காசாவில் மீண்டும் வெடித்த போர்..!
உயிரை காப்பாற்ற ஓடும் மக்கள் !
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் செயல்படவில்லை எனக்கூறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்திய நிலையில் காசா அரசின் ஹமாஸ் தலைவர், அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரல் உள்பட 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, உயிரை காப்பாற்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுகின்றனர்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி என்பது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஹமாஸ் அமைப்பினர் தான் ஆட்சி புரிந்து வருகின்றனர். ஹமாசுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. இது 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போராட்டம் வெடித்தது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் 15 மாதம் போர் புரிந்தனர். அதன்பிறகு கடந்த ஜனவரியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இந்த போர் என்பது நிறுத்தப்பட்டது.
இதனால் காசா மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்து கொண்டே தான் இருந்தது. இப்படியான சூழலில் தான் இன்று காசா மீது இஸ்ரேல் அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. காசாவின் 12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் விமானங்கள் குண்டுகளை வீசின. காசாவில் உள்ள டேர் அல் பாலா, கான் யூனிஸ், ராஃபா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான மக்கள் இறந்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதால் குழந்தைகள், பெரியவர்கள் என்று பொதுமக்களும் கொத்து கொத்தாக பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி காசாவில் செயல்பட்டு வரும்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இசாம் அல் தல்லிஸ்,
உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகத்தின் தலைவர் மகுத் அபு வாட்ஃபா,
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரியான டைரக்டர் ஜெனரல் பஜாத் அபு சுல்தான்
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ஜியோனிஸ்ட் விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான சூழல் அங்கு இல்லை. மருத்துவமனையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மருந்து, மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதையடுத்து காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடத்தில் இருந்து ஹமாஸுக்கு எதிரான ராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது கடந்த ஜனவரியில் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்த்ததின்படி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.
அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் இருந்து பிடித்து செல்லப்பபட்ட பணயக்கைதிளை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த நாடு விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனை முறையாக செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்னும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் 59 பேர் ஹமாஸ் வசம் உள்ளனர்.
அவர்களை விடுவிக்க ஹமாஸ் மறுத்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரிக்கை கொடுத்து இருந்தார். கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் ஹமாஸ் செவிசாய்க்காவில்லை.