திடீரென வெடித்துச் சிதறிய எத்தியோப்பிய எரிமலை! அபுதாபி சென்ற விமானம் ரத்து!
எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது.
இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பலின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதால், கண்ணூரில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் 6E 1433 பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், பறப்பின் நடுப்பகுதியில் இருக்கும்போது, எத்தியோப்பிய எரிமலை சாம்பல் மேகங்களால் வான்வெளி பாதிக்கப்படத் தொடங்கியதாக சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் உடனடியாக விமானத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டு, அகமதாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஹெய்லி குப்பி எரிமலை வெடித்ததில், சாம்பல் மேகங்கள் 10 கிமீ முதல் 15 கிமீ உயரத்தில் வளிமண்டலத்தில் பரவி, செங்கடல் வழியாக கிழக்கு நோக்கி நகர்கின்றது.

இந்தச் சாம்பல் ஓமன், ஏமன் வழியாக இந்தியாவின் வடக்கு வான்வெளியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பல் மேகங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைந்தால், டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய வடக்கு பகுதியில் பறக்கும் விமானங்களின் இயக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், வான்வெளி நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆகாசா ஏர் வெளியிட்ட அறிவிப்பில்,” எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்ததன் தாக்கம் இந்திய வான்வெளியில் இருக்கக்கூடும். எங்கள் அனைத்து விமானங்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
தேவையான மாற்றங்கள் அனைத்தும் சர்வதேச விமான விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மை.” என கூறியுள்ளது. இதேபோல் இண்டிகோ நிறுவனமும் தனது விமானங்கள் பாதுகாப்பாக இயங்க தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அகமதாபாத் சென்றடைந்த பயணிகளை மீண்டும் கண்ணூருக்கு அழைத்து செல்ல மாற்று விமான சேவை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெடித்துச் சிதறியுள்ள ஹெய்லி குப்பி எரிமலை சுமார் 10,000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பால் பெரிய அளவில் பாறைத் துகள்கள், புகை, சாம்பல் ஆகியவை வான்வெளியில் பரவின. இது கிழக்கு ஆபிரிக்கா, செங்கடல், வளைகுடா நாடுகள் ஆகியவை வழியாக பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.





