ஷேக் ஹசீனா திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தஞ்சம்!

வங்கதேசத்தில் மாணவர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனையடுத்து வங்கதேச நாட்டை விட்டு தமது சகோதரி ரெஹானாவுடன் ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார்.
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது

Bangladesh Sheikh Hasina

வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்தை ஷேக் ஹசீனா அரசால் முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் ராணுவம் தலையிட்டது.

ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால் அவர் தமது பதவியில் இருந்து விலகினார். மேலும் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் டாக்கா இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடத் தொடங்கினர். இதனால் வேறு வழியே இல்லாமல் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார்.

வங்கதேசத்தை விட்டு தப்பிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை

ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் வங்கதேசத்தை உருவாக்கியவர். வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்பட்டவர். ஆனால் வங்கதேசம் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். தற்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Previous Story

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!  இடைக்கால அரசு - ராணுவ தளபதி

Next Story

அனுர கட்டுப்பணம் செலுத்தினார் ~