ஹம்தியின் மரணம் – நீதவான்  அதிரடிக் கேள்விகள்

-அஸீஸ் நிஸாருத்தீன்-

சத்திர சிகிச்சையின் போது தனது இரண்டு கிட்னிகளையும் இழந்து பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (2) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

சட்ட வைத்திய அதிகாரி Judicial Medical Officer (JMO)  எம்.என். ரூஹுல் ஹக் வழங்கியிருந்த ஹம்தியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் அடங்கியுள்ள முன்னுக்குப் பின் முரணான தகவல்களை மேலதிக நீதவான் திருமதி ரஜிந்ரா ஜயசூரிய கேள்விக்குட்படுத்தினார்.

பிறவியிலே ஹம்திக்கு ஒரு கிட்னியே இருந்ததாகவும், அதனையே மருத்துவர்கள் நீக்கியிருப்பதாகவும் ரூஹுல் ஹக் தனது பிரேத பரிசோதனை அறிக்கையில் (Post Mortem Report) குறிப்பிட்டுள்ளார்.உண்மைக்கு புறம்பான இந்த அறிக்கையை கேள்விக்குட்படுத்திய நீதிபதி குழந்தை அப்படி ஒரு கிட்னியுடன் பிறந்திருந்தால், அந்த ஒரே கிட்னியை குழந்தையின் உடலிலிருந்து அகற்றுவதற்கு மருத்துவர்கள் ஏன் முடிவெடுத்தார்கள்?

மருத்துவர்கள் எடுத்த இந்த முடிவில் விஞ்ஞானம் இருக்கிறதா? அல்லது அஞ்ஞானம் இருக்கிறதா என்ற தொனியில் கேள்வி எழுப்பினார். சத்திர சிகிச்சைக்கு முன்னர் வழங்கப்பட்ட ஹம்தியின் அனைத்து மருத்துவ அறிக்கைகளும் அவனுக்கு இரண்டு கிட்னிகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அவனது CT மற்றும் ஏனைய ஸ்கேன்களின் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள் அனைத்திலும் இரண்டு கிட்னிகளின் செயற்பாடு பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இடது பக்க கிட்னி செயலிழந்துள்ளதாகவும், அதன் செயற்பாடு 9 விகிதம் என்றும் அவனது ஆரோக்கியமான வலது பக்க கிட்னி நல்ல முறையில் இருப்பதாகவும், அது 91 விகிதம் இயங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்தியின் வலது பக்க கிட்னியும் அகற்றப்பட்ட விவகாரம் சத்திர சிகிச்சை இடம்பெற்று மூன்று தினங்களுக்குப் பின்னரே அவரின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அதுவும் அவன் சத்திரசிகிச்சையின் பின்னர் சிகிச்சைப் பெற்று வந்த வார்டின் மருத்துவரே, ஹம்திக்கு மூன்று தினங்களாக  சிறுநீர் வெளியேறவில்லை என்ற பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அதனைக் கண்டுபிடிக்கிறார்.

அதுவரையிலும் ஹம்திக்கு சத்திர சிகிச்சை நடாத்திய நவீன் விஜேகோன் உள்ளிட்ட மருத்துவர்கள் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளனர்.சத்திர சிகிச்சையின் பின்னர் ஹம்தியை வந்து பார்ப்பதை நவீன் விஜயகோன் உள்ளிட்ட குறித்த மருத்துவர்கள் தவிர்த்தே வந்துள்ளனர்.

ஹம்திக்கு இரண்டு கிட்னிகளும் இல்லை என்ற தகவல் அம்பலத்திற்கு வந்ததன் பின்னரே, அவர்கள் ஹம்தியின் பெற்றோரை சந்தித்து ஹம்தியின் இரண்டு கிட்னிகளும் தவறுதலாக அகற்றப்பட்டதாக  ஒப்புக்கொண்டுள்ளனர்.

அப்போது  ஹம்தியின் பெற்றோர் அகற்றப்பட்ட கிட்னிகளை தமக்கு காட்டுமாறு வேண்டியுள்ள போதிலும்,   அவர்களால் இன்று வரை காட்ட முடியாமல் போயுள்ளது.

ஆனால் பழுதடைந்த இடது பக்க கிட்னியை மட்டும் அவர்கள் histopathology என்ற மருத்துவ பரிசோதனைக்கு  அனுப்பியுள்ளனர். அதற்கான ஆதாரம் pathology அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

என்ற போதிலும்,  ஆரோக்கியமான நிலையில் இருந்த ஹம்தியின்  வலது பக்க கிட்னிக்கு என்ன நடந்தது? என்பது  சம்பந்தமாக எவ்வித தகவல்களும் மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் ஹம்தியின் இரண்டு கிட்னிகளும் ஒன்றொடொன்று இணைந்திருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.  பணிப்பாளரின் இந்தக் கதை போலியானதும் ஹம்தியின் மருத்துவ பரிசோதனைகளில் இல்லாத இட்டுக் கட்டப்பட்ட ஒரு கதையாகும்.

ஹம்தியின் இரண்டு கிட்னிகளும் ஒன்றோடொன்று ஒட்டியிருந்ததற்கான (Horseshoe Kidney) எந்த தகவல்களும் ஏற்கனவே பெறப்பட்ட பரிசோதனை அறிக்கைகளில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இந்த உண்மை நிலையையும், இதன் பின்னாலுள்ள இருட்டடிப்புகளையும், மர்மங்களையும் அறியாத பலர் இந்த மருத்துவர்களுக்கு அதரவாக கருத்து தொிவித்து வருகின்றனர்.

ஹம்தி என்ற இந்த சின்னஞ் சிறுவன் எதிர்கொண்ட இந்த துர்ப்பாக்கிய நிகழ்வுக்கு முழு மருத்துவ சமூகத்தையும் நாங்கள் குறைகாண முடியாது. நல்ல மனிதநேயம் உள்ள மருத்துவர்கள் நூற்றுக்கு தொன்னூறு விகிதம் இருக்கின்றார்கள்.

ஏனைய பத்து விகிதத்தில், புனிதமான மருத்துவ சேவையைப் பயன்படுத்தி பாதாள உலக பாணியில் மக்களிடம் பணத்தை கொள்ளையிடும்  மனித மிருகங்களும், பிணந்தின்னிக் கழுகுகளும் இவர்களிடையே இருக்கவே செய்கின்றன.

இதை இந்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கின்றார்கள்.

Previous Story

ஹரியான வன்முறை தொடங்கியது எப்படி? தற்போதைய நிலை என்ன?

Next Story

தத்தளிக்கும் பெஜ்யிங்: சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை