ்ந்து வருவார்கள் தானே. அதைப் போல சூரியனை சுற்றிவரும் வியாழனுக்கு முன்னும் பின்னும் ஒரு பெரும் கூட்டமாக விண் கற்கள் வலம் வருகின்றன.

வியாழனைச் சூழ்ந்து பயணிக்கும் இந்த விண்கல் கூட்டத்திலே சூரியக் குடும்பத்தின் பிறப்பு, பரிணாமம் ஆகியவற்றுக்கான ரகசியம் இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எனவே லூசி வியாழனை நோக்கி ஏவப்பட்டது.

விண்வெளி சுற்றுலா – ப்ளூ ஆரிஜின், விர்ஜின் கேலக்டிக்

விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக் கொண்டார் பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். விர்ஜின் கேலக்டிக் என்ற அவரது நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்கிற ராக்கெட் விமானம், பூமியிலிருந்து சுமார் 86 கிலோமீட்டர் உயரம் வரை பறந்து, தனது ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

மறுபக்கம், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்கிற தன்னுடைய விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட்டில், பூமியிலிருந்து விண்வெளி பயணம் மேற்கொண்டார். அவரது விண்கலம் பூமியிலிருந்து 106 கிலோமீட்டர் வரை தொட்டது. இன்னொருபுறம் ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வழியாக உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பை கட்டமைத்துள்ளார்.

வயாகரா மருந்து

ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் போன்ற மறதி நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டில் கூறினர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

HIVவியை எதிர்க்கும் மனித உடல்

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்தவித மருந்து மற்றும் சிகிச்சையின்றி உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹெச்.ஐ.வி-யிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதாக அறிவியல் உலகில் செய்தி வெளியானது. உலக அளவில் இப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஹெச்.ஐ.வி வைரஸை அழித்ததாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். அவருடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்கள் சோதிக்கப்பட்ட போது, ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ‘இன்டர்னல் மெடிசின்’ என்கிற சஞ்சிகையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம்

அமெரிக்காவில் மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு, பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என மருத்துவர்கள் சோதித்தனர். முன்னதாக, பன்றியிடம் இருந்து வந்த சிறுநீரகத்தை, மனித உடல் நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஸ்டிரைல் நியூட்ரினோ கிடைக்கவில்லை

பொருள்களின் இன்றியமையாத அடிப்படை கட்டமைப்பாக ‘ஸ்டிரைல் நியூட்ரினோ’ என்ற துகள் இருக்கும் என்கிற கோட்பாட்டு அளவில் முடிவு செய்து விஞ்ஞானிகள் அதைத் தேடி வந்தனர். அந்த துகளைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆராய்ச்சி முடிவில் அப்படி ஒரு துகள் கிடைக்கவே இல்லை. இதையடுத்து, இந்த பேரண்டம் எப்படி உருவானது என்பது குறித்து விளக்குவதற்கு உதவக்கூடிய மேலும் சுவாரசியமான கோட்பாடுகளை நோக்கி விஞ்ஞானிகளை நகர்த்தியது.

விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றி, அதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கருந்துளை ஒன்றில்இருந்து ஒளி வருவது கண்டறியப்பட்டது அதுவே முதல் முறை.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் ( XMM-Newton) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நு-ஸ்டார் (NuSTAR – Nuclear Spectroscopic Telescope Array) ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு இதைக் கண்டுபிடித்தது.

ஆண் மரபணுயின்றி முட்டையிட்டு குஞ்சு பொறித்த பறவை

கலிபோர்னியா கன்டோர் என்ற இனத்தை சேர்ந்த இரண்டு பெண் பறவைகள் ஆண் துணை இல்லாமல் மட்டுமல்ல, ஆண் மரபணு இல்லாமலேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்திருப்பதை அமெரிக்க காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கலிபோர்னியா கான்டோர் என்பது அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

24,000 ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழுந்த உயிரினம்

சைபீரியாவில் 24,000 ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறியது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர்.

கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்ததும் காணப்பட்டது.

Previous Story

நீதிமன்றத்தை அதிரவைத்த கேள்வி

Next Story

'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' நிதி பெற மறுத்த இந்திய