-நஜீப் பின் கபூர்-
நன்றி: 12.01.2025 ஞாயிறு தினக்குரல்
“நாம் ஞாயிறு தினக்குரல் வார இதழுக்காக எழுதிய முதல் கட்டுரை”
‘சுரநிமல‘ என்ற புனைப் பெயரில்
லசந்த விக்கிரமதுங்ஹ எழுதும்
ஒரு கட்டுரை தொடர்ப்பான முக்கிய
தகவல்கள் அடங்கிய குறிப்புக்கள்
முன்கூட்டி நமக்குக் கிடைத்தது.
அதனால் அன்று ஆங்கில சிங்கள மொழிகளில்
மிக் விமானக் கொள்ளை தொடர்பான
பரபரப்பான தகவல்களை லசந்த
தனது பத்திரிகைகளில் வெளியிட்ட–சொன்ன
அதே வாரத்தில் – நாளில் நாமும்
தினக்குரல் ஞாயிறு வார இதழுக்கு
‘மிக் விமானக் கொள்ளை‘
என்ற பெயரில் ஒரு கட்டுரையயை
எழுதி அனுப்பி இருந்தோம்.
அனுர குமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் பட்டியல் நமது கைகளில் இருக்கின்றன. அவர்கள் அதிகாரத்துக்கு வந்து இன்னும் சில மாதங்களேனும் கடந்து போய் இருக்காத நிலையில் அவர்களிடத்தில் இவை பற்றிக் கேள்விகளை எழுப்புவது நியாயமில்லை என்பது எமது நிலைப்பாடு. என்றாலும் ஆட்சியாளர்களுக்கும் குடிகளுக்கும் சில விடயங்களை ஒரு முறை எமது பாணியில் எச்சரிக்கையாக நினைவூட்டலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
அனுரவின் அரசியல் எதிரிகள் வஞ்சக் கண்ணோட்டத்தில் இன்று நியாயமற்ற விதத்தில் கேள்விகளை எழுப்புகின்றார்கள் முட்டுக்கட்டைகள் போடுகின்றாhகள். இதுதான் நம்ம நாட்டு அரசியல் என்பதும் நமக்குத் தெரியும்.
அந்த வகையில் அரசின் திட்டங்களை செயல்களையும் வாக்குறுதிகளையும் எதிரணியினர் விமர்சிக்கத்தான் செய்வார்கள். இப்போது நமது அரசியல்வாதிகள் மக்களுக்குக் கடந்த காலங்களில் (1948-2025) கொடுத்த வாக்குறுதிகளை ஒரு முறை நினைவு படுத்தலாம் என்று தோன்றுகின்றது.
இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் நமக்கு நிறையவே வாக்குறுதிகளைத் அள்ளித் தந்திருக்கின்றன. அவற்றில் சில அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிகளிலும் அமர்ந்தும் இருக்கின்றன. இப்போது அந்த ஜனரஞ்சமான வாக்குறுதிகள் சிலவற்றைப் ஒரு முறை பார்ப்போம்.
இந்த நாட்டில் மகவலி அபிருத்தித் திட்டத்தை துவக்கி வைக்கின்ற போது அப்போதய பிரதமர். டட்லி சேனாநாயக்க இந்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைக்கு வரும் போது பொலன்னருவை பராக்கிரமபாகு யுகம் மீண்டும் நாட்டில் மலரும். நாம் ஆசியாவில் நெற்களஞ்சியம் என்ற பெயரை மீண்டும் பெறுவோம். அதே போன்று இந்தியாவுக்கு மின்சாரத்தை கூட நாம் ஏற்றுமதி செய்வோம் என்றார். இவர் ஐதேக. காலத்தில் பிரதமராக இருந்தவர். அடுத்த வந்த தேர்தலில் அவர் படுதோல்வி.
அதே போன்று சந்திரனில் இருந்தவது நாம் அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு கொடுப்போம். குடிகளைப் பட்டினியில் போட்டு சாகடிக்க மாட்டோம் என்று தேர்தல் மேடைகளில் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க கூறினார்.
இவர் ஸ்ரீலசு. கட்சியின் பிரதமராக பல முறை அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றார். உலகின் முதல் பெண் பிரதமர். உலகில் செல்வாக்கான தலைவரும் கூட. 1972 குடியரசு அரசியல் யாப்பை நாட்டில் அறிமுகம் செய்தவர். அடுத்து வந்த தேர்தலில் இவரும் தோற்றுப்போனார்.
அதே போன்று குடிமக்களுக்கு நாம் எட்டு கிலோ தானியம் கொடுப்போம் என்று பதவிக்கு வந்தார் ஜேஆர். ஜெயவர்தன. இவர் ஸ்ரீ மாவோ கொண்டு வந்த அரசியல் யாப்பை குறுகிய காலத்தில் (1978) மாற்றி அமைத்தார். நாட்டில் தாரான்மை வாதத்தின் முன்னோடி. இதுதான் நாட்டின் சாபத்துக்கும் வழிசமைத்தது என்ற விமர்சனங்களும் இவர் மீது இன்றும் இருக்கின்றது. நாட்டை சிங்கப்பூராக மாற்றுவதாகவும் மக்களுக்கு வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.
இந்த ஐதேக. ஆட்சி (ஜேஆர்-பிரேமதாச) நாட்டில் நெடுங்காலமாக (1977 முதல் 1994 வரை 17 வருடம்) நீடித்தது. இவர்கள் ஆட்சியை நாட்டின் சாபக்கேடு என்று விமார்சித்த சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும், மூன்று ரூபா ஐம்பது சதத்துக்கு (3.50) பாண் தருவதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை காலி முகத்திடலுக்கு இழுத்து வந்து தோலுரிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இவரை தமிழ் மக்களும் நம்பினார்கள்-வாக்களித்தார்கள். புதைக்கப்பட்ட உடல்களைத் தோன்றி எடுத்து அதனை மிகப் பெரிய ஒரு விளம்பரமாகவும் பிரச்சாரமுமாகவும் சந்திரிகா பாவித்திருந்தார். அன்று சம்ஸ் என்பவர் இயற்றிய ‘வென்புறா பாடல்’ சக்கை போடு போட்டது. அவருக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொட்டினார்கள். எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே இரு முறை அதிகாரத்துக்கு வந்த சந்திரிகாவும் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்.
இதற்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த மஹிந்த ராஜபக்ஸ போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற காரணத்தால் பேரின மக்கள் மத்தியில் ஹீரோவாக மதிக்கப்பட்டார். இதனால் சிங்கள மக்கள் ராஜபக்ஸாக்களை அரச வம்சம் போல மதிக்கத் தலைப்பட்டார்கள்.
தமக்குக் கிடைத்த இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாவித்து நாட்டில் இவர்கள் ஒரு அராஜக ஆட்சியை முன்னெடுத்தனர். அமெரிக்காவில் குடியேறி இருந்த மஹிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்ஸ கோட்டாபே ராஜபக்ஸ போன்றவர்கள் இங்கு வந்து அரச நிருவாகத்தை ஆக்கிரமித்து அதிலிருந்த உச்ச பதவிகளையும் கைப்பற்றிக் கொண்டனர்.
இது தவிர அவரது குடும்பம் மனைவியின் குடும்பம் ராஜபக்ஸாக்களின் புதல்வர்கள் என்ற அனைவரும் போல அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்து அரச நிதி அரச வளங்களை முடியுமான மட்டும் சட்ட விரோதமாகக் கையான்டனர். அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இருக்கவில்லை.
நீதி சட்டம் பொலிஸ் என்பன பிரித்தானிய அரசியல் யாப்புப் போல இவர்கள் விவகாரத்தில் நெகிழந்து கொடுத்தது. கேள்விகள் எழுப்பப்பட்ட சந்தர்பங்களில் பாட்டி கொடுத்த (ஆச்சியின் மெனிக் மல்ல) மாணிக்க பொதியில் கிடைத்த பணம் என்றும் கூறி கதை விட்டனர்.
இப்படி செல்வாக்குடன் அதிகாரத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி கடும் விமர்சனத்துக்கு இலக்காகியதால் மக்களை ராஜபக்ஸ அராஜக ஆட்சியில் இருந்து மீட்டு மக்களுக்கு நல்லாட்சி தருவதாக மைத்திரி-ரணில் இணைந்து தேர்தலில் களமிறங்கி அதிகாரத்தையும் கைப்பறினார்கள்.
அன்று அவர்களுக்கு மறை முகமாக ஜேவிபி. ஆதரவு கொடுத்தது. தமது வேட்பாளரை போட்டியிலிருந்து தவிர்த்துக் கொண்டது. தமிழ் மக்களும் இவர்களையே ஆதரித்திருந்தார்கள். தமிழ் அரசியல் தலைமைகளும் இதற்கு வக்காளத்து வாங்கி இருந்தன.
நல்லாட்சி தருவதற்கு ஒன்று பட்டிருந்த ஜனாதிபதி மைத்திக்கும் பிரதமர் ரணிலுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது. இது மத்திய வங்கி ஆளுநர் நியமனம், மத்திய வங்கிக் கொள்ளை என்பவற்றில் உச்சம் தொட்டது. இந்த நெருக்கடியில் ராஜபக்ஸாக்கள் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமது அதிகாரத்தை நிலை நாட்டி அரசுக்கு அச்சுறுத்தல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
2015 தேர்தலில் தான் தோற்றுப் போய் இருந்தால் ராஜபக்ஸாக்கள் தன்னை ஆறடி மண்ணுக்குள் குழிதோன்றிப் புதைத்திருப்பார்கள் என்று சொன்ன மைத்திரி ரணிலைத் துரத்திவிட்டு பிரதமர் பதவிக்கு தனது எதிரி ராஜபக்ஸாவைக் கொண்டு வந்தார். ஆனால் சட்டம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் ரணில் பிரதமராக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் லடாய் தொடர்ந்தது.
இந்த நேரத்தில் மொட்டுச் சின்னத்தில் கட்சி துவங்கிய ராஜபக்ஸாக்கள் அதன் ஊடாக தமது அரசியல் இருப்பையும் அதிகாரத்தையும் தேர்தலுக்கு முன்னரே நாட்டில் நிச்சயப்படுத்தி இருந்தனர். அன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் அடுத்த அரசு அமைப்பது மீண்டும் ராஜபக்ஸாக்கள்தான் என்பது இதில் உறுதியாகி இருந்தது.
மூன்றாவது முறையாகவும் மஹிந்த ராஜபக்ஸாக்கள் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்தலில் நிற்கமுடியாத நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் கோட்டாபே ராஜபக்ஸ மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மிகுந்த நம்பிக்கையுடன் களத்துக்கு வந்தார்.
முழுக்க முழுக்க இனவாதத்தையும் சிறுபான்மையினருக்கு எதிரான கோசங்களையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்து இவர் அதிகாரத்துக்கு வந்தார். இன விகிதாசாரத் தேர்தலில் சாத்தியம் இல்லை என்ற மாயை கலைந்தது. சிங்கள மக்களின் வாக்குகளினால் கோட்டாவுக்கு மிகப் பெரும் வெற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்தது. பொதுத் தேர்தலிலும் பெரு வெற்றி. 140 வரை ஆசனங்கள்.
சுவரில் எரிந்த பந்து திருப்பி வருவது போல குறுகிய காலத்தில் இந்த கோட்டாபே ராஜபக்ஸ அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். நாட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் ஒட்டு மொத்த ராஜபக்ஸாக்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அன்று தலைமறவு வாழ்க்கையை நடாத்த வேண்டி இருந்தது. கோட்டா நாட்டில் இருந்து தப்பியோடினார். எனவே கோட்டா பேரின சமூகத்துக்கு குறிப்பாக சிங்கள சமூகத்துக்கு கொடுத்த எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்தப் பின்னணியில் குறுக்குவழியில் அதிகாரத்துக்கு வந்த ரணில் ஜனாதிபதியாகி நாட்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளை நாம் விரிவாக இங்கு பேச வேண்டியதில்லை. அவை மக்கள் மிக அண்மைய நாட்டிகளில் பார்த்த காட்சிகள். ரணில் ஆட்சியில் ராஜபக்ஸாக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஆனாலும் அவர்களது அரசியலுக்கு மாபெரும் பின்னடைவு வீழ்ச்சி மட்டும் உறுதியாகி இருந்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு பறந்தன. மக்கள் இளவு காத்த கிளிகளாகத்தான் தொடர்ந்தும் ஏமாளிகளாக வாழ வேண்டி வந்தது. மேற்சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் அதிகாரத்துக்கு வருவதற்காக ஆட்சியாளர்கள் மக்களுக்குக் காட்டிய ஏமாற்று வேலைகள் என்பது இப்போது மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது பதவிக்கு வந்திருக்கின்ற அனுர தரப்பு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் பற்றிப் பார்ப்போம். அனுர குமார அல்லது என்பிபி.யின் இந்த வாக்குறுதிகளை இரண்டு பாகங்களாக எடுத்துக் கொள்வோம். முதலில் நாட்டில் நடந்த கொலைகள், கடந்த கால சட்டவிரேத நடவடிக்கைகள் அல்லது மோசடிகள்-முறைகேடுகள். இரண்டாவது பொளாதார ரீதியில் மக்கள் நல்வாழ்வுக்கு அவர்கள் குறிப்பாக என்பிபி. முன்மொழிந்த திட்டங்கள்-வாக்குறுதிகள் என்று இவற்றை எடுத்துக் கொள்வோம்.
நாம் சொல்லி இருக்கும் இரண்டாவது தலைப்புப் பற்றி இங்கு எதுவுமே பேசப் போவதில்லை. அவை பற்றிப் பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. அப்போது அது பற்றிப் பார்ப்போம். தற்போது இவர்கள் பேசிய கடந்த கால அரசியல் கொலைகள், சட்ட விரோத நடவடிக்கைகள், மோசடிகள், முறைகேடுகள் என்பனவற்றிற்கு என்ன சட்ட நடவடிக்கைகள் அல்லது முன்னேற்றங்கள் என்பது பற்றிப் பார்ப்போம். இதில் முக்கியமாக ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார்.?
லசந்த விக்கிரமதுங்ஹ படுகொலை குற்றவாளி யார்? எகனலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம்.! தாஜூதீன் படுகொலை. லலித், குகன் விவகாரம். கீத் நெயார் மற்றும் போத்தல ஜயந்த மீதான தாக்குதல்கள். இவற்றுக்கான சாட்சிகளின் படுகொலைகள்-ஆவனங்கள்-கோவைகள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்-விவகாரங்கள் முக்கியமானவை. மேலும் அரச அனுசரனையுடன் கடந்த காலங்களில் நடந்த நிதி மோசடிகள் கொள்ளைகள். இதில் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் வைபாகம் என்பன அடங்குகின்றன.
இந்தக் கட்டுரைக்கான குறிப்புக்களைத் தயாரிக்கின்ற போது ஜனவாரி எட்டாம் (08.01.2025) திகதி. புகழ் பெற்ற பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்ஹ படுகொலை செய்யப்பட்டு பதினாறு வருடங்கள். இப்படியான ஒரு நாளில் கொழும்பு அத்திட்டடிய என்ற இடத்தில் பாதையை மக்கள் கடந்து போவதற்காக தனது காரை நிறுத்திக் கொண்டிருக்கின்ற போது அவரை மேட்டார் சைக்கில்களில் பின்தொடர்ந்த கொலையாளிகள் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கியதால் லசந்த படுகொலை செய்யப்படுகின்றார்.
இந்த ஆயுதம் ‘போல் கன்’ என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்தப் படுகொலைக்கு அவர் ஆட்சியாளர்களின் ஊழல்கள் பற்றி ஊடகங்களில் எழுதி வந்த செய்திகள்-தகவல்கள்தான் பிரதான காரணமாக இருந்தது. இதற்கு முன்னரும் அவருக்கு தொந்தரவுகள்-அச்சுறுத்தல்கள் இருந்து வந்தது.
இதில் குறிப்பாக மிக் விமான வியாபாரத்தில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி பற்றி லசந்த வெளியிட்ட தகவல்கள் அடிப்படைக் காரணமாக இருந்தது. அவை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தனிப்பட்ட ரீதியில் இதில் நமக்கும் தினக்குரல் ஞாயிறு வார இதழ் மற்றும் லசந்தவுக்கும் ஒரு முக்கோண தொடர்பு-முடிச்சி இருக்கின்றது. மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஸ்ரஃபுடன் இந்தக் கட்டுரையாளனுக்கு இருந்த தொடர்பினால் லசந்தவுடன் நமக்கும் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டது. அதனால் சில தமிழாக்கங்களை நாம் அவருக்கு அவ்வப்போது செய்து கொடுத்திருக்கின்றோம்.
அந்த பின்னணியில் மிக் விமானக் கொள்ளை தொடர்பாக ‘சுரநிமல’ என்ற புனைப் பெயரில் லசந்த விக்கிரமதுங்ஹ எழுதும் ஒரு கட்டுரை தொடர்ப்பான முக்கிய தகவல்கள் அடங்கிய குறிப்புக்கள் முன்கூட்டி நமக்குக் கிடைத்தது. அதனால் அன்று ஆங்கில சிங்கள மொழிகளில் மிக் விமானக் கொள்ளை தொடர்பான பரபரப்பான தகவல்களை லசந்த தனது பத்திரிகைகளில் வெளியிட்ட-சொன்ன அதே வாரத்தில் – நாளில் நாமும் தினக்குரல் ஞாயிறு வார இதழுக்கு ‘மிக் விமானக் கொள்ளை’ என்ற பெயரில் ஒரு கட்டுரையயை எழுதி அனுப்பி இருந்தோம்.
இதுதான் நாம் தினக்குரல் வார இதழுக்காக எழுதிய முதல் கட்டுரையும் கூட. அது அன்று முக்கிய கட்டுரையாக பிரசுரமாகும் என்று நாம் நம்பி இருக்கவில்லை. என்றாலும் தினக்குரல் ஞாயிறு வார இதழ் நமது கட்டுரையை பிரதான கட்டுரையாக அன்று வெளியிட்டிருந்தது. அதுவரைக்கும் எந்த ஒரு தமிழ் ஊடகமும் மிக் விமானக் கொள்ளை பற்றிப் பேசி இருக்கவில்லை.
இன்று நாம் நமது தினக்குரல் வார இதழுக்கு ஆயிரக்காணக்கான கட்டுரைகளை இதுவரை எழுதி வந்திருக்கின்றோம். அந்த வகையில் நாம் தினக்குரலில் பிரவேசிப்பதற்குக் காரணமாக இருந்தவர் லசந்த விக்ரமதுங்ஹ தான் என்பதனை அவரது படுகொலையின் பதினாறாவது ஆண்டில் (16) ஒரு முறை நினைவு படுத்துகின்றோம்.
இந்த அரசு லசந்த விக்ரமதுங்ஹ மற்றும் நாம் மேற்சொன்ன முக்கியமான படுகொலைகள் பின்னணில் இருந்தவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்குவது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இது அவர்களது தேர்தல் பரப்புரைகளில் முக்கிய பேசு பொருளாக இருந்த ஒரு விடயம் என்பதனை நாம் ஒரு முறை திரும்பவும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
மக்களும் இதனைத்தான் ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இதுவரை அதிகாரத்துக்கு வந்த அனைவரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சாட்சிகளை மறைப்பதிலும்-அழிப்பதிலும்தான் மூடி மறைப்பதிலும்தான் ஆர்வமாக செயலாற்றி வந்திருக்கின்றார்கள். அதனால் அனுர-என்பிபி. இது விடயத்தில் பொது மக்களுக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளை உரிய காலத்தில் செய்து முடிப்பதில் சாவல்களைச் சந்திப்பார். மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால்தான் சட்ட மா அதிபருடன் இது தொடர்பான ஒரு முக்கிய சந்திப்பை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அனுர நடாத்தி இருக்கின்றார். பின்னடைவுக்கு பொலிஸாரின் தாமதம் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
நாம் அறிந்த வரை மூடி மறைத்த அல்லது குற்றத்துக்குத் துணை நின்ற அதே அதிகாரிகள் அனுர மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் ஆர்வமில்லாது செயலாற்றுகின்றார்கள் என்பது நமது கணிப்பு. குற்றிவாளிகளைக் கண்டறிந்து தண்டனை என்பது குளிப்பதற்கு இழுத்துச் செல்லப்படுகின்ற நாயின் நிலை என்று கூட நாம் இதனைச் சொல்ல முடியும். அதே போன்றுதான் அரசியல்வாதிகளின் நிதி மோசடிகள் கொள்ளைகள் தொடர்பான விவகாரமும் இருக்கின்றன.