2 பந்து 21 ரன்:  நிலைகுலைந்த நியூசிலாந்து ஆஸ்திரேலியா ‘பவர் ப்ளே’ உத்தி

The International Cricket Council (ICC) Men's Cricket World Cup Trophy on display during the 2nd ODI cricket match between West Indies and India, at Kensington Oval in Bridgetown, Barbados, on July 29, 2023. India will host the 13th edition of the ICC World Cup from 5 October to 19 November 2023. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

உலகக்கோப்பையில் இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட்- வார்னர் ஜோடி அதிரடியில் மிரட்ட, நியூசிலாந்து அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா மீண்டும் ஒருமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் நடப்பு தொடரில் தனது சாதனையை தானே முறியடிக்கவும் செய்தார்.

Australia vs New Zealand Highlights World Cup: Head's 109 proves pivotal as AUS defeat NZ by 5 runs | Hindustan Times

இந்த போட்டியில் நியூசிலாந்தை நிலைகுலையச் செய்த ஆஸ்திரேலியாவின் பலே உத்தி என்ன? இந்தப் போட்டியின் முடிவால் புள்ளிகள் பட்டியலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

இரு அணிகளிலும் என்ன மாற்றம்?

உலகக்கோப்பையில் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின. உலகக்கோப்பையில் இதுவரை மோதிய 11 ஆட்டங்களில் 8 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா, நடப்பு தொடரில் பெற்ற ஹாட்ரிக் வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது.

அதேநேரத்தில், நடப்புத் தொடரில் இதுவரையிலான ஆட்டங்களில் இந்தியா தவிர மற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் நியூசிலாந்து அணி களம் கண்டது.

ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக டிரெவிஸ் ஹெட் மீண்டும் இடம் பெற்றார். நியூசிலாந்து அணியில் காயத்தால் அவதிப்படும் மார்க் சாப்மேனுக்குப் பதிலாக ஜிம்மி நீஷம் வாய்ப்பு பெற்றார்.

ஆஸ்திரேலியா அசத்தல் தொடக்கம்

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாத்தம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே வார்னர் அதிரடியைத் தொடங்கிவிட்டார். மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை அவர் விளாசினார்.

ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 93 ரன்களை சேர்த்துளள வார்னர் – டிராவிஸ் ஹெட் ஜோடி தங்கள் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக விளையாடிது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

2 பந்துகளில் 21 ரன் எடுத்த ஆஸ்திரேலியா

டிரென்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தையே டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த இரு பந்துகளையும் போல்ட் நோபாலாக வீச, அதில் ஒரு சிக்சர், ஒரு 2 ரன் என 8 ரன்களை ஹெட் சேர்த்துவிட்டார். அடுத்த பந்தையும் அவர் சிக்சருக்கு விளாசினார். இதன் மூலம், செல்லத்தக்க 2 பந்துகளை வீசியிருந்த போதே போல்ட் 21 ரன்களை வாரியிறைத்திருந்தார்.

நியூசிலாந்து அணி டிரென்ட் போல்ட் – மாட் ஹென்றி ஆகிய தொடக்க பந்துவீச்சு ஜோடி புதிய பந்தில் காட்டும் மாயாஜாலத்தையே நடப்புத் தொடரில் பெரும்பலமாக கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் இருவரையுமே முதல் ஓவரில் இருந்தே வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் தடாலடியாக அடித்து விளாசி நியூசிலாந்தின் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டனர். ஹென்றி வீசிய மூன்றாவது ஓவரில் இந்த ஜோடி 22 ரன்கள் குவித்தது.

ஹென்றி வீசிய முதல் 15 பந்துகளில் மட்டும் ஆஸ்திரேலிய 7 பவுண்டரிகளை அடித்து அவரது நம்பிக்கையை முற்றாக குலைத்துவிட்டது. இதனால் சரியான லைன் அன்ட் லெந்தை இழந்துவிட்ட இருவரும் தாறுமாறாக பந்துவீசினர். ஆட்டமிழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசும் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீசும் உத்தியை தொடக்க ஓவர்களிலேயே நியூசிலாந்து பயன்படுத்த தொடங்கிவிட்டது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

ஃபுல் லென்த், ஷார்ட் பால், ஸ்லோ பால் என பந்துவீச்சில் மாறுதல் காட்டினாலும், சரியான லைனில் பந்துவீச நியூசிலாந்து வீரர்கள் தவறிவிட்டனர். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை அவர்களால் தடுக்க முடியவில்லை.

25 பந்துகளில் ஹெட் அரைசதம்

களத்தில் தொடக்கம் முதலே சரவெடியாக வெடித்த வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலிய அணி 27 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்துவிட்டது. எதிர்கொள்ளும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இருவரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 118 ரன்களைக் குவித்துவிட்டது. இதில், 21 பவுண்டரிகளை ஆஸ்திரேலியா விளாசியிருந்தது.

அதிரடியை தொடர்ந்த வார்னரும், ஹெட்டும் 15 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை கடக்க உதவினர். இருபதாவது ஓவரில்தான் இந்த ஜோடியை நியூசிலாந்து வீரர்களால் பிரிக்க முடிந்தது. வார்னர் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தனர்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

59 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்

மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார். ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் தடாலடியாக 109 ரன்களைக் குவித்ததால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்திருந்தது.

வார்னர், ஹெட் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு மிடில் வரிசை ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. வார்னர் – டிராவிஸ் ஹெட் தொடக்க ஜோடி அமைத்துக் கொடுத்த வலுவான தொடக்கத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர். ஸ்டீவ் ஸ்மித் 18, மிட்செல் மார்ஷ் 36, மார்னஸ் லாபுஷேன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 38வது ஓவரில் இறங்கி தன் அதிரடியால் 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ் கடைசியில் அதிரடி ஆட்டம் ஆடினர். இங்லிஸ் 28 பந்துகளில் 38 ரன்களும், கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

கடைசி ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்

ஆஸ்திரேலியா 48 ஓவர்களில் 387 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. எப்படியும் கடைசி இரண்டு ஓவர்களில் 20 முதல் 30 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்து ஸ்கோரை 400க்கும் மேல் கொண்டு செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அடுத்த எட்டு பந்துகளில் ஆஸ்திரேலியா 1 ரன்னை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. ட்ரென்ட் போல்ட் 49வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹென்றி கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 388 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முதல் 20 ஓவர்களையும், கடைசி 14 ஓவர்களையும் மோசமாக வீசிய நியூசிலாந்து அணி கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை ரன் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. நியூசிலாந்து பந்துவீச்சு இந்தப் போட்டியில் மோசமாக இருந்தாலும் இந்த கடைசி 2 ஓவர்களால் ஆறுதல் அடைந்தது அந்த அணி.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து

ஆஸ்திரேலியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் கண்ட நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். ஜோஷ் ஹேஸில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே டெவோன் கான்வே 2 பவுண்டரிகளை விளாசினார். எனினும், இமாலய இலக்கு தந்த நெருக்கடியால் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும் முன்பே பந்துகளை விளாச முற்பட்டதால் நியூசிலாந்து வீரர்கள் பல பந்துகளை விரயம் செய்தனர். முதல் 7 ஓவர்களிலேயே 11 பந்துகளை அவர்கள் இவ்வாறு வீணடித்தனர்.

ஹேஸில்வுட் வீசிய எட்டாவது ஓவரில் நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. டெவோன் கான்வே 17 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரர் வில் யங்கையும் ஹேசில்வுட் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். நிதானமாக ஆடிய யங் 32 ரன்கள் சேர்த்தார்.

ரச்சின் ரவீந்திராவால் நிமிர்ந்த நியூசிலாந்து

அறிமுக உலகக்கோப்பையிலேயே கலக்கி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கைகொடுத்தார். அவரது அதிரடியால் நியூசிலாந்து அணி தலைநிமிர்ந்து, இமாலய வெற்றி இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் விரைந்தது. ரச்சின் ரவீந்திராவுக்கு டெரில் மிட்செல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்திருந்தது. ரச்சினுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்ஷெல் 42 பந்துகளில் அரைசதத்தினை எட்டினார்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

மிட்செல் அவுட்

போட்டியின் 24வது ஓவரை வீசிய ஆடம் ஜாம்பா ஓவரில் ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி மிரட்டினார். ஆனால், அவரது ஓவரிலேயே மறுமுனையில் நின்றிருந்த மிட்செல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 51 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருந்தார்.

25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 131 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 25 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற 257 ரன்கள் தேவைப்பட்டன. அதாவது ஓவருக்கு 10 ரன்னுக்கும் அதிகமாக அந்த அணிக்கு தேவைப்பட்டது.

தன் சாதனையை தானே முறியடித்த ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால், களமிறங்கியதும் விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரச்சின் ரவீந்திரா கவனம் செலுத்தினார். பொறுப்பாக விளையாடிய அவர், 50 பந்துகளில் அரைசதம் கண்டார்.

அரைசதம் அடிக்கும் வரை நிதானமாக ஆடி வந்த ரச்சின், அணியின் வெற்றிக்கு அதிக ரன்ரேட் தேவைப்பட்டதால் கியரை மாற்றி அதிரடிக்கு மாறினார். 37வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி அவர் சதம் விளாசினார். 50 ரன்னில் இருந்து 100 ரன்களை எட்ட அவர் வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.

உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற தன் சாதனையை (82 பந்துகள்) ரச்சின் ரவீந்திரா முறியடித்தார். இந்தப் போட்டியில் 77 பந்துகளில் சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

திக் திக் 10 ஓவர்கள்

40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 292 ரன்களை எடுத்திருந்தது. அதன் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. ஆஸ்ரேலிய அணியும் இதே கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்களையே எடுத்திருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு கண்ணில் தென்பட்டது. ரச்சின் ரவீந்திரா நல்ல பார்மில் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு அவர் வெற்றி தேடித்தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 5 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 116 ரன்களை விளாசிய அவர், எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய பந்தில் லபுஷேனேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், நியூசிலாந்து அணி அதிர்ச்சி அடைந்தது.

2 ஓவர்களில் 32 ரன் தேவை

48 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 357 ரன்கள் சேர்த்திருந்தது. வெற்றி பெற 12 பந்தில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி இருந்தது. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன.

ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியால் கடைசியில் 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களையே சேர்க்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

நியூசிலாந்தை நிலைகுலையச் செய்த ஆஸி.யின் பலே திட்டம்

ஆஸ்திரேலியாவின் பவர்பிளே திட்டத்தால் நியூசிலாந்து அணி நிலைகுலைந்து போனது. நியூசிலாந்து அணி முதல் 13 ஓவர்கள் அனைத்திலும் குறைந்தது ஒரு பவுண்டரியாவது கொடுத்தது. 2002இருந்து ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி, பவுண்டரி கொடுக்காமல் ஒரு ஓவர் வீச அதிக ஓவர்களை எடுத்துக் கொண்ட வரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 8.3 ஓவரில் 100 ரன்களை எட்டி, அதிவேகமாக 100 ரன்களை குவித்த அணியானது ஆஸ்திரேலியா. உலகக்கோப்பையில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த இரண்டாவது அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா பெற்றது. முன்னதாக நியூசிலாந்து அணி 2015இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 6.4 ஓவரில் 100 ரன்களை எட்டி இருந்தது.

புள்ளிப் பட்டியலில் மாற்றம் என்ன?

நடப்பு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அடுத்தடுத்து பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும். அதேபோல், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மோதிய ஆட்டத்தின் முடிவால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இரு அணிகளுமே 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றிருக்கின்றன.

ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் அப்படியே தொடர்கின்றன.

Previous Story

ரணிலைப் பற்றித் தெரியாதா?

Next Story

காஸாவில் தொலைத்தொடர்பு சேவைகளை இஸ்ரேல் முடக்கியது! திட்டம் என்ன?