ஹரியான வன்முறை தொடங்கியது எப்படி? தற்போதைய நிலை என்ன?

ஹரியாணாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமில் ஒரு மசூதிக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியும் தப்ப முடியாது என்று முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் மேவாத் பகுதியில் துணை ராணுவமும் ஐ.ஆர்.பி.யின் நிரந்திர பட்டாலியனும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரியாணா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார்.

ஹரியாணா வன்முறை

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த வன்முறைக்கு காரணம் என்ன? உயிரிழந்தவர்கள் யார்?

ஹரியாணா வன்முறை

வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேவாத் வன்முறை ஏற்பட்டது எப்படி?

மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை பேரணி ஒன்றுக்கு விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பேரணிக்கு முன்பாக விஎச்பி மற்றும் பஜ்ரங்தளத்துடன் தொடர்புடைய சிலர் சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் வகையில் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

இஸ்லாமிய இளைஞர்களான நசீர் மற்றும் ஜுனைட் கொலையில் முக்கிய குற்றவாளியான மோனு மானேசர் இந்த மத பேரணியில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகின. இது நூஹ் மக்களைக் கோபப்படுத்தியது. எனினும் விஎச்பி கேட்டுக்கொண்ட பிறகு தான் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று மோனு மனேசர் பிடிஐ செய்தி முகமையிடம் கூறினார்.

காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கானோருடன் பேரணி தொடங்கிய நிலையில், 12 மணியளவில் பேரணியில் போக்கு மாறத் தொடங்கியது. ஆத்திரமூட்டும் வகையிலான கோஷங்கள் பேரணியின்போது எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நடந்தது.

வன்முறை கும்பல் காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றதாக நூஹ்வின் சைபர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனியார் ஊடகத்திடம் கூறினார். வன்முறையை திங்கட்கிழமை மாலை, நூஹ் நிர்வாகம் ஆகஸ்ட் 2 வரை இணையத்தை தடை செய்தது.

ஹரியாணா வன்முறை

வன்முறையால் உயிரிழந்த அபிஷேக்

மேவாத் வன்முறை – உள்ளூர்வாசிகள் சொல்வது என்ன?

நூஹ் பகுதியைச் சேர்ந்த முஸ்தஃபா கான் பேசும்போது, “பேரணியின்போது மோனு மானேசர் ஜிந்தாபாத் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையெடுத்து வன்முறை ஏற்பட்டது. பேரணிக்கு வருவதாக மூன்று நாட்களுக்கு முன்பே மோனு மானேசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவும் மக்களை ஆத்திரப்படுத்தியது. அவர் இங்கு வருவதை மக்கள் விரும்பவில்லை ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இதுமட்டுமல்லாமல் பஜ்ரங்கி என்ற ஒருவர், உங்களின் மச்சான் வந்துகொண்டு இருக்கிறார் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுவும் மக்களை கோபப்படுத்தியது. கடந்த ஆண்டும் பேரணி நடைபெற்றது. ஆனால் வன்முறை நிகழவில்லை. இந்த முறை மோனுவும் சிலரும் வீடியோ வெளியிட்டு நிலைமையை மோசமாக்கினர். இது தொடர்பாக அரசுக்கு முன்பே தெரிவித்தோம். ஆனால் அவர்கள் துரிதமாக செயல்படவில்லை. ” என்றார்.

குருகிராம் பகுதிக்கு வன்முறை பரவியது எப்படி?

மேவாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அன்றைய தினமே குருகிராம் பகுதிக்கும் பரவியது. குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. “இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்,” என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார்.

குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. நுஹ், குருகிராம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹரியாணா வன்முறை

இமாம் முகமது சாத்

உயிரிழந்தவர்கள் யார்?

நூஹில் தொடங்கிய வகுப்புவாத வன்முறைக்கு இரு சமூகத்தினரும் பலியாகிவிட்டனர். நூஹ்வில் நடந்த வன்முறையின் போது, பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய ஒரு இளைஞரும் பலியானார். அபிஷேக் என்ற அந்த நபர் பானிபட்டை சேர்ந்தவர். தனது உறவினருடன் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளார். 22 வயதான அபிஷேக் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக அவரது வந்த உறவினர் மகேஷ் பிபிசியிடம் கூறினார்.

“ அபிஷேக்கிற்கு 22 வயதுதான் ஆகிறது. அவருக்கு ஒரு அண்ணன், திருமணமான சகோதரி, தினக்கூலியான் தந்தை ஆகியோர் உள்ளனர். அவர்தான் குடும்பத்தை கவனித்து வந்தார் ” என்கிறார் மகேஷ்.

குருகிராமில் வன்முறையால் பலியான இமாம் முகமது சாத்தின் மூத்த சகோதரர் ஷதாப் அன்வர் பிபிசியிடம் பேசும்போது, “ என் சகோதரரின் முகத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் இப்போது சவக்கிடங்கில் இருக்கிறோம். கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே. நாங்கள் பிகாரை சேர்ந்தவர்கள். என் சகோதர் பிகார் திரும்புவதற்கு டிக்கெட் எல்லாம் எடுத்துவைத்திருந்தார். தற்போது நிலைமை சரியில்லை, மசூதியை விட்டு வெளியே வர வேண்டாம் என்று என் சகோதரரிடம் கூறினேன். அதுதான் நான் அவரிடம் பேசிய கடைசி வார்த்தை. ” என்றார்.

ஹரியாணா வன்முறை

மோனு மானேசர்

யார் இந்த மோனு மானேசர்?

இந்த வன்முறையின் பிரதானமாக பார்க்கப்படும் பெயர் மோனு மானேசர். ஹரியாணாவில் மோனு பிரபலமானவர். இதற்கு முன் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த கொலைகளில் இவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

மோனு மானேசர் ஹரியாணா அரசின் பசு பாதுகாப்பு பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். 28 வயதான மோனு மானேசர், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ளார். ஹரியாணா மாநிலம் மானேசரில் வசிக்கும் மோனுவுக்கு வீட்டு வாடகையே பிரதான வருமானம்.

ஹரியாணா பஜ்ரங் தளம் அமைப்பின் பசுப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலத் தலைவர் என்று தன்னை கூறிக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஜுனத் நசிர் ஆகிய இருவரின் உடல்கள் பிப்ரவரி மாதம் ஹரியாணாவில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக மோனு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரைத் தேடி வருவதாக ஹரியாணா போலீசார் தெரிவித்தனர். இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை.

பேரணிக்கு இரண்டு நாட்கள் முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த மோனு மானேசர், பேரணியில் மக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் தானும் பேரணியில் பங்கேற்பதாகவும் கூறியிருந்தார். அவரது பங்கேற்கு காரணமாக மக்கள் கோபம் அடைந்ததாக பல ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு கேட்டுக்கொண்டதால் தான் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று மோனு பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

ஹரியாணா வன்முறை

இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பாஜக தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஹரியாணா வன்முறை திடீரெனத் தொடங்கியதா?

ஹரியாணாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.

ஹரியாணா அரசுத் தரப்பில் கூறப்படுவது என்ன?

இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பாஜக தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதேநேரம், குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஹரியாணாவில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று ஹரியாணா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா கூறியுள்ளார்.

“சுதந்திரத்துக்கு முன்பும் சரி பின்பும்சரி எப்போதும் இந்த நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமையுடன் இப்பகுதி உள்ளது. முகலாயர்கள் தாக்கியபோதும் மேவாத் பகுதி மக்கள் அன்றைய இந்திய மன்னர்களை ஆதரித்தனர். ” என்றார்.

மேலும், “ மத ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் முழு நிகழ்ச்சி நிரலையும் தெரிவிக்கவில்லை. எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்றும் கூறவில்லை. இந்த தகவல் இல்லாததால் வன்முறை கையை மீறி போய்விட்டது. பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும் ” என்றார்.

40க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த துஷ்யந்த் சௌதாலா, தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைவரும் அமைதியை பேணுவார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்

Previous Story

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் குழப்பத்தில் அதிகாரிகள்

Next Story

ஹம்தியின் மரணம் - நீதவான்  அதிரடிக் கேள்விகள்