மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்நபர் ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். போவாய் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் அமோல் வக்மாரே நடத்திய துப்பாக்கிசூட்டில் ரோஹித் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார், அதில் சில கோரிக்கைகள் மற்றும் சில நபர்களிடம் பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறை அந்த இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் கதவை திறக்குமாறு அவரிடம் கூறியும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து, அப்பகுதியில் அதிகமான போலீஸார் வரவழைக்கப்பட்டனர், ரோஹித் ஆர்யா இருந்த இடத்துக்குள் போலீஸார் கழிவறை வாயிலாக நுழைந்தனர்.
17 குழந்தைகள்மற்றும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அனைத்து குழந்தைகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

என்ன நடந்தது?
போவாய் மரோல் பகுதியில் மஹாவீர் கிளாசிக் எனும் கட்டடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அவரை காவலில் எடுக்க முயன்றபோது அந்நபர் போலீஸாரை தாக்கியதாக காவல்துறை கூறுகிறது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் அமோல் வக்மாரே நடத்திய பதில் துப்பாக்கிசூட்டில் அந்நபர் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடிப்பு சம்பந்தமான ஆடிஷன் எனக்கூறி இந்த சிறுவர்கள், சிறுமிகள் ரோஹித் ஆர்யாவால் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் மும்பை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த செய்தி வெளியானதையடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலரும் அப்பகுதியில் திரண்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது, மும்பையில் இதனால் பயம் மற்றும் பதற்றம் ஏற்பட்டது.
மதியம் 3.00-3.30 மணியளவில் குழந்தைகள் அக்கட்டடத்தின் கண்ணாடி அறை வாயிலாக உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் அதிகளவிலான போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்நபர் யார், அவரின் நோக்கம் என்ன என்பதையும் போலீஸார் அறிந்துகொள்ள முயன்றனர். மேலும், குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் இரண்டரை மணிநேரமாக போலீஸ், மற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், அந்நபர் ஆக்ரோஷமாக இருந்ததால், அவர் கதவை திறக்க தயாராக இல்லை.
தொடர்ந்து அவருடன் பேசுவதற்கு போலீஸார் முயன்றனர்.
போலீஸுடனான பேச்சுவார்த்தையில் ரோஹித் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் போலீஸார் கூறியுள்ளனர். எனினும், அந்நபர் அதை ஏற்கவில்லை.
இதையடுத்து, கழிவறை ஜன்னல் வாயிலாக அந்த அறைக்குள் போலீஸார் நுழைந்தனர்.
இதன்பின், போலீஸார் அங்கிருந்த முதியவர் ஒருவரின் உதவியுடன் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
காவல்துறை கூறியது என்ன?
குழந்தைகளை அடைத்து வைத்திருந்த நபரின் பெயர் ரோஹித் ஆர்யா. அவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர்.
அந்நபரிடமிருந்து ஒரு ஏர் கன் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு துணை ஆணையர் தத்தா நலவாடேவும் உடனடியாக சென்றார். அவர் ஊடகங்களிடம் பேசுகையில், ”இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது. ஒருபுறம், அவரிடம் குழந்தைகள் சிக்கியுள்ளனர்,
மற்றொருபுறம் குற்றம் சாட்டப்பட்ட நபர் இருக்கிறார். இறுதியில், மும்பை காவல்துறை வழியை கண்டறிந்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்,” என்றார்.
எனினும், ரோஹித் முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், போலீஸ் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறுகிறது.





