(தகவல்: யும்னா என் அம்ரா)
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை அலறவிட்ட கேப் வெர்டே நாட்டின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹாவின் தாய்க்கு, அமெரிக்க அரசு அவசர விசா வழங்கி நெகிழ்ச்சியான உதவிகளைச் செய்துள்ளது.

உலகக் கோப்பையில் தனது அறிமுக ஆட்டத்திலேயே ஸ்பெயினுக்கு எதிராக 7 கடினமான கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி, போட்டி 0-0 என டிரா ஆக வோசின்ஹா உதவினார். இதனால் உலகளவில் கவனம் ஈர்த்த அவர், போட்டி முடிந்த பிறகு, தனது வரலாற்றுப் பெருமையைக் காண தனது தாய் அனா கேண்டிடா எவோரா மைதானத்தில் இல்லையே என்று கண்ணீர் வடித்தார்.

(தாய் மனைவி குழந்தைகள்)
விசா பெறுவதில் ஏற்பட்ட கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சரியான பாஸ்போர்ட் இல்லாததால் அவரது தாயால் அமெரிக்கா வர முடியவில்லை. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பேசி வோசின்ஹாவின் தாய்க்கு உடனடியாக விசா வழங்கக் கேட்டுக்கொண்டார்.
“தன் மகன் வரலாறு படைப்பதைக் காணும் வாய்ப்பை எந்த ஒரு தாயும் இழக்கக் கூடாது” என்று ஜெப்ரிஸ் உருக்கமாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது விசாவுக்கான அனைத்து கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டு, நேற்று (புதன்கிழமை) அவசர விசா வழங்கப்பட்டது. மேலும், அவர் ஞாயிற்றுக்கிழமை மியாமியில் நடக்கும் உருகுவேவுக்கு எதிரான 2வது லீக் ஆட்டத்தைக் காணத் தேவையான அனைத்து பயண ஏற்பாடுகளையும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்துள்ளது.

கேப் வெர்டே நாட்டின் தலைநகரான பிரையாவில் உள்ள அமெரிக்க விசா குழுவினர், அவரது தாயை நேரில் சந்தித்து விசா நடைமுறைகளை விரைந்து முடித்தனர்.அந்த நாட்டில் மக்கள் தொகை வெறும் ஐந்து இலட்சம் மட்டுமே.
40 வயதில் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் வோசின்ஹா, வரும் ஞாயிற்றுக்கிழமை உருகுவேவுக்கு எதிராக விளையாடும் போது, அவரது தாய் மைதானத்தில் இருந்து ஆதரவளிக்க உள்ளார் என்பது இந்த உலகக் கோப்பை தொடரின் மிக நெகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது.



