ஹீரோவும் வில்லனும் வம்பனும் ஒருவனே!

-நஜீப் பின் கபூர்-

சினிமாப் படங்களில் அவ்வப்போது சில நடிகர்கள்  பல பாத்திரங்களில் நடித்து வந்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அது போன்றுதான் இன்று நமது அரசியல் அரங்கிலும் அதிகார வர்க்கத்தினர் இது போன்ற பாத்திரங்களில் நமக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதற்கான கதை வசனம் முற்றிலும் ராஜபக்ஸாக்களுடையது என்பது நமது அவதானமாக இருக்கின்றது. இதில் ஜனாதிபதி ரணில் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் அனைத்து வார்த்தைகளும் கிளிப் பிள்ளை பார்க்கின்ற வேலையாகத்தான் இருக்கின்றன. இதனால் இப்போது நாட்டில் ரணிலுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் அலை நாட்டில் தோன்றி இருக்கின்றது. இதனால் ராஜபக்ஸாக்களுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மமதியும் கிடைத்திருக்கின்றது.

நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இப்போது ராஜபக்ஸாக்கள் நல்லவர்கள் ரணில்தான் மிகவும் கொடூரமானவர் என்று ஒரு மன நிலையும் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது. அல்லது அப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது தவறான ஒரு கணக்கு. ராஜபக்ஸாக்கள் தேர்தலைத் தள்ளிப் போட்டது தவறு நாங்களும் தேர்தலைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கதை விடுகின்றார்கள். அப்படித் தேர்தல் நடந்தால் நாங்கள் அதில் மிகப் பெரிய வெற்றியைப் பொறுவோம் என்றுவேறு அவர்கள் தற்போது பேசுகின்றார்கள். அவர்களது இந்தக் கதைகள் வஞ்சகமானது. இதனை மக்கள் நம்பக் கூடாது என்பதுதான் நமது கருத்து.

அதே போன்று மின் கட்டணம் அதிகரிப்பு அதிகரிக்கபட்ட வரிகள் பொருட்களின் விலையேற்றங்கள் என்பனவும் பிழையானது இதனைத் தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மஹிந்த ராஜபக்ஸ தற்போது கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். ரணிலை பதவிக்குக் கொண்டு வந்ததும் அந்தப் பதவியைப் பாதுகாத்து அதன் மூலம் தம்மை காத்துக் கொள்வதும் அவரை இயக்குவதும்  இந்த ராஜபக்ஸாக்களும் மொட்டுக் கட்சியினரும் தான். எனவே அவர்களின் இந்த கண்கட்டி வித்தைகளை மக்கள் ஒரு கணமேனும் மறந்து செயலாற்றக் கூடாது என்பதும் மக்களுக்கான நமது அறிவுருத்தலாகும்.

மக்களுக்கு தொல்லை கொடுப்பதும் சிரமங்களுக்கு ஆளாக்குவதும் இந்த ரணில்தான் என்ற தொனியில் ராஜபக்ஸாகள் இந்தக் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பும் சம நேரத்தில் இனப் பிரச்சினைக்கு குறிப்பாக சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களுக்குத் தீர்வு என்று ரணில் சொன்ன போதும் இவை இரண்டுமே நடக்காத காரியங்கள். இவை வண்ணக் கனவுகள் என்ற தலைப்பில் அந்த நாட்களிலே நாம் எமது வார இதழில் அடித்துச் சொல்லி இருந்தோம்.

தேர்தலை கடைசி நேரத்தில் குறிப்பாக ஏற்கெனவே அறிவிப்புச் செய்திருந்தது போல் 2023 மார்ச் ஒன்பதாம் நாள் தேர்தல் நடந்தாலும் இவர்கள் இந்தத் தேர்தல் முடிவுகளை சொல்ல மாட்டார்கள். அந்த இறுதி நேரத்தில் கூட இவர்கள் இந்தத் தேர்தலைக் குழப்பியடிக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நாம் தொடர்ந்து சொல்லி வந்திருந்தோம் என்பது நமது வாசகர்களுக்கு நினைவில் இருக்கும். அதுதான் இப்போது அரங்கேரிக் கொண்டிருக்கின்றது.

இவற்றை நாம் உறுதியாக எப்படிச் சொல்லி வந்தோம் என்றால் அதன் இரகசியம் இதுதான். தேர்தல் நடந்தால் அது ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக இருக்க மாட்டாது. அப்படிப்பட்ட ஒரு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும் அதன் முடிவுகள் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலுக்கும் ஆளும் தரப்பில் இருக்கின்ற  மொட்டுக் கட்சிக்கும் அதற்குப் பின்னர் அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு நிலை ஏற்படும். மக்கள் வீதியில் இறங்கி ஆட்சியாளர்களை துரத்தியடிக்கின்ற நிலை அடுத்த கணமே ஏற்படும். சர்வதேச மட்டத்திலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாளர்களுடன் கொடுக்கல் வாங்கள்களைச் செய்ய அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

எனவே 2023 உள்ளூராட்சித் தேர்தல் என்பது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதிக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் இறுதி நாளாக அமைந்து விடும். அப்போது  கோட்டாவுக்கும் மஹிந்தவுக்கும் ஏற்பட்ட நிலைதான் ரணிலுக்கும் மொட்டுக் கட்சினருக்கும் வரும். இது எங்கு போய் முடியும் என்று கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு  கட்டமாக இது இருக்கும். இதனை தற்போது அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் நன்றாக புரிந்தும் உணர்ந்தும் வைத்திருப்பதால்தான் இந்தத் தேர்தலை தவிர்ப்பதில் அவர்கள் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை இப்படி எவ்வளவு காலத்துக்குத்தான் தடுத்துக் கொண்டு இந்த ஜனாதிபதியும் மொட்டு அரசாங்கமும் பதவியில் இருக்க முடியுமோ என்பதும் தெரியாது. இதனை சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. ஐக்கிய அமெரிக்க செனட் சபைகூட அரசாங்கத்தின் இந்தப் போக்கை வன்மையாக தற்போது கண்டித்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளும் ஆட்சியாளர்களின் இந்த நிலைப்பாட்டை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.

யாப்பு சட்டம் நீதி என்பவற்றை விட எனக்கு நாடுதான் முக்கியம் என்று இப்போது ஜனாதிபதி ரணில் புதிய கதை சொல்லி வருகின்றார். ஆனால் யதார்த்தம் என்னவென்றால்  பதவியைத் தொடர தனக்கு இவையெல்லாம் தடையாக இருக்கின்றது அதானால்தான் மேற்சொன்ன அனைத்தையும் நான் குப்பையில் போட்டு விட்டேன் என்பதுதான் அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. ரணிலின் இந்த வார்த்தைகள் கூட அவரது சொந்த வார்த்தைகள் அல்ல என்பது நமது கணக்கு. அது கூட ராஜபக்ஸாக்கள் எழுதிக் கொடுத்தவை. அதனைத்தான் அவர் ஊடகங்களுக்கு கிளிபோல இப்போது சொல்லி வருகின்றார். நம்மைப் பொறுத்தவரை இப்போது இலங்கை அரசியல் அரங்கில் ரணில் என்ற ஒரு மனிதனே கிடையாது. அவர் நூலில் ஆட்டப்படுகின்ற பொம்மை. அவ்வளவுதான். இதுதான் தற்போதய இலங்கை அரசியல்.

எங்கே தேர்தல்? அப்படி ஒன்று நாட்டில் கிடையாது. பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தல் கிடையாது என்று ஜனாதிபதி ரணிலின்  அறிவிப்பானது ஒரு ஜனநாயக நாட்டுத் தலைவர் இது வரை உலகில் எங்கும் பகிரங்கமாக பேசாத ஒரு வார்த்தை. அப்படி ஒரு வாசனத்தைப் பேசி அவர் மிகப் பெரிய ஜனநாயக விரோதியாகவும் கோமாளியாகவும் மட்டமான ஒரு மனிதனாகவும் தன்னை இனம் காட்டி இருக்கின்றார். எனவே ராஜபக்ஸாக்கள் சில சமயங்களில் ரணிலை வம்பனாகவும் வில்லனாகவும் கோமளியாகவும் பாவித்து காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேலையை இவர்களால் எவ்வளவு நாட்களுக்கு செய்ய முடியும் என்பதனை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்தக் கதை வசனங்களை உற்று நோக்கினால் ராஜபக்ஸாக்களின் மிகவும் நெருங்கிய சகாக்கள் தேர்தலைத் தள்ளிப் போட்டது குறித்து இதுவரை ஆதரவாக எந்தக் கருத்துக்களையும் ஊடகங்களுக்குப் பேசாமல் தவிர்த்து வருகின்றார்கள். அவர்களும் தங்களும் தேர்தலை எதிர்பார்த்துத்தான் இருப்பதாகவும் தேர்தலைத் தள்ளிப் போட்டது தவறு என்று கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ரணில் விசுவாசிகள்தான் இந்த நேரத்தில் தேர்தல் தேவை இல்லை என்ற பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதுகூட நாடகம்.

அத்துடன் தேர்தலுக்கான நிதியை விடுவிக்காமல் தவிர்ப்பது தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழு முன் அழைத்து விசாரிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கையை ஆளும் மொட்டுத் தரப்பினர் எதிர்க்கின்றார்கள். இதிலிருந்து அவர்கள் தேர்தலுக்கு தாம் ஆதரவு என்ற கதை முற்றிலும் பொய்யானது. அவர்களும் தேர்தலை தவிர்க்கவே முனைக்கின்றார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

தேர்தல் பற்றிய இந்த ஆட்சியாளர்களுக்கான அச்சம் ஜேவிபி போன்ற கட்சிகளை ஜே.ஆர். தடை செய்தது போல ஒரு நிலை மீண்டும் ரணில் ஏதேனும் நொண்டிச் சாட்டை வைத்துச் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு ஜேவிபி மீதான பயம் ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அரச சர்வதேச கணிப்புகள் கூட ஜேவிபின் செல்வாக்கை உறுதி செய்திருக்கின்றன. அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் கடுமையாக நடந்து கொள்வார்கள். தமது சொத்துக்கள் உடைமைகள் அரசியல் இருப்புக்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என்ற அச்சயம் தேர்தலை அரசு தவிர்ப்பதற்குக் காரணம் என்று ஜேவிபி தலைவர்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் பேசி வருகின்றார்கள்.

இப்போது மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கேட்டு போராடுகின்ற போது அவர்களை ஆட்சியாளர்கள் கொன்று குவிக்கின்ற ஒரு நிலை நாட்டில் ஏற்ப்பட்டிருக்கின்றது. வாக்குரிமை கேட்டுப் போராட்டம் நடாத்திய போது இப்போது ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். அத்துடன் அவர் என்பிபி கட்சியின் ஒரு வேட்ளாளரும் கூட. டசன் கணக்கானவர்கள் காயப் பட்டிருக்கின்றார்கள். இந்தச் செய்தி இன்று உலகம் பூராவும் சென்றிருக்கின்றது. இது ஆட்சியாளருக்கு ஆரோக்கியமான ஒரு செய்தியாக ஒரு போதும் அமைய மாட்டாது.

ஏற்கெனவே இலங்கை ஆட்சியாளர்கள்

மோசடிக்காரர்கள்

ஊழல் பேர்வழிகள்

நேர்மையற்றவர்கள்.

போர்க் குற்றவாளிகள்

அரசியல் வஞ்சகக் காரர்கள்

நம்பத் தகுந்தவர்கள் அல்ல

பெற்ற கடனைக் கூட திருப்பித் தராதவர்கள் என்றெல்லாம் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே நிலுவையில் இருக்கின்ற இந்த நேரத்தில் இப்போது இங்கு ஒரு பாசிஷ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது என்தை உலகம் அவதானிக்கின்ற நிலை நாட்டில் இருக்கின்றது. இதற்கு சர்வதேசம் ஒருபோதும் அங்கிகாரம் கொடுக்காது என்பதும் தெளிவான விடயம்.

தன்னிறைவு மிக்க ஒரு பொருளாதாரத்தை வைத்து ஆட்சி செய்கின்ற ஒரு நாட்டில் இப்படி எல்லாம் நடந்தால் மக்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஒரு சில ஆண்டுகள்வரையேனும் தமது அரசியல் இருப்பை ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியும். ஆனால் அடுத்த வேலை சாப்பாட்டுக்கே சர்வதேசத்திடம் கை நீட்டிக் கொண்டிருக்கின்ற நமது ஆட்சியாளர்கள் இப்படியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடன் எப்படித் தமது பதவிகளைத் தொடர முடியும் என்பதுதான் புதிராக இருக்கின்றது. இந்த படம் இன்னும் நெடுநாளைக்கு நகர மாட்டாது என்பது உறுதி.

ஜனாதிபதி தன்னிடம் இருக்கின்ற நிதி அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தேர்தலுக்கு பணம் தரமாட்டேன் என்று தற்போது மிரட்டிக் கொண்டு வருகின்றார். தற்போது அறிவிப்புச் செய்யபட்டிருக்கின்ற இந்த  உள்ளூராட்சித் தேர்தலை அரசு வன்முறையால் தடுத்து நிறுத்தினால். அதற்கு மக்கள் மௌனமாக இருந்து இடம் கொடுத்தால். ரணில் மற்றும் ராஜபக்ஸாக்கள் உயிருடன் இருக்கும் வரை இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும் கிடையாது. பொதுத் தேர்தலும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் நாட்டில் மிகப் பெரியதொரு கெந்தளிப்பு நிலை ஏற்படவும். மே ஜீன் மாதமளவில் உணவுப் பொருட்களக்கு மிகப் பெரும் தட்டுப்பாடுகள் வருவதற்கும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஸ்தீரமில்லாத ஒரு அரசை வைத்திருக்கின்ற மக்கள் விரோத  ஆட்சியாளர்களுக்கு உலகில் யார்தான் உதவப் போகின்றார்கள்.

இதற்கிடையில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியுடன் பேசி தேர்தலுக்கு ஐந்து பில்லியன் பணம் பெற்றுக் கொடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடாத்துவது பற்றிய ஒரு கதையை புதிதாகச் சொல்லி வருகின்றார். ஆனால் தேர்தலை எக்காரணம் கொண்டும் நடாத்துவதில்லை என்று ராஜாக்களுக்கு பெரியவர் வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் ஒரு கதை உலாவி வருகின்றது.

நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்தூள் பூசி, புழுவை உடலுக்குள் செலுத்திய கணவன்

Next Story

மயோனுக்கு எதிரான தீர்ப்பு!