-நஜீப் பின் கபூர்-
நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்
விளம்பரங்களுக்கு நடிகர்கள் நடிகைகள் மட்டுமல்ல விளையாட்டு வீரர்களையும் பிரபல்யங்களையும் பணம் கொடுத்து வாங்குவது சம்பிரதாயமான ஒரு பாரம்பரிய ஏற்பாடுதான்.
இதற்குப் புறம்பான அம்சங்களைப் பாவித்தும் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதையும் நாம் ஊடகங்களில் பரவலாகப் பார்த்திருக்கின்றோம். அது பற்றி நமக்கு எந்தக் கருத்துக்களும் சொல்லமுடியாது.
அவை அந்த நிறுவனம் அல்லது அதில் சம்பந்தப்படுகின்றவர்களின் விருப்பு வெறுப்பை பொறுத்த விடயங்கள். அந்த வரிசையில் கடந்த திங்கள் சுமந்திரன்-ஹக்கீம் வடக்குக் கிழக்குத் தழுவி விடுத்த ஹர்த்தால் முற்றும் முழுதுமான ஓர் மாகாண சபைக்கான தேர்தலுக்கான நவீன விளம்பரம் இது என்பது எமது வலுவான வாதமாகும். இதனை தமிழ் முஸ்லிம் சமூகங்களும் நன்றாக அறிந்துதான் வைத்திருக்கின்றன.
ஆனால் இதில் மறைக்கப்பட்ட பக்கங்கள்-இரகசியங்களை பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதுதான் நமது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்ற தகவல்கள் விளக்கங்கள் எவ்வளவு தூரம் நியாயமானது-ஏற்புடையது என்பதனை தமிழ் முஸ்லிம் சமூகங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த சுமந்திரனும் ஹக்கீமும் நல்ல அரசியல் சோடிகள். நல்ல அரசியல் சோடிகள் என்பதனை விட முன்னயவர் நல்ல சட்டவாதக்காரர் அடுத்தவர் நல்ல அரசியல் வியாபாரி என்பதும் எமது கணிப்பு.!
இவர்கள் தாம் சார்ந்த சமூகங்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்கள் இருவரும் கடந்த தேர்தல்களில் எந்தளவுக்கு தாம் சார்ந்த மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் வடக்கில் சுமந்திரனை தமிழர்கள் தூக்கி வெளியே வீசி விட்டார்கள்.
ஹக்கீம் நூலிழையில் தப்பி பிழைத்திருக்கின்றார். வழக்கமாக ஒரு இலட்சம், தொன்நூறு ஆயிரம் என்று எடுப்பவர் இந்த முறை வெறும் முப்பதாயிரம் விருப்பு வாக்கு என்றளவுக்கு சரிந்து மூக்குடைபட்டார்.
நாம் கடந்த வாரம் வருகின்ற மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் வருகின்றது என்று ஒரு குறிப்பை பதிந்திருந்தோம்.
அடுத்த நாள் கட்சிக் கொரடாவும் செல்வாக்கான என்பிபி. அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நமது தேர்தல் செய்தியை உறுதி செய்து ஒரு ஊடகச் சந்திப்பில் கருத்துச் சொல்லி இருந்தார்.
எனவே மாகாணசபைத் தேர்தல் உறுதி. என்பது இந்த தமிழரசு சுமந்திரனும் மு.கா. ஹக்கீமுக்கும் நன்றாகத் தெரியும். எனவே அவர்கள் தமது தேர்தல் பரப்புரையை துவங்குவதிலும் குறைகான முடியாது. அதற்கான வியூகங்களை வகுப்பதும் கூட தவறில்லை.
இதனால்தான் ஒரு கல்லில் இரு பழங்களை பறிக்கின்ற முயறச்சியில் இந்த சோடிகள் இப்போது இறங்கி இருக்கின்றார்கள். தமிழ் முஸ்லிம் சமூகங்களின் உண்மையான நேசமுள்ள தலைவர்களாக இவர்கள் இருந்திருந்தால் வடக்குக் கிழக்கில் இந்த இரு சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் இருக்கின்ற முரண்பாடுகளை மனக்கசப்புக்களை இவர்கள் முதலில் களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதுதான் பொறுப்பு மிக்க தலைவர்களின் ஆரோக்கியமான பணி.
கல்முனை செயலகம் மட்டக்களப்பில் சில கிராம சேவர்கர் பிரிவுகளில் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் அதே போன்று அந்தப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம்களின் பல குறைபாடுகள் கோரிக்கைகளும் இருந்து வருகின்றன.
இவற்றை அல்லவா இவர்கள் முதலில் தீர்த்து சமூக ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். அவற்றைக் கண்டு கொள்ளாத இவர்கள் இந்த ஹர்த்தாலுக்கு மட்டும் கூட்டாக அழைப்பு விடுத்தது எதற்காக என்று தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும் முஸ்லிம் பிரதேசங்களில் பேசும்போது ஒருவிதமாகவும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் குறிப்பாக தமிழசுடன் பேசுகின்ற போது இந்த ஹக்கீம் ஓ நாயும் ஆட்டுக் குட்டிக் கதைபோல் நடந்து கொள்வதும் நாம் நன்கு பார்த்து வரும் காட்சிகள்தான்.
தனது அரசியல் பலத்தை கிழக்கில் காட்டினால்தான் அவர் தெற்கில் ஒரு பலமான அரசியல் தலைவராக மதிக்கப்படுவார் என்பது ஹக்கீமுக்குத் தெரியும். கிழக்கில் என்னதான் இவருக்கு எதிரான முஸ்லிம் சமூகத்தில் உணர்வுகள் மேலோங்கி இருந்தாலும் அங்குள்ள பிரதேசவாதமும் மு.கா.அரசியல் யாப்பும் ஹக்கீமுக்கு எஃகு வேலியாக நிற்கின்றது.
இந்தப் பின்னணியில் சுமந்திரன்-ஹக்கீம் வியூகங்களை நேரடியாக இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த தேர்தலில் தான் ஒரு இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெறுவேன் என்று சொன்ன சுமந்திரன் படுதோல்வி அடைந்தார்.
அதற்கு முன்னர் சம்பந்தன், மாவை என்போரை வைத்துக் கொண்டு இவர்தான் அந்தக் கட்சியை நகர்த்தி வந்தார். அதே நேரம் கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களுடன் இவர் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டிருந்தார்.
இந்த ஹர்த்தால் முற்றும் முழுதாக சுமந்திரன் வருகின்ற மாகாணசபைத் தேர்தலுக்கான பரப்புரைதான். தன்னை முதலமைச்சராக அவரே அறிவித்துக் கொண்டிருந்ததும் தெரிந்ததே. எனவே இவர் தனது தனிப்பட்ட ஒரு தேவைக்காகத்தான் இந்த ஹர்த்தால் அழைப்பைக் கொடுத்தார்.
இதனை தமிழ் மக்கள் நன்றாக அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுமந்திரனை அவர்கள் நிராகரித்திருக்கின்றனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேச சபைகளை வைத்துக் கொண்டுதான் இந்த ஹர்த்தாலை சுமந்திரன் வெற்றிகரமாக முன்னெடுக்கலாம் என்று நம்பினார்.
ஹர்த்தாலை அறிவிப்புச் செய்த போது தன்னை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஹீரோவாக்கின்ற எண்ணத்தில் அதனை இவர் தன்னிச்சையாக அறிவித்திருந்தார். ஹர்த்தால் தோற்றுப் போன நிலையில் இது தனது அறிவிப்பல்ல கட்சி முடிவு என்று கதை விடுகின்றார்.
ஆனால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் ஹர்த்தால் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கட்சி தலைவர் என்று சொல்லப்படும் சிரிதரன் இந்த ஹர்த்தால் தொடர்பாக வாயே திறக்கவில்லை. எனவே முற்றும் முழுதாக இது சுமந்திரனின் மாகாணசபைக்கான ஒரு தேர்தல் பரப்புரை. அது தோற்றுப் போன நிலையில் சட்டவல்லுணர் கைவிரிக்கின்றார்.
இந்த ஹர்த்தாலின் பின்னணியை ஆராய்கின்ற போது மு.கா. ஹக்கீமின் பூரண ஆதரவு இருந்தது. வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது மாகாணசபைத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் கிழக்கில் தமிழ் மக்களின் முதுகில் ஏறி சவாரி செய்கின்ற ஒரு முன்னோடி ஏற்பாடாகத்தான் ஹக்கீம் இந்த ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றார்.
நமது அவதானப்படி சம்பந்தன் ஆதரவுடன் கிழக்கில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கின்ற ஒரு இரகசிய ஏற்பாடும் இதன் பின்னணியில் இருக்கின்றது என்று நாம் உறுதியாக சொல்கின்றோம்.
ஹர்த்தாலுக்கு முன்னர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட ஹக்கீம் அது படுதோல்வி அடைந்த பின்னர் அது பற்றி இன்றுவரை வாயே திறக்கவில்லை.
தான் இதற்கு ஒத்துழைத்து மூக்குடைபட்டதை அவர் எங்கும் நாம் அறிய இதுவரை ஒத்துக் கொண்டதை காணவில்லை.
அதே நேரம் இந்த ஹர்த்தால் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை என்று அதன் ஏற்பாடாளர் சுமந்திரனே பகிரங்க ஊடகச் சந்திப்பில் ஏற்றுக்கொண்டார்.
சாணக்கியன் பலாத்காரமாகத்தான் கடைகள் திறக்கப்பட்டது என்று கூறுகின்றார். மட்டக்களப்பு மேயர் பலாத்காரமாக கடைகளை மூடவந்த இடத்தில் மக்கள் அவரை விரட்டியடித்த போது அவர் ஓடி ஒழித்ததையும் நாம் பார்த்தோம்.
கிழக்கில் முஸ்லிம்களின் மிகப்பெரிய நகரம் காத்தான்குடி. அந்த நகரமே மு.கா. கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் கூட ஹர்த்தாலை தோற்கடித்து ஹக்கீம் கண்ணத்தில் அறைந்திருக்கின்றார்கள். எனவே பொய் பேசுவது யார் உண்மை பேசுவது யார் என்பதனை எம்மைவிட களத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும்.
முன்பு சம்பந்தன் மற்றும் மாவையை ஏமாற்றி தமிழரசுக் கட்சியைத் தனது பிடிக்குள் வைத்திருந்த சுமந்திரன் இப்போது சிவஞானத்ததை வைத்துக் கொண்டு கட்சியைத் தனது பிடிக்குள் வைத்திருக்கின்றார். அவர் இந்தக் கட்சியின் செயலாளராக தன்னை சொல்லிக் கொண்டாலும் இந்த நியமனம் எப்படி வந்தது என்பது தொடர்ப்பில் நமக்குத் தெளிவில்லை.
அதே நேரம் தமிழரசுக் கட்சிக்குள் ஒரு இணக்கப்பாடான நிலை இல்லை என்பதனை அந்தக் கட்சியில் உள்ளவர்களே பகிரங்கமாக இன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஹர்த்தாலுக்கு நியாயம் சொல்கின்ற சுமந்திரன் வடக்கில் முத்தையன் கட்டுக் குளத்தில் ஒருவர் மூழ்கி இறந்தது இராணுவத்தின் கொலை என்று காட்ட முற்படுகின்றார்.
ஆனால் இது போதை வியாபாரம் மற்றும் இராணுவ முகாமில் இருந்தவர்களுக்கும் ஒரு தமிழ் கும்பலுக்கும் இடையில் நடந்த வியாபாரம் தான் இந்த இறப்பின் பின்னணி. இதில் சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்கள் மூன்றுபேர் கைது செய்யப்பட்ட பின்னணியில்தான் ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வைத்திய அறிக்கை இறந்தவர் ஒரு போதைப் பாவனையாளர் என்று உறுதி செய்திருக்கின்றது.
முதலில் ஹர்த்தால் கடந்த 15ம் திகதி என்று சொன்ன சுமந்திரன் பின்னர் 18ம் திகதி என்றும் அது முழு நாள் கடை அடைப்பு என்றார். தோல்வி என்று தெரிந்ததும் ஓரிரு மணி நேரங்களில் ஹர்த்தாலை முடித்துக் கொண்டதாக அறிவிப்புச் செய்திருந்தார்.
அதே நேரம் அவரது கையாட்கள் கடைகளை முடாவிட்டால் நாம் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாகவும் அச்சுறுத்தல் செய்திருந்ததை சமூக ஊடகங்களில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேவையில்லாத நேரத்தில்தான் இந்த ஹர்த்தாலுக்கு சுமந்திரன் அழைப்பைக் கொடுத்தார் என்பது தமிழ் மக்களின் கருத்தாக இருக்கின்றது.
இராணுவ முகாம்கள் வடக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அதற்கு நியாயம் பேசுகின்ற சுமந்திரன் தனது பாதுகாப்புக்கு அதே இரணுவத்தை துணைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இது பற்றி கேள்வி கோட்டால் அவர்கள் விசேட அதிரடிப்படையினர் என்று விளக்கம் சொல்ல வருகின்றார். இந்தக் கதை ஒரு நகைச்சுவையாகத்தான் மக்கள் பார்க்கின்றார்கள்.
2011 தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றம் வந்த சுமந்திரன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குறிய ஒரு அரசியல் தலைவராக செயல்பட்டவர் அல்ல. போராட்டத்தையும் பிரபாகரனையும்கூட இவர் அவ்வப்போது கொச்சைப்படுத்தி வந்திருக்கின்றார் என்பதனை தமிழ் மக்கள் அறிவார்கள்.
எனவே இந்த ஹர்த்தால் என்பது வடக்கு முதல்வராக தன்னை உறுதி செய்து கொள்வதற்காக ஒரு பிரச்சார நடவடிக்கை. அதே நேரம் தமிழரசுக் கட்சியின் துணையுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை வென்றெடுப்பதுதான் இந்த சுமந்திரன்-ஹக்கீம் என்போரின் நிகழ்ச்சி நிரல். இதனைத் தமிழர்களும் முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். என்று மீண்டும் கூறி வைக்கின்றோம்.
உண்மையிலே ஹர்த்தால் தேவை என்று எடுத்துக் கொண்டால் அனைத்துத் தமிழ் தரப்பினரின் ஒத்துழைப்பையும் சுமந்திரன் முதலில் பெற்றிருக்க வேண்டும்.
அவர்களுடன் பேசி ஒரு இணப்பாட்டுக்கு முதலில் வந்திருக்க வேண்டும். இதனை சுமந்திரன் தவிர்த்ததும் ஹர்த்தால் வெற்றி பெறும் அதன் மூலம் தான் தமிழர்களின் ஒரு ஹீரோவாகிவிடலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் அப்படி நடந்து கொண்டார்.
தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் என்றும் ஆர்வத்துடன் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வடக்குக் கிழக்கு பல்கலைக்கழங்க மாணவ அமைப்புக்கள் இது சுமந்திரனின் தன்னல விளம்பரம் என்பதனை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் தாம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முன்னரே கூறி விட்டனர்.
பாடசாலைகள் அரசங்கள் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் கடைகள் போன்றவை பெரும்பாலும் வழமை போல திறக்கப்பட்டிருந்தன. அதனால் சில மணி நேரங்களில் தான் ஹர்த்தாலை முடித்துக் கொள்வதாக பகிரங்கமாக சுமந்திரன் அறிவித்து மூக்குடைபட்டிருக்கின்றார்.
ஹக்கீம் மட்டுமல்ல மலையக அரசியல் கட்சிகளும் இந்த ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆனால் மலை நாட்டில் எந்த ஒரு பெட்டிக் கடைகூட அங்கு மூடப்படவிலை.
தமக்கு இந்த அரசில் அமைச்சுப் பதவிகளோ துணை அமைச்சுக்களே கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற மன வேதனையில்தான் இவர்கள் அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் இறங்கி இருக்கின்றார்கள்.
அரச தரப்பினர் மற்றுமல்ல சராசரி தமிழ் மக்களும் இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இது முற்றும் முழுதாக சுமந்திரனின் நாடகம் என்று பலர் பகிரங்கிமாகப் பேசி இருந்தனர்.
அதிகாலையில் கடைகளை மூடி இருக்கின்ற நேரத்தில் சுமந்திரனுக்கு ஆதரவான சில சமூக ஊடகங்கள் போட்டோ எடுத்து ஹர்த்தல் வெற்றி என்று கதை சொல்லி இருந்ததும் ஒரு நகைச்சுவையாகத்தான் பார்க்கமுடிந்தது.
தமிழரசுக் கட்சி இப்போது ராஜபக்ஸாக்களின் அரசியல் கொள்கையைப் பின்பற்றி வருவதாக கூறும் சுமந்தரன் மொட்டுக் கட்சியைப்போல தமிழரசுக் கட்சியும் செலூன் கதவுவையே வைத்திருக்கின்றது. விரும்பியவர்கள் உள்ளே வரலாம் வெளியே போகலாம் என்று சொல்லி இருக்கின்றார் சுமந்திரன்.
இது கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பா என்று நாம் அந்தக் கட்சியிடம் குறிப்பாக சிரிதரனிடம் கேள்வி எழுப்புகின்ற அதே நேரம் இப்படியான ஒரு கட்சியை எப்படித் தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஆதரிக்க முடியும்?
இப்படியான அரசியல் தலைமைகளை நம்பி தமிழர்கள் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்.? உலகிற்கே தியாகத்துக்கு முன்னுதரமாக இருந்த ஒரு இனத்தில் இப்படியும் ஒரு செலூன் கதவு அரசியல் கட்சியா என்றுதான் கோட்கத் தோன்றுகின்றது.