100 மில்லியன் இழப்பீடு கோரும் KOTA  GO HOME கோஷத்தின் முன்னோடி

சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தி பொலிஸார் தன்னை அநீதியான முறையில் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் தன்னை பிணையில் விடுதலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ஜி.சந்தன குமார, பொலிஸ் மா அதிபர், ஏத்கால பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தன்னை கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பன மீறப்பட்டுள்ளதாகவும் அனுருத்த பண்டார தனது மனுவில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டா கோ ஹோம் போராட்ட வாசகத்தை இணையத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக அனுருத்த பண்டாரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு வெளிநாட்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதுடன் பின்னர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது.

Previous Story

ராஜபக்ஷாக்களை விரட்டலாம்- சரத் என் சில்வா

Next Story

வரி உயரும் வேறு வழியில்லை - அலி சப்ரி